தமிழ்மக்களை இராணுவம் அழிக்கவில்லையாம்…??

Col-Vasanthanஇறுதிக்கட்டப் போரின் போது, தமிழ்மக்களை அழிக்கும் கண்மூடித்தனமான தாக்குதல்களை சிறிலங்கா படையினர் மேற்கொள்ளவில்லை என்று சிறிலங்காவின் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில், நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

“சிறிலங்கா மீதான அனைத்துலக விசாரணைகள் என்ற கருத்து முன்வைக்கப்பட முன்னர், ஆரம்பத்தில் இருந்தே உள்ளக விசாரணைகளுக்குத் தான் அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டது.

நம்பகமாக உள்ளக விசாரணைகளைஅனைத்துலக தரப்பினர் ஆரம்பத்தில் இருந்தே தெரிவித்து வந்தனர். அதற்கான நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்கத் தவறியமையே அனைத்துலக விசாரணை என்ற பதம் உருவாக காரணமாக அமைந்தது.

இன்று மீண்டும் எமது உள்ளக விசாரணைகள் மீது அனைத்துலக தரப்பினர் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

அதேவேளை, அனைத்துலக பரிந்துரைகள் தொடர்பாக நாம் கவனத்தில்கொண்டு செயற்பட வேண்டிய தேவையும் உள்ளது.

உண்மையில் இறுதிக்கட்டப் போரில் தவறுகள் இடம்பெற்றிருந்தால் உண்மையான குற்றவாளிகள் யார் என இனம்கண்டு அவர்கள் தொடர்பாக மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதை எம்மால் தடுக்க முடியாது.

இந்த விசாரணைகளை மேற்கொள்ள அனைத்துலக நீதிமன்றம் தேவையில்லை என சிறிலங்கா அதிபர் தெரிவித்துள்ளார். ஆனால் அனைத்துலக விசாரணை என்பது புதிய விடயம் அல்ல.

முன்னைய ஆட்சியின்போது பகவதி என்ற இந்திய நிபுணர் தலைமையிலான நிபுணர் குழுவை கொண்டுவந்தோம். அதில் தருஸ்மன் குழுவும் இணைந்து கொண்டது. டெஸ்மன்ட் சில்வா குழுவையும் மகிந்த ராஜபக்ச வரவழைத்து பரணகம குழுவுடன் இணைத்துக் கொண்டார். அவ்வாறு சில முறைமைகளை கையாண்டோம்.

ஆனால் அந்த முயற்சிகளில் எமக்கு எதிர்பார்த்த சாதகத்தன்மைகள் கிடைக்கவில்லை. அரசியலமைப்பை மீறிய வகையில் எம்மால் ஒருபோதும் செயற்பட முடியாது.

இப்போது நாம் அனைத்துலக கருத்துகளில் சிக்கிக்கொள்ளாது உள்ளக பொறிமுறைகள் மூலமாக சுயாதீனமாக குற்றங்களை கண்டறியும் பொறிமுறையை நடைமுறைப்படுத்தி காட்டவேண்டும்.

இறுதிப்போரில் எமது இராணுவம் மனித உரிமை மீறல்களை மேற்கொள்ளவில்லை. இது எமக்கு நன்றாகவே தெரியும். பொதுமக்களை இலக்கு வைத்து எமது இராணுவம் செயற்படவில்லை.அதனால்தான் பத்தாயிரம் இராணுவத்தினரை நாம் இழக்க நேர்ந்தது.

ஒட்டுமொத்தமாக வடக்கை கட்டுப்படுத்த வேண்டும் என நினைத்திருந்தால் இரண்டு நாட்களில் போரை முடித்திருக்க முடியும். அவ்வாறு நாம் செயற்படவில்லை.

இராணுவத்துக்கு தலைமைதாங்கும் எவரேனும் தமது தனிப்பட்ட அதிகாரத்தில் தமக்கான ஒரு குழுவை அமைத்துக் கொண்டு தமிழ் மக்களை அழித்திருந்தால் அதை கண்டறிந்து அவர்களை தண்டிக்க வேண்டியது எமது கடமை.

ஜனநாயகத்தை பலப்படுத்துவதில் இதுவும் முக்கியமான ஒன்று. அந்த வேலைத்திட்டம் நடைபெற்று வருகிறது.

சட்டத்திற்கு முரணாக எவரேனும் செயற்பட்டிருந்தால் அவர்களுக்கு எதிராக சட்ட முறைப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவே நல்லிணக்கத்தை ஏற்படுத்த மிகச்சரியான வழிமுறையாக இருக்கும்.

அனைத்துலக உதவிகள் தேவைப்படுவது வேறு விடயம். ஆனால் உண்மைகளை கண்டறியவேண்டியது அவசியம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Previous articleயோஷிதவின் பிணை விவகாரம்: மார்ச் 14இல் இறுதி முடிவு!
Next articleபாகிஸ்தான் ஜனாதிாதி இலங்கைக்கு திடீர் பயணம்