பாகிஸ்தான் அதிபர் மம்நூன் ஹுசேன் சிறிலங்காவுக்கு திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டு இன்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
குறுகிய நேரப் பயணமாகவே இவர் சிறிலங்கா வந்திருப்பதாகவும், அவரது பயணம் அதிகாரபூர்வமானது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பயணத்தின் போது, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் பாகிஸ்தான் அதிபர் மம்நூன் ஹுசேன் பேச்சு நடத்த திட்டமிட்டுள்ளார்.
பாகிஸ்தான் அதிபரின் இந்தப் பயணம் முன்னரே திட்டமிட்ட ஒன்று அல்ல. எனினும், இந்த திடீர் பயணத்தின் நோக்கம் என்ன என்பது பற்றிய தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
சிறிலங்கா அதிபரைச் சந்தித்தார் பாகிஸ்தான் அதிபர்
சிறிலங்காவுக்கு குறுகிய காலப் பயணம் ஒன்றை மேற்கொண்ட பாகிஸ்தான் அதிபர் மம்நூன் ஹுசெய்ன், நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நேற்றுமாலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இந்தோனேசியப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பும் வழியிலேயே பாகிஸ்தான் அதிபர் நேற்று பிற்பல் திடீரென சிறிலங்கா வந்தார்.
இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்று விட்டுத் திரும்பும் வழியில் அவர் சிறிலங்காவுக்குத் திடீர் பயணம் மேற்கொண்டதற்கான காரணம் அறிவிக்கப்படவில்லை.
எனினும், இருநாடுகளின் தலைவர்களும் வழக்கமான விவகாரங்கள் குறித்து கலந்துரையாடியதாக சிறிலங்கா அதிபர் செயலகம் தெரிவித்துள்ளது.