யோசிதவுக்கு எதிரான மின்னஞ்சல் ஆதாரங்கள் வெளிநாட்டில் அழிப்பு

Yosithaயோசித ராஜபக்சவுக்கு எதிரான நிதி மோசடிக் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களாக கருதப்படும்,மின்னஞ்சல்கள் பலவும் திட்டமிட்டு ஒரு குழுவினராலோ, தனிநபராலோ அழிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிஎஸ்என் தொலைக்காட்சி நிறுவனத்தின் மூலம் நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி கைது செய்யப்பட்ட மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் யோசித ராஜபக்சவுக்கு எதிராக, முக்கிய ஆதாரங்களாக மின்னஞ்சல்களே இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

யோசித ராஜபக்ச சிஎஸ்என் தொலைக்காட்சியின் தலைவராக இருக்கவில்லை என்றும், அவரது நண்பர்களின் நிறுவனத்துக்கு அவ்வப்போது ஆலோசனைகளையே வழங்கி வந்தார் என்றும் மகிந்த ராஜபக்ச தரப்பினர் கூறிவருகின்றனர்.

ஆனால், யோசித ராஜபக்ச இந்த நிறுவனத்தின் தலைவராகச் செயற்பட்டார் என்றும், நிறுவனம் மேற்கொண்ட வர்த்தக நடவடிக்கைகளில் அவர் தொடர்புபட்டிருப்பதை காட்டும் நான்காயிரத்துக்கும் அதிகமான மின்னஞ்சல்கள் ஆதாரமாக உள்ளது என்றும் குற்றப் புலனாய்வுத்துறையினர் கூறியிருந்தனர்.

நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் யோசித ராஜபக்சவின் மின்னஞ்சல்கள் அடங்கிய இறுவட்டு ஒன்று கைப்பற்றப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், யோசிதவுடனான தொடர்புகள் அடங்கிய மின்னஞ்சல்கள் வெளிநாட்டில் இருந்து அழிக்கப்பட்டுள்ளதாக, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்றுக் காலை அரச சட்டவாளருக்கு அறிவித்துள்ளனர்.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று நடந்த யோசித ராஜபக்சவின் பிணை மனு மீதான விசாரணையின் போது, அரசசட்டவாளர் இந்த தகவலை வெளியிட்டார்.

யோசிதவுக்கு எதிரான விசாரணையில் தொடர்ச்சியாக சவால்கள் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Previous articleபயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 158 பேர் தடுத்து வைப்பு – அமைச்சர் தகவல்
Next articleபிரபாகரனை மீட்க நோர்வே – அமெரிக்கா கூட்டு முயற்சி! அம்பலப்படுத்திய கோத்தபாய