பிரணாப் முகர்ஜியின் அதிரடி முடிவினால் இந்தியப் பயணத்தை கைவிட்டார் மைத்திரி

ms-delhi-2 (1)சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன புதுடெல்லிக்கு மேற்கொள்ளவிருந்த பயணம், இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் திடீர் முடிவினால் கைவிடப்பட்டுள்ளதாக, புதுடெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாழும் கலை அமைப்பு புதுடெல்லியில் ஏற்பாடு செய்துள்ள உலக கலாசார விழாவில், பங்கேற்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, நேபாள அதிபர் பிஜந்தியா தேவி பண்டாரி, சிம்பாப்வே அதிபர் ரோபேர்ட் முகாபே, ஆப்கானிஸ்தான் பிரதம நிறைவேற்று அதிகாரி அப்துல்லா அப்துல்லா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இன்று தொடக்கம் 13ஆம் நாள் வரை நடைபெறவிருக்கும் இந்த நிகழ்வில் இவர்கள் பங்கேற்பதை உறுதிப்படுத்தியிருந்தனர். இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் இந்த நிகழ்வில் பங்கேற்கவிருந்தார்.

ஆனால், இந்த நிகழ்வுக்காக மரங்கள் அழிக்கப்பட்டதாக தொடரப்பட்ட குற்றச்சாட்டு மற்றும் நீதிமன்ற தலையீடுகளை அடுத்து, இந்த நிகழ்வில் பங்கேற்க இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மறுத்து விட்டார்.

இந்தியக்குடியரசுத் தலைவர் நிகழ்வில் பங்கேற்க மறுத்தால், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட நான்கு வெளிநாட்டுத் தலைவர்களும் இராஜதந்திர நெறிமுறைகளைக் கருத்தில் கொண்டு, இந்த நிகழ்வில் இருந்து விலகியுள்ளனர்.

இதனால் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தனது புதுடெல்லிப் பயணத்தை கைவிட்டுள்ளார்.

சிப்பாப்வே அதிபர் முகாபே இந்த நிகழ்வில் பற்கேற்பதற்காக கடந்த செவ்வாய்க்கிழமையே புதுடெல்லி சென்றிருந்த போதும், நிகழ்வில் பங்கேற்காமல் இன்று நாடு திரும்புகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleபிரபாகரன் மரணிக்கவில்லை: பொன்சேகா
Next articleசம்பந்தன் இந்தியாவிற்கு விஜயம் ; தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்கிறார்