டி20 உலகக்கிண்ணத் தொடரில் தனது பழைய திட்டத்தையே தொடர்ந்து செயல்படுத்தப் போவதாக இலங்கை வீரர் தினேஷ் சந்திமால் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கிண்ணத் தொடரில் பங்கேற்கும் மேத்யூஸ் தலைமையிலான இலங்கை அணி இந்தியாவுக்கு பயணமாகியுள்ளது.
ஆனால் நடப்பு சாம்பியனாக களமிறங்கும் இலங்கை அணியின் நிலைமை மோசமாக உள்ளது.
பல அணிகளும் வலுவாக உள்ள நிலையில், அந்த அணிகளை இலங்கை எப்படி சமாளிக்கப் போகிறது என்று ரசிகர்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் டி20 உலகக்கிண்ணப் போட்டியில் பழைய திட்டத்துடனே களமிறங்கி அதிரடி காட்டவிருப்பதாக தினேஷ் சந்திமால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “நான் இலங்கை அணிக்கு வந்த போது சிறப்பாகவே செயல்பட்டேன். ஆனால் திடீரென்று எனது துடுப்பாட்டத்தில் பல மாற்றங்களை செய்தேன். ஆனால் அது எனக்கு பொருத்தமாக இல்லை.
இதனால் துடுப்பெடுத்தாடும் போது மீண்டும் பழைய திட்டத்தையே தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று நினைப்பேன்” என்று கூறியுள்ளார்.
மேலும், சங்கக்காரா, ஜெயவர்த்தனே ஆகியோரின் ஓய்வு அணிக்கு பெரிய இழப்பு என்று கூறிய சந்திமால், அதேசமயம் அவர்கள் இல்லாதது அணியை எந்தவிதத்திலும் பாதிக்காது என்று தெரிவித்துள்ளார்.