சரத் பொன்சேகாவின் கருத்து உண்மைகளை புட்டு வைக்கும் வாக்குமூலம்: மனோ கணேசன்

downloadஅமைச்சர் சரத் பொன்சேகாவின் இன்றைய கருத்து பகிர்வுகள் ஒரு ஆரம்பம் மட்டும்தான். இதன் தொடர்ச்சியாக பல்வேறு புதுப்புது உண்மைகள், திடுக்கிடும் காட்சிகள் இன்னமும் பல வரவுள்ளன என நான் நினைக்கின்றேன்.
இது ஒரு சிறு கதை அல்ல, ஒரு தொடர்கதை. இதையே நாங்கள் சொன்னால் இட்டுக்கட்டிய புனைக்கதை.

அதையே அவர் சொல்லும்போது அது உண்மைகளை புட்டு, புட்டு வைக்கும் வாக்குமூலம் என்பதை உலகம் புரிந்துகொள்ளும் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு புனித அந்தோனியார் ஆண்கள் கல்லூரி விளையாட்டு விழாவில் கலந்துகொண்டு பெற்றோர் மத்தியில் உரையாற்றும் போதே அமைச்சர் மனோ கணேசன் இதைக்கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது,

இந்த அரசாங்கத்தை நாங்கள் உருவாக்கினோம். அதற்கான வாக்க்குபலத்தை நீங்கள் தந்தீர்கள். இந்த கொச்சிக்கடை, ஜிந்துப்பிட்டி ஆகிய பகுதிகளை என் சொந்த ஊர்களாக நான் கருதுகிறேன்.

இங்கே வாழும் மக்கள் எனது மக்கள். எனது ஆதரவாளர்கள். என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார்கள். நாங்கள் கடந்த காலங்களில் கண்டு வந்த கனவுகளை நனவாக்கும் காலம் இப்போது மலர்ந்துள்ளது.

இந்த கனவுகளில் முக்கியமானது கல்விக்கனவுகள் ஆகும். இந்த பகுதியை சேர்ந்த இந்த புனித அந்தோனியார் ஆண்கள் வித்தியாலயம், புனித அன்னம்மாள் பெண்கள் வித்தியாலயம், விவேகானந்தா கல்லூரி, மத்திய கொழும்பு இந்து கல்லூரி, கணபதி இந்து மகளிர் கல்லூரி உட்பட்ட பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட உள்நாட்டு வெளிநாட்டு நிதிவளங்கள் பயன்படுத்தப்படும்.

இந்த பொறுப்பு, உங்கள் வாக்குகளால் இன்று கொழும்பு மாவட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சரவை அமைச்சராகவும் இருக்கின்ற எனக்கு இருப்பதை நான் நன்கு உணர்ந்துளேன். நமது கொழும்பு மாவட்ட மக்கள சார்பாக இன்று பாராளுமன்றத்திலும், மாகாணசபையிலும், மாநகரசபையிலும், நகரசபையிலும் இருப்பது நமது கட்சி மட்டுமே. வெறும் ஓட்டை உடைசல்கள் நம்மை பிரதிநிதித்துவப்படுத்த முடியாது.

எங்கள் பத்து வருட போராட்ட பணிகளின் காரணமாக மகிந்த அரசு வீழ்ச்சியடையும் சூழல் உருவான பின் பலர் எங்களோடு இணைந்து இந்த அரசு உருவாக்கத்துக்கு ஒத்துழைத்தார்கள்.

இன்னமும் சிலர் மகிந்தவுடன் இருந்துவிட்டு நாங்கள் இந்த அரசை உருவாக்கிய பின் எங்களுடன் வந்து இணைந்துக்கொண்டார்கள். இன்னும் சிலர் இன்னமும் மகிந்தவுடன் குடித்தனம் செய்கிறார்கள்.

இவர்களை மக்கள் அடையாளம் கண்டுக்கொள்ள வேண்டும். இந்த அரசை உருவாக்கிய முதல் ஐந்து பேரில் நானும் ஒருவன். நாங்கள் கடந்த பத்து வருடங்களுக்கு மேல் பட்ட படும்பாட்டின் பிரதிபலன்தான் இந்த அரசாங்கம்.

இன்று இந்த அரசை உருவாக்கி, மஹிந்த கூட்டத்தை வீட்டுக்கு அனுப்பியதில் மாத்திரம் நின்று விடாமல் யுத்தம் நடத்திய இராணுவ தளபதியின் வாயின் மூலமாகவே உண்மைகளை எங்கள் அரசு வெளியே கொண்டு வருகிறது.

யுத்தத்தை தலைமை தாங்கி நடத்தியதில் தனக்கு உள்ள நியாயமான பெருமையை கோரும் அவர், அந்த யுத்தத்தின் போது தனது கட்டுப்பாட்டையும், அதிகாரத்தையும் மீறி நடந்த மானிட உரிமை மீறல்களையும், அதனால் முழு நாட்டுக்கும், முழு இராணுவத்துக்கும் ஏற்பட்டுள்ள அபகீர்த்தியையும் பற்றி மனந்திறந்து சொல்லுகிறார். உலகம் கேட்க தொடங்கியுள்ளது என்றார்.

Previous article3 மாதங்களில் திருடர்கள் வெளிப்படுத்தப்படுவார்கள்! சிறந்த சட்டத்தரணிகளை தயார்ப்படுத்துங்கள்! பிரதமர்
Next articleபிரபாகரன் உயிருடன் இருந்தாரா கொல்லப்பட்டாரா? கண்டறிய வேண்டும் என்கிறார் சமரசிங்க