நாற்றம் எடுக்கும் கொழும்பு அரசியல் பிரபாகரன் விடயத்தில் பொன்சேகா

sarath-fonsekaவெள்ளைக்கொடி விவகாரத்தில் உண்மையான விசாரணைகளை முன்னெடுத்தால் முதல் குற்றவாளியாக சரத் பொன்சேகாவே சிக்குவார் என முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

இறுதிக்கட்டப் போர் தொடர்பாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

”சரத் பொன்சேகா ஒரு நல்ல அரசியல்வாதியோ அல்லது நல்ல இராணுவத் தளபதியோ அல்ல. அவர் எந்த நிலையிலும் விலைபோகக் கூடியவர்.

அவர் பலமான நபராகவோ மக்களின் ஆதரவை பெற்றிருந்த நபராகவோ இருந்திருந்தால் கடந்த 2010ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அந்த தேர்தலில் அவர் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்.

போர் நடந்த காலகட்டத்தில் அவர் இராணுவத் தளபதியாக இருந்துள்ளார். ஆனால் போரை முன்னெடுத்துச் சென்றவர் என்று கூறுவதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது.

அவர் மட்டும் தலைமை தாங்கி போரை முடிக்கவில்லை. எமது அரசாங்கம் வழிநடத்தியது. கோத்தாபய ராஜபக்ச வழிநடத்தினார்.

மாறாக சரத் பொன்சேகாவை என்ற தனிநபரை போரின் நாயகனாகப் பார்க்கின்றதை ஒருபோதும் ஏற்க முடியாது.

சரத் பொன்சேகா நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் பொய்.

மகிந்த ராஜபக்ச மீதும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீதும் வைராக்கியத்துடனும் பழிவாங்கும் நோக்கத்துடனும் மாத்திரமே உள்ளார் என்பதை அவரது உரை காட்டுகிறது.

விடுதலைப் புலிகளைப் பலப்படுத்த ராஜபக்ச குடும்பம் பணம் கொடுத்ததாக கூறுவது முழுமையான பொய்.

பசில் ராஜபக்சவோ,கோத்தபாய ராஜபக்சவோ புலிகளுடன் நெருக்கத்தை பேணியிருந்தால் அப்போதே அவர் இதை வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.

நாட்டின் மீதும் இராணுவத்தின் மீதும் பற்று கொண்டவர் ஏன் அப்போது இந்த உண்மைகளை மறைக்க வேண்டும். அப்படியாயின் அவரும் புலிகளுக்கு உடந்தையாக செயற்பட்டிருக்க வேண்டும்.

வெள்ளைக்கொடி விவகாரத்தில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்று கூறுகிறார். இந்த விவகாரத்தில் உண்மையான விசாரணைகளை முன்னெடுத்தால் இந்த குற்றச்சாட்டில் முதல் குற்றவாளியாக சரத் பொன்சேகாவே சிக்குவார்.

அவரின் தலைமையில் இடம்பெற்ற மிகப்பெரிய குற்றம் இது என்பதை என்பதை மறந்து விட்டோ அல்லது இந்த விவகாரத்தில் அவர் மீது இருக்கும் குற்றங்களை மறைத்து விட்டோ செயற்பட பார்க்கிறனர்.

மகிந்த, கோத்தபாய ஆகியோரை பழிவாங்கும் எண்ணத்தில் அவர்களை போர்க்குற்றவாளிகள் என்று தண்டிக்கவே முயற்சிக்கிறார்.

மிகவும் மோசமான பயங்கரவாதிகளுடன் போரிடும் போதும், பல இலட்சம் தமிழ் மக்களை காப்பாற்றும் மனிதாபிமான போராட்டத்தின் போதும் ஒரு சில தவறுகள் நடைபெறும். அதை தவிர்க்க முடியாது.

இந்த கருத்தை பல்வேறு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். டெஸ்மன் டி சில்வா தனது அறிக்கையிலும் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான சிறுசிறு காரணிகளை அடிப்படையாக வைத்துக் கொண்டு மனித உரிமை மீறல்கள் நடந்தேறியது என கூறுவதை நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம்.

போர் முடிவுக்கு வந்த பின்னரும் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் உயிருடன் இருந்தார் என சரத் பொன்சேகா தெரிவித்ததும் பொய்.

பிரபாகரன் கொல்லப்பட்டது உறுதியான பின்னரும், கொல்லப்பட்டது அவர் தான் என பல தடவைகள் உறுதிப்படுத்திய பின்னருமே நாம் போர் வெற்றியை அறிவித்தோம்.

பிரபாகரன் கொல்லப்பட்ட போது சரத் பொன்சேகா அங்கு இருக்கவில்லை. நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபக்ச போர் வெற்றியை அறிவித்த பின்னரே சரத் பொன்சேகா அறிந்து கொண்டார்.

மகிந்த ராஜபக்சவையும் அவரது குடும்ப உறுப்பினர்களையும் பழிவாங்கும் ஒரே நோக்கத்தில் சரத் பொன்சேகா செயற்படுகிறார். அடிமட்ட நிலைக்கு அவர் இறங்கியுள்ளார்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Previous articleசிகிரியாவில் கூகுள் பலூன் பரி­சோ­தனை
Next articleஇராணுவப் பிடியில் இருந்து வலிகாமத்தில் 700 ஏக்கர் காணிகள் இன்று விடுவிப்பு