சிறுவனை அடித்து கோரத்தாண்டவம் ஆடிய போலீஸார்!

polices-tamilnaduகாவல்துறை உங்கள் நண்பன் என்று ஸ்டேஷனுக்கு ஸ்டேஷனுக்கு எழுதிவைத்திருக்கும் காவல்துறை இனி, ‘ஜாக்கிரதை காவல்துறை உங்கள் விரோதி’ என்று எழுதிவைத்துவிடலாம். அத்தனை கொடூர முகம் காட்டியிருக்கிறார்கள் முகேஷ் விவகாரத்தில்.

முகேஷ்……?

சென்னை துரைப்பாக்கம் அடுத்த கண்ணகி நகரைச் சேர்ந்த வின்சென்ட் -சுமதி வின்சென்ட் தம்பதியின் மகன்தான் முகேஷ். இப்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் குற்றுயிரும் குலையுமாக கிடக்கிறார். கூலித் தொழிலாளியான வின்சென்ட்டுக்கு மூன்று பிள்ளைகள். இவர்களின் இரண்டாவது மகன்தான் 17 வயதான முகேஷ். இவரை நேற்று (11.03.2016) நள்ளிரவு விசாரணை என்ற பெயரில் வீட்டிலிருந்து போலீசார் வலுக்கட்டாயமாக அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

பின்னர் இரவு ஒரு மணியளவில், பலத்த காயங்களுடன் எஸ்.ஆர்.பி. டூல்ஸ் பஸ் நிலையம் அருகேயிருந்த முட்புதர்களின் மத்தியில் முனகிக் கொண்டிருந்த முகேஷை அங்குள்ளோர் மீட்டு, அவர் வீட்டிற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

மருத்துவ சிகிச்சைக்குப் பின்னர் முகேஷ் போலீஸாரால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, உரிய விசாரணைக்கு உத்தரவிடும்படி கோரி, அவரது பெற்றோர் சென்னை போலீஸ் கமிஷனரை பார்க்கச் செல்வதாக ஒரு தகவல் இன்று மதியம் முதல் சமூக வலைதளங்களில் பரவியது.

நாம் முகேஷின் பெற்றோரை சந்தித்து சம்பவம் குறித்து கேட்டோம்.

“நாங்கள் ஏழைக் கூலித் தொழிலாளி குடும்பம். எல்லோருமே, புதுப்பேட்டையில் காயலான் கடைகளில் கூலியாக வேலை செய்கிறோம். நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் எங்கள் வீட்டு முன்பு டி.என். 22. ஜி.0711 என்கிற எண் கொண்ட வெள்ளை நிற போலீஸ் டாடா சுமோ வண்டி வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய ஆறு போலீசார், வீட்டுக்குள் நுழைந்து படுக்கையில் இருந்த எங்களுடைய இளைய மகன் முகேஷை அடித்து உதைத்தனர்.

நாங்கள், ‘எதற்காக இப்படி செய்கிறீர்கள்… அவன் என்ன தவறு செய்தான்?’ என்று கேட்டு போலீசை தடுத்தோம் ஆனால் அவர்கள் காரணம் ஏதும் சொல்லாமல், எங்களையும் தாக்கத் தொடங்கினர். தூக்கக் கலக்கத்தில் இருந்தபடியே முகேஷை மேலே தூக்கினார்கள். சத்தம் கேட்டு அந்தப் பகுதி மக்கள் திரண்டு வந்து நியாயம் கேட்டனர், ஆனால் போலீசார் அவர்களையும் மிரட்டியதால் வேறு வழியில்லாமல் பொது மக்கள் ஒதுங்கி வழி விட்டனர்.

இந்த ஏரியா போலீசார், விசாரணை என்ற பெயரில் எங்களுடைய முதல்மகனை அடிக்கடி நள்ளிரவில் பிடித்துக் கொண்டு போய் விடுவார்கள். நாங்கள் திருட்டுக் குடும்பம் அல்ல.. சாதாரண ஏழைக் குடும்பம் அவ்வளவுதான். தொடர்ந்து போலீசார் இப்படி அவனை கொண்டுபோய் விசாரணை என்று அடித்து துன்புறுத்துவார்கள். இப்போது அவனை சமூக விரோதி போலவே உலகத்துக்கு மாற்றிக் காட்டி விட்டார்கள்.

ஒருவேளை அவனைத்தான் தேடி வந்தார்களோ என்றும் சொல்ல முடியாது. ஏனென்றால், அப்போது பெரிய மகனும் வீட்டில் இருந்தான்… அவனும் போலீசார் கால்களை பிடித்துக் கொண்டு கதறினான். ” ஏதாவது வழக்கு என்றால் என்னைத்தானே இத்தனை நாள் பிடிப்பீர்கள்; இப்போது என் தம்பியை ஏன் பிடிக்கிறீர்கள், அவன் வாழ்க்கையையும் கெடுக்கப் பார்க்கிறீர்களா? அவனுக்கு 17 வயதுதான் ஆகிறது” என்று கதறினான்.

ஆனால், போலீசார் எதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அவனை அடித்து போலீஸ் வண்டியில் ஏற்றுவதிலேயே குறியாக இருந்தனர். கடைசியில், ‘அவனை எங்கே கொண்டு போகிறீர்கள் அதைச் சொல்லுங்கள்’ என்று கேட்டபோது, “மயிலாப்பூர் போலீஸ் ஸ்டேசனுக்கு வந்து பாருங்க” என்று சொல்லி விட்டுப் போய் விட்டனர். நாங்களும் அங்கே ஓடினோம். ஆனால் எங்கள் மகன் அங்கு இல்லை. அங்கு மட்டுமல்ல நான்கைந்து ஸ்டேசனுக்குப் போய்விட்டோம். எங்குமே எங்கள் மகனைக் காணவில்லை.

அப்போதுதான் வீட்டில் இருந்த எங்கள் பெரிய மகன் போன் செய்து, ‘வேளச்சேரி ரயில்வே ஸ்டேசன் பக்கம் புதரில் போட்டு விட்டு போலீசார் போய் விட்டார்களாம்… பின்னர் அதில் ஒரு நல்ல (?) போலீஸ் திரும்பி வந்து தம்பியை அதே ஜீப்பில் ஏற்றிக் கொண்டு எஸ்.ஆர்.பி.டூல்ஸ் பஸ் ஸ்டாண்ட் ஓரமாக படுக்க வைத்து விட்டுப் போயுள்ளார்.

கையில் பத்து ரூபாயைக் கொடுத்து, ‘பஸ் பிடித்து வீட்டுக்கு போய்விடு. ஆஸ்பிடலுக்கெல்லாம் போகாதே. நாங்கள் அடித்தோம் என்று வெளியே சொல்லிக் கொண்டிருக்காதே, பிறகு உனக்குத்தான் தேவையில்லாத சிக்கல் வரும். நாங்கள் தேடிக் கொண்டு வந்த திருட்டுக் குற்றவாளியே வேறு. மன்னிச்சுக்கப்பா… ஆள் சரியாகத் தெரியாமல் இருட்டில் உன்னைக் கைகாட்டி விட்டான் அந்த க்ரைம் அக்யூஸ்ட் என்று சாதாரணமாக சொல்லி விட்டுப் போயிருக்கிறார்கள்’ என்றான்.

பின்னர், ‘தம்பியை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கூட்டிக் கொண்டு போகிறோம், நீங்களும் அங்கே வந்திடுங்க’ என்று சொல்லவே அங்கே வந்தோம். மருத்துவர்களோ, சிகிச்சையை முழுமையாக கொடுக்காமல், ‘ரத்தக்காயம் இருக்கிறது, இது போலீஸ் கேஸ். நீங்க போலீசோடுதான் வரணும்’ என்று விரட்டுகிறார்கள். அடிச்சதே போலீஸ் என்கிற போது நாங்கள் எந்த போலீசிடம் போய் புகார் கொடுப்பது? அதிலும் வந்தது எல்லாமே குடிபோதையில் இருந்த போலீஸ்தான்” என்கின்றனர் கதறலுடன்.

அப்பகுதியை சேர்ந்த சிலரும் போலீஸாரின் அடாவடித்தனத்தை எரிச்சலுடன் நம்மிடம் சொன்னார்கள்.

ராயப்பேட்டை மருத்துவமனையில், இரவுப்பணியில் இருந்த தலைமைக் காவலர் காளிமுத்துதான், ‘போலீசாரை பகைத்துக் கொள்ள வேண்டாம், அப்படியே விட்டு விட்டால் உங்களுக்கு நல்லது’ என்று மிரட்டியதாக வின்சென்ட் தம்பதி கூறியதையடுத்து, நாம் காளிமுத்துவை தொடர்பு கொண்டோம்.

“அந்தப் பையனை காயத்தோடு நான் வார்டில்தான் பார்த்தேன். எந்த போலீஸ் லிமிட்டில் அவன் வீடு இருக்கிறது என்று விசாரித்து, அந்த ஏரியா போலீசுக்கும் தகவலைக் கொடுத்து விட்டேன். அவன் பெற்றோருக்கும் தகவலைக் கொடுத்தேன்.

மற்றபடி, வேறு எதுவுமே அவர்களிடம் பேசவில்லை. என்னிடம் கால் ரெக்கார்டரே இருக்கிறது. ஆமாம், என் மேல் ஏன் குற்றச்சாட்டு வைக்கிறார்கள்?” என்று நம்மையே திருப்பிக் கேட்டார்.

நாம் இது குறித்து போலீஸ் தரப்பில் பேசுவதற்காக போலீஸ் துணை கமிஷனர், துரைப்பாக்கம் போலீஸ் ஸ்டேசன் மற்றும் அதிகாரிகள் என்று தொடர்முயற்சிகளை மேற்கொண்டோம். யாரும் போனை எடுத்துப் பேசுவதாகவே தெரியவில்லை.

காவல்துறையின் இந்த கொடூர தாக்குதலை மனித உரிமை ஆணையத்திற்கும், யுனிசெஃப் அமைப்பிற்கும் கொண்டுபோக திட்டமிட்டுள்ளனர் முகேஷின் பெற்றோர்.

குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர் தேவநேயன், “உச்ச நீதிமன்ற நெறிமுறைப்படி எந்த ஒரு தனிமனிதரையும் அடிக்க காவல்துறைக்கு உரிமை கிடையாது.

சட்டப்படி ஒரு மைனர் தவறே செய்திருந்தாலும், அவர்களை குழந்தைகள் நல குழுமத்திடம்தான் ஒப்படைக்கவேண்டும் என்கிறது சட்டம். திருட்டுவழக்கில் தொடர்பு என்று விசாரித்தாலும் திருடர் என்று சொல்லக்கூடாது.

அவர்களை பிடித்தாலும் காவல் நிலையத்திடம் வைக்காமல் இளம் சிறார் நீதிக்குழுமத்திடம் விடவேண்டும். ஆனால் இந்த சம்பவத்தில் இளம் சிறார்கள் நீதி சட்டம் 2006 ஐ காவல்துறை அப்பட்டமாக மீறியிருக்கிறது என்பது தெளிவாகிறது.

இதில் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலைமுயற்சி வழக்கு பதிவுசெய்யவேண்டும். மேலும் பணிநீக்கமும் செய்யப்படவேண்டும். பாதிக்கப்பட்ட சிறாருக்கு உரிய இழப்பீட்டை அரசு நிதியிலிருந்து தராமல் குற்றவாளியான சம்பந்தப்பட்ட காவலர்களின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்து தரவேண்டும்.

கண்ணகி நகர் மற்றும் துரைப்பாக்கம் பகுதிவாசிகள் வேறிடத்திலிருந்து அரசால் இங்கு கட்டாய குடியமர்த்தப்பட்ட விளிம்பு நிலை மக்கள். அதனால்தான் போலீஸார் அவர்களிடம் அத்துமீறுகிறார்கள். என்றார்.

Previous articleசெல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் சித்தர் அற்புதம்!
Next articleகுடும்பி மலையின் முதல் பெயர் தெரியுமா….??