வடக்கு முதலமைச்சரும், மீள்குடியேற்ற அமைச்சரும் கடும் விவாதம்! அதிகாரத் தொனியில் அடக்கிய ஜனாதிபதி

வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனும் ஜனாதிபதி முன்னிலையில் மேடையில் காரசாரமாக விவாதித்துக் கொண்டனர்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன அதிகாரத் தொனியிலான வார்த்தைகளால் இருவரையும் அடக்கினார்.

இந்த சுவாரசிய சம்பவம் இன்று சனிக்கிழமை வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயக் காணி விடுவிப்பு நிகழ்வின் மேடையில் இடம்பெற்றது.

காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரியை மக்களிடம் 26 ஆண்டுகளின் பின்னர் கையளிக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை இடம்பெற்றது. இதில் மக்களுக்கு சொந்தமான 750 ஏக்கர் காணிகளும் இராணுவத்திடம் இருந்து விடுவிக்கப்பட்டது.

இந்த நிகழ்வுக்குத் தலைமை தாங்கிய முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்,

போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் அமைத்துக் கொடுக்கும் வீடுகளைப் பார்த்தோம். அது எங்கள் சுற்றாடல், காலநிலை, கலாசாரத்துக்குப் பொருத்தமானவையாக இல்லை. அத்துடன் மக்களுக்கு வழங்கப்படும் சில வசதிகள் குறிப்பாக காஸ் வசதிகளை மக்கள் தொடர்ந்தும் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ளனர்.’ எனத் தனது கருத்துக்களை காரசாரமாக முன்வைத்தார்.

முதலமைச்சரின் உரையின் பின்னர் பேசிய மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்,

குறித்த வீடுகள் காலநிலைக்கு பொருத்தமானவையாக இல்லை என முதலமைச்சர் கூறுவதை ஒத்துக் கொள்ள முடியாது. காரணம் வெளியில் இருக்கும் காலநிலையை உதாரணமாக வெப்பத்தை எடுத்துக் கொண்டால் வெளியில் வெப்பம் அதிகமாக இருக்கும் போது உள்ளே வெப்பம் மிக குறைவாக இருக்கும் வகையில் அந்த வீடுகள் அமைக்கப்படுகின்றன.

வசதிகள் குறித்து முதலமைச்சர் இங்கே கூறினார். மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் இவ்வாறான நவீனத்துவங்களை பின்பற்றியே வளர்ச்சியடைந்தன. தவிர இந்த வீடுகளை அமைக்கும் நிறுவனம் உலகளவில் தேர்ச்சி பெற்றதுடன் முன்னணி வகிக்கும் நிறுவனமாகும் எனப் பதிலளித்தார்.

இருவரையும் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைக்கப்படும் வீடுகளில் முதலமைச்சர் விக்னேஸ்வரனோ, அமைச்சர் சுவாமிநாதனோ வாழப் போவதில்லை. மக்களே வாழப்போகிறார்கள்.

எனவே அவர்களின் விருப்பம் எதுவோ அதனை நிறைவேற்றுங்கள். அதை விடுத்து இருவரும் இங்கு விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை என அதிகாரத் தோரணையில் தனது கருத்தைத் தெரிவித்தார்.

Previous articleகுடும்பி மலையின் முதல் பெயர் தெரியுமா….??
Next articleவடகொரியாவின் நீர் மூழ்கி கப்பல் ‘திடீர்’ மாயம்; மூழ்கி விட்டதா?