போர் நிறுத்தத்தை மீறி அரசின் போர்விமானத்தை புரட்சியாளர்கள் சுட்டு வீழ்த்தினர்..!!

isis-slaughter-syriaசிரியா நாட்டின் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக மக்களும், மக்கள் ஆதரவு புரட்சிப்படையினரும் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிரியா அரசுக்கு ஆதரவாக ரஷியாவும், கிளர்ச்சியாளர்களுக்கு மறைமுக ஆதரவாக சவுதி அரேபியாவும், அமெரிக்காவும் உள்ள நிலையில் அரசுக்கும் எதிர்ப்பு குழுக்களுக்கும் இடையே சமாதான பேச்சுவார்த்தை நடந்தால்தான் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வரும் என்பதால் ஐக்கிய நாடுகள் சபையின் யோசனைப்படியும், அமெரிக்காவின் தலையீட்டினாலும் இருதரப்பினருக்கும் இடையில் சமாதான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

சிரியாவில் அமைதி நிலவ நிரந்தர தீர்வை ஏற்படுத்துவது தொடர்பாக ஜெர்மனி நாட்டின் முனிச் நகரில் 17 நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் பங்கேற்ற உயர்மட்ட ஆலோசனை கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது.

கிளர்ச்சியாளர்கள் மற்றும் சிரியா அரசு அதிகாரிகள் இடையே நேரடியாக அமைதி பேச்சுவார்த்தை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஏற்படுத்துவதற்கான செயல்திட்டத்தை வடிவமைப்பது தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

அமெரிக்க, ரஷியா, ஈரான், ஜெர்மனி உள்ளிட்ட உலகின் பலமிக்க 17 நாடுகள் நடத்திய இந்த ஆலோசனை கூட்டத்தில் சிரியாவில் நிரந்தர அமைதி ஏற்பட அரசியல்ரீதியான தீர்வை முன்னெடுத்து செல்ல வசதியாக சிரியா ராணுவம் மற்றும் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு ஆதரவாக செயல்பட்டுவரும் தனிநபர் போராளி குழுக்கள் மற்றும் அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கிளர்ச்சியாளர்கள், ஹெஜ்புல்லா இயக்கப் போராளிகள் மற்றும் ரஷியா ஆதரவுப் படைகள் உள்பட அனைத்து தரப்பினரும் வெள்ளைக் கொடியை ஏந்தி போரை கைவிட வேண்டும். இருதரப்பினரும் தங்கள்வசம் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருக்கும் மக்களை விடுவிக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவுக்கு மேற்கண்ட 17 நாடுகளும் ஒருமனதாக சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், அங்கு தடைப்பட்டுள்ள மனிதநேய நிவாரண உதவிகளை உடனடியாக மேற்கொள்ளவும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. நிவாரண உதவிகள் மிக அவசரமாக தேவைப்படும் இடங்களிலும், போராளிகளால் கைப்பற்றப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கும் நிவாரண உதவிகளை அனுப்பும் பணிகள் தொடங்கின.

இதையடுத்து, அமெரிக்காவும், ரஷியாவும் சேர்ந்து உருவாக்கி கையொப்பமிட்ட தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் ஐக்கிய நாடுகள் சபையில் தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த மாதம் 26-ம் தேதி பின்னிரவு 12 மணியில் இருந்து இங்குள்ள டமாஸ்கஸ், அலெப்போ, அல் கலாசே, ஜோபர் உள்ளிட்ட முந்தைய போர்க்களப் பகுதிகள் அமைதியாக காணப்படுகின்றன

. ஜெனிவா நகரில் நாளை (திங்கட்கிழமை) நடைபெறும் இரண்டாம்சுற்று பேச்சுவார்த்தையில் நிரந்தரப் போர்நிறுத்தம் ஏற்படும் என எதிர்பார்க்கடுகிறது.

இந்நிலையில், மேற்கு சிரியாவின் ஹமா மாகாண வான்வெளியில் நேற்று பறந்த சிரியா அரசுக்கு சொந்தமான போர்விமானத்தை ஹவுத்தி படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஜைஷ் அல் நஸ்ர் என்ற புரட்சிப்படை பொறுப்பேற்றுள்ளது. தற்காலிகப் போர்நிறுத்த உடன்படிக்கையை மீறீய வகையில் அமைந்துள்ள போராளிகளின் இந்த நடவடிக்கையால் நாளைய அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Previous articleதிடீர் மின்தடை; எட்டு மணித்தியாலங்களின் பின்னர் இலங்கை ஒளிர்ந்தது!
Next articleவலி. வடக்கு மக்கள் மற்றவர்களுடைய காணிகளை கேட்கவில்லை மைத்திரி