வலி. வடக்கு மக்கள் மற்றவர்களுடைய காணிகளை கேட்கவில்லை மைத்திரி

presided1யாழ். வலிகாமம் வடக்கிலுள்ள மக்களின் காணிகளை எதிர்வரும் 3 மாதங்களில் அவர்களிடம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.

கடந்த 26 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் முடக்கப்பட்டிருந்த காங்கேசன்துறை நடேஸ்வராக்கல்லூரி நேற்று சனிக்கிழமை மாலை மக்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

மக்களுடைய நிலங்களை மக்களிடம் வழங்குவது அரசாங்கத்தின் முக்கியமான கடமைகளில் ஒன்றெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி,

தங்களுடைய நிலங்களை தங்களிடமே கொடுங்கள் என மக்கள் கேட்பதாகவும், அந்த பொறுப்பையும், மக்கள் தங்கள் மீது கொண்டிருக்கும் எதிர்பார்ப்பையும் நிறைவேற்றுவேன் என்றும் உறுதியளித்துள்ளார்.

மக்கள் மற்றவர்களுடைய காணிகளை கேட்கவில்லை. அவர்கள் தங்கள் சொந்தக் காணிகளையே கேட்கிறார்கள், எனவே மக்கள் தன் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அண்மையில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் யாழ்ப்பாணத்திற்கு வந்துவிட்டு தன்னைச் சந்தித்தபோது, மக்களுடைய நிலங்களை மக்களிடமே வழங்குங்கள் என தன்னிடம் கேட்டுக்கொண்டதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மக்களுடைய காணிகளை அவர்களிடம் கொடுக்கும் போது தென்னிலங்கையில் சிலர் இனவாதம் பேசுவதாகவும் விமர்சனங்களை முன்வைப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அவர்களுக்கு நான் மீண்டும் கூறுவேன், அங்கிருந்து பேசிக் கொண்டிருப்பதில் பயனில்லை. இங்கே வாருங்கள். மக்களை பாருங்கள். அதற்குப் பின்னர் பார்க்கலாம் எனக் குறிப்பிட்டார்.

தேசிய நல்லிணக்கம், இன ஒற்றுமை முயற்சிகளை வடக்கில் இருந்தல்ல. தெற்கில் இருதே தொடங்கவேண்டும். தெற்கில்தான் இனவாதிகளும், கடும்போக்காளர்களும் அதிகமாக உள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தேசிய நல்லிணக்கம், இன ஒற்றுமை முயற்சிகளை செய்கின்ற இயக்கங்கள், நிறுவனங்கள் வடக்கு மாகாணத்திற்கு வருகிறார்கள், வடக்கு மக்களிடம் இருந்தே தொடங்கவேண்டும் என நினைக்கிறார்கள்.

ஆனால் அதனை தெற்கில் இருந்தே தொடங்கவேண்டும். சமத்துவம், சமவுரிமை கொண்ட மக்களையும், அந்த மக்களை கொண்ட நாட்டையும் உருவாக்குவதற்கு நாங்கள் முயற்சித்துக் கொண்டிருக்கின்றோம்.

இந்த நிலையில் எங்கள் மீது எதிர்ப்புக்களும், விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. நாங்கள் அதனை பொருட்படுத்திக் கொள்ளவில்லை.

எதிர்ப்புக்களையும், விமர்சனங்களையும் யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் தங்கள் பொறுப்புக்களை உணர்ந்து ஒற்றுமை மிக்க நாட்டை உருவாக்குவதே அனைவரினதும் கடமையாகும் என்பதை நான் அவர்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Previous articleபோர் நிறுத்தத்தை மீறி அரசின் போர்விமானத்தை புரட்சியாளர்கள் சுட்டு வீழ்த்தினர்..!!
Next articleபுலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் துபாயில் முதலீடு…?