தயா, ஜோர்ஜ் மாஸ்டர் நீதிமன்றில்

tajaதமிழீழ விடுதலைப் புலிகளின் மொழி பெயர்ப்பாளராக கடமையாற்றிய ஜோர்ஜ் மாஸ்டர் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளராக கடமையாற்றிய தயா மாஸ்டர் ஆகியோர் தொடர்பில் எவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதனை சட்ட மா அதிபர் திணைக்களம் இன்னமும் தீர்மானிக்கவில்லை என குற்றப் புலனாய்வு பிரிவு அறிவித்துள்ளது.

கொழும்பு நீதிமன்றில் குற்றப் புலனாய்வுப் பிரிவு இதனை அறிவித்துள்ளது.

தயா மாஸ்டர் மற்றும் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோர் தொடர்பிலான மனு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய முன்னிலையில் இன்று நடைபெற்றது.

வேலாயுதம் தயாநிதி எனப்படும் தயா மாஸ்டர் மற்றும் வேலுப்பிள்ளை குமாரு பஞ்சரத்தினம் எனப்படும் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோர் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.

இருவரும் பிணையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இருவரும் மக்களுடன் படையினரிடம் சரணடைந்திருந்தனர்.

இந்த இருவர் தொடர்பிலும் விசாரணை நடத்துமாறு கோரி ஓமந்தை காவல்துறையினர் குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைத்திருந்தனர்.

இவர்கள் இருவர் தொடர்பிலும் விசாரணை நடத்தி அந்த அறிக்கை சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சட்ட மா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கு அமையவே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்பட முடியும் எனவும், ஆலோசனை கோரப்பட்டு ஐந்து ஆண்டுகள் கடந்துள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

Previous articleஐ.எஸ் தீவிரவாதிகளின் கொடூர முகத்தை ரகசியமாய் படம் பிடித்த பெண்கள்
Next articleபிரபாகரன் எங்கே என்பது எனக்கு மட்டும்தான் தெரியும் : மஹிந்த பரபரப்பு தகவல்.!