யாழ். இந்துவின் கௌரவத்தைக் கெடுக்கும் ரவுடிகளை அனுமதிக்க முடியாது! உடன் கைது செய்யுங்கள்

izancheliyan1யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மிகச் சிறந்த கல்விக் களஞ்சியம். ரவுடிக் கும்பல்கள் அதன் கௌரவத்தைக் கெடுப்பதற்கு அனுமதிக்க முடியாது என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

இத்தகைய ரவுடித்தனத்தில் ஈடுபடும் மாணவர் குழுக்கள், பழைய மாணவர் குழுக்களை இனங்கண்டு, உடனடியாகக் கைது செய்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு புதிதாகப் பொறுப்பேற்றுள்ள யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் இன்ஸ்பெக்டர் வீரசிங்கவிற்கு நேற்று திறந்த நீதிமன்றத்தில் அவர் நேரடியாக உத்தரவிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதியில் ஞாயிறன்று பட்டப்பகலில் 10, 15பேர் மோட்டார் சைக்கிள்களில் வலம் வந்து தெரு ரவுடித்தனத்தில் ஈடுபட்டு, வாள்வெட்டு நடத்தியிருந்த சம்பவத்தையடுத்தே நீதிபதி இளஞ்செழியன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தின் தலைமைப் பொறுப்பை புதிதாக ஏற்றுள்ள இன்ஸ்பெக்டர் வீரசிங்கவிற்கு பணித்துள்ளார்.
இந்த ரவுடிக்கும்பல்களை ஒரு வார காலத்திற்குள் கைது செய்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி இளஞ்செழியன் புதிய யாழ். பொலிஸ் நிலையத்தின் தலைமையக பொலிஸ் இன்ஸ்பெக்டருக்கு காலக்கெடு வழங்கியுள்ளார்.

பொலிசாருக்கு வழங்கியுள்ள பணிப்புரையில் நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்திருப்பதாவது,
இத்தகைய ரவுடித்தனத்தில் ஈடுபட்ட கும்பல்களை உடனடியாகக் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சம்பவம் பற்றி பத்திரிகைகள் வாயிலாக அறிந்தவுடன் குறுந் தகவல் மூலமாக வடபிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர், யாழ்ப்பாணம் பிரதி பொலிஸ் மா அதிபர், யாழ்ப்பாணம் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் ஆகியோருக்கு, நீதிபதி என்ற முறையில் தான் தகவல் அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. படைப்பிரிவில் பணியாற்றுவதற்காக தென் சூடானுக்குச் சென்றுள்ள இன்ஸ்பெக்டர் வூட்லர் யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றிய போது குற்றச் செயல்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததைத் தொடர்ந்து புதிய இன்ஸ்பெக்டர் வீரசிங்கவும் நிலைநிறுத்த வேண்டும்.

நேற்று (ஞாயிறன்று) யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதியில் பட்டப்பகலில் 10 15 பேர் மோட்டார் சைக்கிளில் வலம் வந்து வாள்வெட்டுக்களில் ஈடுபட்டதாகவும் இதனால் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவருகின்ற பத்திரிகைகளில் செய்திகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

பத்திரிகைகளில் வரும் செய்திகளை, பொலிசாருக்குக் கொடுக்கப்படுகின்ற தகவல்களாக கருதி பொலிசார் உடனடி நடவடிக்கையில் இறங்க வேண்டும். சம்பவங்கள் குறித்து பொலிசாருக்கு முறைப்பாடுகள் எதுவும் வரவில்லை என அலட்சியமாக இருக்கக் கூடாது.

இந்தச் சம்பவம் தொடர்பாக பத்திரிகைகளில் வந்த செய்தியையடுத்து, வடபிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர், யாழ்ப்பாணம் பிரதி பொலிஸ் மா அதிபர், யாழ்ப்பாணம் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் ஆகியோருக்கு, சம்பந்தப்பட்ட ரவுக் கும்பல்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதி என்ற முறையில் நான் அறிவித்துள்ளேன்.

யாழ்ப்பாணத்தில் 75 வீதம் குற்றச் செயல்கள் கட்டுப்பாட்டில் உள்ள போது 25 வீதமான இத்தகைய ரவுடித் தனங்கள் இன்றும் காணப்படுவதை அனுமதிக்க முடியாது.
இடத்தில் இருந்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையம் மற்றும் ஐந்து நீதிமன்றங்கள் என்பன கால் கிலோ மீற்றர் தொலைவில், அமைந்துள்ள ஒரு இடச் சூழலிலேயே, கேகேஎஸ் வீதியில் தெரு ரவுடித்தனம் மற்றும் வாள் வெட்டுச் சம்பவம் நடைபெற்றுள்ளது. ஆயினும் அந்த ரவுடிக் கும்பல்களை உடனடியாக சட்டத்தினால் அடக்க முடியாமல் போயுள்ளதே என்பதை எண்ணும்போது வெட்கமாக உள்ளது.

இந்தச் சம்பவமானது, தெரு ரவுடித்தனம் மற்றும் வாள் வெட்டுச் சம்பவங்களில் எவரும் ஈடுபடக்கூடாது என நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவுக்கு சவால் விடும் சம்பவமாகவே நோக்க வேண்டியுள்ளது. ஆயினும் நீதிமன்றம் சற்று தாமதமாகவே குற்றம் புரிபவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் என்பதை பொலிசார் அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.

சட்டத்தை நடைமுறைப்படுத்துகின்ற பொலிஸ் நிலையம் மற்றும் நீதிமன்றங்கள் அமைந்துள்ள ஒரு சூழலில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் காட்டு மிராண்டித்தனமாக ரவுடித்தனத்தில் ஈடுபட்ட அந்த 15 பேரையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும். அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள்கள், வாள்கள் என்பவற்றையும் உடனடியாக்க கைப்பற்ற வேண்டும்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்துள்ளவரிடம் இருந்து ரவுடித்தனத்தில் ஈடுபட்டவர்கள் பற்றிய தகவல்களைப் பெற்று சந்தேக நபர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்யப்படுகின்ற நபர்களிடம் மேல் விசாரணைகள் நடத்தி தெரு ரவுடித்தனத்தினலும் வாள்வெட்டுச் சம்பங்களிலும் ஈடுபடுபவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மிகவும் பிரபலமானது. யாழ்ப்பாணத்தின் கல்விக் களஞ்சியமாகிய அது சமூகத்தில் உச்ச நிலையிலான புத்தி ஜீவிகளை படைத்து வருகின்ற ஒரு கல்விச் சாலையாகும். அந்தக் கல்லூரியின் பெயரையும், அதன் கௌரவத்தையும் கெடுக்கும் வகையில் சில மாணவர் குழுக்களும்இ சில பழைய மாணவர் குழுக்களும் இத்தகைய தெரு ரவடித்தனம் மற்றும் வாள்வெட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றர்கள்.

கேகேஎஸ் வீதிச் சம்பவத்தில் யாழ். இந்துக் கல்லூரியின் பழையை மாணவர் குழுவொன்றும் சம்பந்தப்பட்டிருப்பதாகத் தகவல்கள் கசிந்திருக்கின்றன.

அண்மையில் இந்துக்கல்லூரி அதிபருடைய வீட்டுக்கு இரவு 3 மணிக்குச் சென்று தாக்குதல் நடத்தியிருக்கின்றார்கள். இந்தச் சம்பவம் தொடர்பில், இந்துக் கல்லூரி அதிபர் ஆசியர்களுடன் கலந்துரையாடல் நடத்தி அந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட ரவுடிகளைக் கைது செய்ய வேண்டும்.

இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களின் பெற்றோர்களை விசாரணைக்கு உட்படுத்தி, அந்த சந்தேக நபர்களுக்கு உணவு உடை வசதிகள் கொடுத்திருக்கின்றார்களா என கண்டறிந்து, குற்றச் செயல்களில் ஈடுபட்ட சந்தேக நபர்களுக்கு அடைக்கலம் கொடுத்தார்கள் என்ற குற்றச்சாட்டில் அந்தப் பெற்றோரைக் கைது செய்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும்.

பொலிஸ் நிலையத்திற்குள்ளேயே பொலிசார் இருக்க வேண்டாம். அனைவரும் வீதிக்கு இறங்குங்கள். வீதிகளில் சைக்கிள் ரோந்து நடவடிக்கைகளை ஆரம்பித்து குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களைக் கண்காணித்து குற்றச் செயல்களை உடனுக்குடன் கட்டுப்படுத்த வேண்டும்.

வீதிகளில் வேலையற்று வீணே கூட்டமாக நிற்கும் இளைஞர்களைக் கைது செய்து, அவர்களுடைய பெற்றோரை பொலிஸ் நிலையத்;திற்கு அழைத்து எச்சரிக்கை செய்து அவர்களிடம் கையளியுங்கள். தெரு ரவுடித்தனத்தில் ஈடுபடுகின்ற கும்பல்களின் செயற்பாடுகளினால், இந்துக் கல்லூரி சுற்றாடல் தற்சம்யம் வன்செயலுக்கு முகம் கொடுத்து வருகின்றது.

Previous articleகத்தியோட நின்றாங்கள், இப்ப ஜட்டியோட நிக்கின்றாங்கள் – கூண்டோடு சிக்கிய கொலையாளிகள்!
Next articleயாழின் பிரபல ஆண்கள் பாடசாலையின் சிரேஷ்ட மாணவர்களால் கொலை வெறித் தாக்குதலுக்கு உள்ளான மாணவன்