யாழின் பிரபல ஆண்கள் பாடசாலையின் சிரேஷ்ட மாணவர்களால் கொலை வெறித் தாக்குதலுக்கு உள்ளான மாணவன்

யாழ்ப்பாணத்தின் பிரபல ஆண்கள் கல்லூரியொன்றில் க. பொ .த சாதாரண தரத்தில் கல்வி பயிலும் மாணவன் அதே பாடசாலையில் கல்வி பயிலும் க.பொ. த. உயர்தரப் பிரிவில் கல்வி பயிலும் சிரேஷ்ட மாணவர் குழுவினால் கொலை வெறித் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

குறித்த மாணவன் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் மூன்று நாட்கள் சிகிச்சை பெற்றுத் தற்போது வீடு திரும்பியுள்ள போதும் குறித்த மாணவனின் உடல் நிலை இன்னும் தேறவில்லை.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கடந்த புதன்கிழமை பாடசாலை இடைவேளை வேளைக்குச் சிறிது நேரத்திற்கு முன்பாக ஆசிரியர்கள் யாரும் வகுப்பில் இல்லாத சமயம் பார்த்து அடாத்தாக வகுப்பிற்குள் உள்நுழைந்த க.பொ.த உயர்தரத்தில் கல்வி பயிலும் சிரேஷ்ட மாணவர் குழுவினர் வகுப்பிலுள்ள மாணவர்கள் அனைவரையும் வெளியேற்றி விட்டுக் குறித்த மாணவனின் சக நண்பனை முதலில் தாக்கியுள்ளனர்.

பின்னர் அந்த மாணவனை விட்டுவிட்டு மேற்படி மாணவனை நிலத்தில் தள்ளி விழுத்திக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். அதன் பின்னர் மாணவனின் சீருடையில் கையை வைத்து மாடிப் படியால் மனிதாபிமானமற்ற முறையில் கீழ் வரும் வரை பிடித்திழுத்துத் தாக்கியுள்ளனர். இதன் போது தும்புத்தடியாலும், தமது சப்பாத்துக் கால்களாலும் மாணவன் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

மாணவர்களின் கொடூரத் தாக்குதலால் மாணவன் சுய நினைவை இழந்த நிலையில் மாணவனின் வகுப்பு ஆசிரியர் மற்றும் வேறொரு ஆசிரியரால் காப்பாற்றப்பட்டு வகுப்பொன்றில் பாதுகாப்பாக வைத்திருந்த நிலையில் கதவைத் தள்ளி உள்நுழைந்த குறித்த மாணவர்கள் மீண்டும் அந்த மாணவரைத் தாக்க முற்பட்ட நிலையில் தாக்குதலுக்கிலக்கான மாணவனை ஆசிரியர்கள் காப்பாற்றி அதிபர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றதாகவும் தெரியவருகிறது.

சக மாணவர்கள் தாங்களும் தாக்கப்படலாம் என்ற அச்சத்தில் இந்த விடயத்தை பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்குத் தெரியப்படுத்தவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்துக் குறித்த விடயம் சம்பந்தமாக அதே பாடசாலையில் கல்வி கற்கும் உயர்தரத்தைச் சேர்ந்த வேறு மாணவர்கள் மூலமாகத் தாக்குதலுக்கிலக்கான மாணவனின் தந்தையாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் தந்தையார் பாடசாலைக்குச் சென்றுள்ளார். இதன் போது தாக்குதலுக்குக் காரணமான மாணவர்களை காப்பாற்றும் வகையில் அதிபர் செயற்பட்டதாகப் பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தையார் குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் தன்னைப் பாதுகாக்கும் வகையிலும், பாடசாலையின் பெயருக்குக் களங்கம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகவுமே இவ்வாறு செயற்பட்டதாகவும் விசனம் தெரிவித்தார்.

இந் நிலையில் தாக்குதலுக்கிலக்கான மாணவன் அன்றைய தினம் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவனிடம் வைத்தியசாலைப் பொலிஸாரும், யாழ்ப்பாணம் பொலிஸாரும் விசாரணைகள் நடாத்தியதுடன் முறைப்பாடும் பெற்றுச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலுக்கிலக்கான மாணவனின் முதுகுப் பகுதியிலும் வலது முழங்கைப் பகுதியிலும் காயங்கள் காணப்படுவதுடன் தலை மற்றும் தாடைப் பகுதியில் அதிக நோவுத் தன்மை காணப்படுவதாகவும் பாதிக்கப்பட்ட மாணவன் தெரிவித்தார்.

குறித்த தாக்குதலுடன் 30 வரையான மாணவர் குழு சம்பந்தப்பட்ட போதும் இரு மாணவர்களின் தூண்டுதலிலேயே குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாகப் பாதிக்கப்பட்ட மாணவன் தெரிவித்தார். எனினும்,தாக்குதலுக்கான சரியான காரணம் இதுவரை தெரிய வரவில்லை. டினேஷ் கவிப்பிரியன் (வயது-16) என்ற மாணவனே தாக்குதலுக்கு இலக்கானவராவார்.

நாங்கள் பாடசாலையில் அதிபர், ஆசிரியர்கள் எங்கள் பிள்ளைகளைப் பாதுகாப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் பாடசாலைக்கு அனுப்புகிறோம். இவ்வாறான நிலையில் அவர்கள் முன்பாக என் மகன் மீது பல மாணவர்கள் சேர்ந்து காட்டுமிராண்டித் தனமான தாக்குதலை நடாத்தியுள்ளனர்.

கடுமையான தாக்குதலால் என் மகனின் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டிருந்தால்……! இதற்காகவா நாங்கள் எங்கள் பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்புகிறோம்? எனவும் தெரிவித்துக் கதறினார்.

குறித்த மாணவன் கல்வியில் சிறந்து விளங்குவதுடன் சிறு வயதிலிருந்து நடனத் துறையில் ஆர்வம் கொண்டு பல்வேறு போட்டிகளிலும் பங்குபற்றி இதுவரை பல பதக்கங்களையும், சான்றிதழ்களையும், பாராட்டுதல்களையும் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தாக்குதல் மேற்கொண்டவர்கள் மாணவர்களாயினும் அவர்கள் தமது மகன் மீது கொலை வெறித் தாக்குதல் நடாத்தியமை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதொன்றல்ல. எனவே, குறித்த மாணவர்கள் அனைவரும் உரிய சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பது பெற்றோர்களின் வேண்டுகோளாகவுள்ளது.

இதேவேளை பாடசாலை வேளையில் குறித்த மாணவன் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் சக மாணவர்களின் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

jaffna1jaffna2jaffna3jaffna4jaffna5

Previous articleயாழ். இந்துவின் கௌரவத்தைக் கெடுக்கும் ரவுடிகளை அனுமதிக்க முடியாது! உடன் கைது செய்யுங்கள்
Next articleஅகதி முகாமில் ஈழத்தமிழர் மீதான கண்மூடித்தனமான தாக்குதல்!