பெரியப்பாவினால் சூடு வைக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில்

Exif_JPEG_420

Exif_JPEG_420
Exif_JPEG_420
தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டகொடை என்.சீ தோட்டத்தில் சிறுமி ஒருவர் தனது பெரியப்பா ஒருவரால் உடல் அங்கங்களில் சூடு வைத்து சித்திரவதைப்படுத்தப்பட்ட நிலையில் கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் சந்தேக நபராக கைது செய்யப்பட்ட சிறுமியின் பெரியப்பாவை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நுவரெலியா மாவட்ட நீதி மன்ற நீதவான் இந்திக்க ருவன் தி சில்வா நேற்று மாலை உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
அப்புத்தளை ஒய்ய உருவரி தோட்டத்தில் வசிக்கும் காந்தியம்மாள் கிருஸ்ணகுமார் ஆகிய தம்பதிகளுக்கு 6 வயது பெண் மற்றும் 11 வயது ஆண் ஆகிய இரு சிறார்கள் இருக்கின்றனர்.கடந்த 6 மாதங்களுக்கு முன் இச்சிறார்களின் தந்தை வேறு ஒருப் பெண்ணுடன் கள்ளக்காதல் தொடர்பு கொண்டு இவர்களை விட்டுப் பிரிந்துச் சென்றுள்ளார்.

அதனை அடுத்து இவ்விரு பிள்ளைகளின் கல்வி மற்றும் பாதுகாப்பு வாழ்வாதாரம் தொடர்பாக சிறார்களின் தாய் காந்தியம்மாள் வட்டகொடை என்.சீ தோட்டத்தில் வசிக்கும் இவரின் அக்காவின் வீட்டில் அனுமதித்துவிட்டு கொழும்பில் தனியார் வீடு ஒன்றில் தொழிலுக்குச் சென்றுள்ளார்.

இந்த நிலையில் இச்சிறார்களை அக்காவின் கணவரான பி.ராஜாராம் என்பவர் இவர்களை பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கியதுடன் சிறுமியின் உடல் அங்கங்களில் தீயினால் சுட்டு காயங்களை ஏற்படுத்தியுள்ளார். இது தொடர்பில் அயலவர்களால் தலவாக்கலை பொலிஸ் நிலைய சிறுவர் பாதுகாப்பு மற்றும் நன்நடத்தை பிரிவிற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி வீரன் சுந்தர்ராஜ் அவர்களுக்கு புகார் தெரிவித்துள்ளனர்.

இப்புகாரின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸ் அதிகாரி சந்தேகத்தின் பெயரில் ராஜாராம் என்பவரை நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர். இவரை நேற்று மாலை நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதவான் இந்திக்க ருவன் தி சில்வா முன்னிலையில் ஆஜர் செய்துள்ளனர்.

இதன்போது நீதிபதி சந்தேக நபரை இம்மாதம் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும் படி உத்தரவிட்டதுடன் தீக்காயங்களுக்குள்ளான சிறுமியை தாயிடம் ஒப்படைத்து கண்டி பொது வைத்தியசாலையில் சட்ட வைத்தியப் பிரிவிற்கு அனுமதித்து சிகிச்சை அளிக்குமாறு தலவாக்கலை பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Previous articleஇராணுவத்துடன் நெருங்கிய புதிய ஆளுநர்!
Next articleபொட்டு அம்மான் உயிரிழந்தாரா? உறுதிப்படுத்த முடிவில்லை என்கிறது ஸ்ரீலங்கா இராணுவம்