மின்சார விநியோகம் இன்று முதல் வழமைக்கு திரும்பும்

201602122328260807_In-Bangalore3-hours-dailyUnscheduled-power-cuts_SECVPFநாடுபூராகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற மின் வெட்டு இன்று முதல் வழமைக்குத் திரும்பும் என மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
நுரைசோலை அனல் மின்நிலையத்தின் திருத்தல் பணிகள் பூர்த்தியாகியுள்ளமையினால் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அமைச்சர் மேலும் உரையாற்றுகையில், பியகம உப மின்நிலையத்தில் மின்மாற்றி வெடித்ததை அடுத்து நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் செயற்பாடுகள் முழுமையாக பாதிக்கப்பட்டன. இதனை சீர்செய்வதற்கு காலம் தேவைப்பட்டது.

இதன்காரணமாக இடைக்கிடையே மின் விநியோகம் பல பிரதேசங்களுக்கு தடைப்பட்ட வண்ணமிருந்தது. இருந்தபோதிலும் அதற்கான நேர காலத்தை வகுக்கவேண்டிய தேவை ஏற்பட்டது. இல்லையேல் மக் கள் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியேற்படும் என்பதனை அறிந்தோம்.

இதன் அடிப்படையில் இதற்கான நேர அட்டவணை ஒன்றை வழங்கியிருந்தோம். இருந்த போதிலும் நேற்றைய தினம் நுரைச்சோலை அனல் மின்நிலைய சீர்திருத்தப் பணிகள் நிறைவடைந்தமையை அடுத்து இன்று முதல் சீரான மின் விநியோகத்தை வழங்க முடியும் என்றார்.

இதேவேளை, நேற்றைய தினம் கம்பஹா மாவட்டத்தில் 10 மணித்தியாலங்களுக்கு மேல் மின்வெட்டு நடைமுறைப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதாவது காலை 09.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையுள்ள மூன்று மணித்தியாலங்களும், பிற்பகல் 1.00 மணி முதல் முன்னிரவு 06.30 மணி வரையுள்ள ஐந்தரை மணித்தியாலங்களும், முன்னிரவு 08.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையுள்ள இரண்டு மணித்தியாலங்களுமாக பத்தரை மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறையிலிருந்தது.

Previous articleமீண்டும் நடன விடுதிகள் முற்றுகை
Next articleஇந்த பெண் செய்யும் வேலையை பார்த்து யாரும் ஷாக் ஆகாதிங்க !!