யுத்தத்தின்போது காணாமற்போனோர் தொடர்பில் கொழும்பில் கலந்துரையாடல்

vauneja1-600x338ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற 30 வருட சிவில் யுத்தத்தின்போது காணமற்போனோர் தொடர்பாகவும், அவர்களின் குடும்பங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் இன்று கொழும்பில் கலந்துரையாடல் ஒன்று நடைபெறுகின்றது.

காணாமற்போனோர் தொடர்பிலான சர்வதேச ஆணைக்குழு International Commission on Missing Persons (ICMP) மற்றும் குவாதமாலாவின் தடயவியல் மற்றும் மானுடவியல் நிதியம் Guatemalan Forensic Anthropology Foundation (FAFG) மனசாட்சி களங்களின் சர்வதேச கூட்டணி, International Coalition of Sites of Conscience (ICSC) திருகோணமலையில் இயங்கும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் மற்றும் பாதுகாக்கும் மையம் Centre for the Promotion and Protection of Human Rights (CPPHR) மனித உரிமைகளை அபிவிருத்தி செய்வதற்கான நிலையம் Centre for Human Rights Development (CHRD) ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்த கலந்துரையாடல் நடைபெறுகின்றது.

காணாமற்போனோர் தொடர்பிலான சர்வதேச ஆணைக்குழு, குவாதமாலாவின் தடயவியல் மற்றும் மானுடவியல் நிதியத்தின் பிரதிநிதிகள் மற்றும் ஸ்ரீலங்கா அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்கின்றனர்.

விசாரணைகளை மேற்கொள்வதற்கும், அவை தொடர்பான தகவல்களை அறிந்துகொள்வதற்கும் ஸ்ரீலங்காவில் அலுவலகம் ஒன்றை அமைப்பது தொடர்பிலும் இதன்போது ஆராயப்படவுள்ளது.

இதேவேளை, காணாமற்போனவர்களின் உறவினர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பங்கேற்ற கலந்துரையாடல் ஒன்று கடந்த 14, 15, மற்றும் 16ஆம் திகதிகளில் திருகோணமலையில் இடம்பெற்றது.

காணாமற்போனோர் தொடர்பிலான சர்வதேச ஆணைக்குழு, குவாதமாலாவின் தடயவியல் மற்றும் மானுடவியல் நிதியத்தின் பிரதிநிதிகள், காணாமல் போனவர்களின் உறவினர்கள், சிவில் அமைப்புகள், மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர், அருட்தந்தை செபமாலை, வவுனியா பிரஜைகள் குழுவின் தலைவர் கிருஸ்ணபிளை தேவராஜா உள்ளிட்ட 22 பேர் இதில் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் ஸ்ரீலங்காவில் காணாமற்போனோர் தொடர்பாகவும், அவர்களின் குடும்பங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும் பிரதிநிதிகளிடம் தெளிவுபடுத்தியதாக வவுனியா பிரஜைகள் குழுவின் தலைவர் ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்குத் தெரிவித்தார்.

மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, அம்பாறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த காணாமற்போனவர்களின் உறவினர்கள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Previous articleஉலகில் இலங்கைக்கு 117ஆவது இடம்
Next articleதயவு செய்து என்னை காப்பாத்துங்க: சவுதியில் சிக்கித் தவிக்கும் ஒருவரின் கண்ணீர்க் கோரிக்கை