கலாபவன் மணி மரணமா.. கொலையா? அதிர்ச்சித் திருப்பங்கள்

mane2மலையாள, தமிழ் சினிமாவில் புகழ்பெற்று விளங்கிய கலாபவன் மணி, இந்த மாதம் 6ம்தேதி மரணமடைந்தார். அவரது உடலில் அளவுக்கதிகமான மீத்தேல் ஆல்கஹால் இருப்பதாக போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் வெளியானது.

கலாபவன் மணியின் சகோதரர் ராமகிருஷ்ணன், மணியின் மரணம் நிச்சயம் சந்தேகத்துக்கிடமானது என்கிறார். ‘எங்களுக்குத் தெரிந்து மணி அண்ணா, பீர் மட்டுமே குடிப்பார். டாக்டர்கள் எங்களிடம் சொன்னது, ‘லைசென்ஸ் பெற்றுள்ள மதுவில் இத்தனை மீத்தேல் ஆல்கஹால் இருக்க வாய்ப்பில்லை’ என்பதே. எனவே அதற்கு முன்தினம் அவரோடு இருந்த அனைவர்மீதும் எனக்கு சந்தேகமாக இருக்கிறது’ பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

நட்பா… துரோகமா

கடந்த வாரமே இதுகுறித்து சந்தேகத்தின் அடிப்படையில் சின்னத்திரை தொகுப்பாளரும், திரை நடிகருமான ‘தரிகிட’ சாபு மீதும் காவல்துறையின் பார்வை விழுந்தது. மரணத்திற்கு முன் தினம் இவரும், மற்றொரு நடிகருமான ‘ஜாஃபர் இடுக்கி’யும் உடனிருந்துள்ளனர். அப்போது கேட்டபோது ‘மணி நான் இருக்கும்போது குடிக்கவில்லை. நான் இரவு 11 மணிக்கு அந்த அவுட் ஹவுஸில் இருந்து சென்றுவிட்டேன்’ என்று காவல்துறையிடம் கூறியிருந்தார். ஆனால் உடனிருந்த ஜாஃபர் இடுக்கியின் வாக்குமூலத்தில் எல்லோரும் குடித்ததாகக் கூறியிருந்தார். இந்த முரண் காரணமாக சாபு, மீண்டும் நேற்று விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.

’தரிகிட’ சாபு ஒரு தயாரிப்பு நிறுவனம் தொடங்க இருந்ததாகவும் அது கலாபவன் மணி காரணமாக தடையானதாகவும் வெளியாகும் வதந்திகளோடு காவல்துறை பொருத்திப் பார்த்தது. ஆனால் இவற்றை சாபு திட்டவட்டமாக மறுக்கிறார்.

கையில் கெடச்சா சும்மா விடமாட்டேன்

’யார் இப்படி ஒரு வதந்தியைப் பரப்பியதென்று தெரியவில்லை. எனக்கு வாட்ஸ் அப்பில் இதுபோன்ற தகவல்கள் வந்தபோது ஆத்திரமானது. நான் ஓடி ஒளிந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். நான் என் காயங்குளம் வீட்டிலேயேதான் இருக்கிறேன். கலாபவன் மீதுள்ள அன்பின் காரணமாக அவரது ரசிகர்கள் இவற்றை நம்பி, என்னை சந்தேகப்பட்டு எனக்கெதிராக இது திரும்பினால் யார் பொறுப்பேற்பார்கள்?

இதைப் பரப்பியது யார் என்று தெரிந்தால் நிச்சயம் நான் சும்மா விடமாட்டேன். தக்க பாடம் கற்பிப்பேன். துபாய் அல்லது வேறு அரபு நாட்டிலிருந்துதான் இந்த வதந்தி தொடங்கப்பட்டிருக்கும் என்று சந்தேகிக்கிறேன். முதன்முதலாக அந்த நாடுகளிலிருந்துதான் எனக்கு அழைப்புகள் இதுபற்றிக் கேட்டு வந்தன. இதை ஆரம்பித்தவர் சிக்கினால் அவரை குற்றுயிரும் கொலை உயிருமாக ஆக்காமல் விடமாட்டேன். அதற்காக எந்த விசாரணையையும் சந்திக்கத் தயார்’ என்று சில தினங்களுக்கு முன் பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்தார்.

இந்நிலையில் நேற்றும் இவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டது மீண்டும் அவர் மீது சந்தேக நிழலைப் பரப்பியுள்ளது.

கஸ்டடிக்குப் போன மூவர் கூட்டணி

அதைவிட, திருப்பமாக நேற்று மாலை கலாபவன் மணியின் அவுட் ஹவுஸில் வேலை பார்க்கும் மூவர் காவல்துறையின் கஸ்டடியில் கொண்டு செல்லப்பட்டனர். அருண், விபின், முருகன் ஆகிய இந்த மூவர் மணியின் வீட்டில் வேலைபார்த்தாலும், அவரது நண்பர்களாகவே பார்க்கப்பட்டார்கள். சாலக்குடி டிஎஸ்பி அலுவலகத்தில் இவர்களை கஸ்டடிக்கு கொண்டு சென்றதற்கு மணியின் சகோதரன் ராமகிருஷ்ணன் சொல்லும் காரணமும் அதிர்ச்சியூட்டுவதாய் இருக்கிறது.

‘ஞாயிறு காலை கலாபவன் மணி மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டபோது, அவுட் ஹவுஸை சுத்தப்படுத்தியது அவரது நண்பர்களும் வேலையாட்களுமான இந்த மூவர்தான். அந்த அவசரத்தில் அவுட் ஹவுஸை சுத்தப்படுத்தியது ஏன்? சுத்தப்படுத்தியது மட்டுமல்லாமல் அங்கே முன்தினம் இரவு அவர்கள் அமர்ந்து குடித்த பாட்டில் உட்பட எல்லாவற்றையும் அப்புறப்படுத்த வேண்டிய அவசியம் என்ன?’ என்று கேட்கிறார் மணியின் சகோதரர் ராமகிருஷ்ணன்.

‘மக்கள் நேசித்த ஒரு கலைஞன் என் அண்ணன் மணி. கூட இருந்து குடித்த எவருக்கும் பாதிப்பில்லாமல் என் அண்ணன் உடலில் மட்டும் அத்தனை மீத்தேல் ஆல்கஹால் வந்தது எப்படி? அவர் உடன் முன்தினம் இருந்த எல்லார்மீதும் எனக்கு சந்தேகம் உண்டு’ என்று திட்டவட்டமாகக் கூறுகிறார் ராமகிருஷ்ணன்.

தொடரும் சர்ச்சைகள்

கலாபவன் மணியின் வாழ்வில் சர்ச்சைகள் தொடர்கதையாகவே இருந்தது. ஒரு நேர்காணலில், ‘அரசு அளிக்கும் விருதை, எளிதாக ‘வாங்க’ முடியும் என்றார். வாசந்தியும் லக்‌ஷ்மியும் பின்னே ஞானும் படத்திற்கு மாநில அரசின் சிறந்த நடிகருக்கான விருது இவருக்கு கிடைக்கும் என எதிர்பார்த்திருக்க, மோகன்லாலுக்கு அந்த வருட விருது வழங்கப்பட்டபோது இவர் மயங்கி விழுந்ததாக செய்திகள் வந்தன. 2013ல் காட்டிலாகா அதிகாரிகளை அடித்ததாக இவர்மீது வழக்கு பதியப்பட்டது. அந்த வழக்கில் சரணடைந்தார் மணி. பிறகு அவ்வழக்கு திரும்பி, காட்டிலாகா அதிகாரிகள், மணியை தகாத முறையில் நடத்தியதாக செய்திகள் வந்தன.

எதுவானாலும், மக்களை மகிழ்வித்த இந்தக் கலைஞனின் மரணமும் இத்தனை சர்ச்சைகளில் சிக்கியிருப்பது அவரது ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. விரைவில் இந்த சந்தேக முடிச்சுகள் அவிழ வேண்டும் என்றே விரும்புகின்றனர் அவர்கள்.

Previous articleஜப்பான் விரைகிறார் மைத்திரி
Next articleசிறுமியை வல்லுறவிற்குட்படுத்திய வாலிபர் கைது