அதிரடியால் நெருக்கடியை சமாளித்தேன்: குஷியில் டில்ஷான்

dhilson_hit_001ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் இலங்கை வெற்றி பெற்றதற்கு தொடக்க வீரர் டில்ஷான் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இலங்கை அணி சமீபத்தில் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வந்தது. இந்த நிலையில் டி20 உலகக்கிண்ணத்தில் தனது முதல் லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை நேற்று சந்தித்தது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 153 ஓட்டங்கள் எடுத்தது.

சற்று சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு தொடக்க வீரர் டில்ஷான் சிறப்பாக செயல்பட்டார். இதனால் இலங்கை 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த டில்ஷான் 56 பந்தில் 83 ஓட்டங்கள் எடுத்தார்.

இது பற்றி டில்ஷான் கூறுகையில், கடந்த 2 போட்டியில் நான் ’டக்- அவுட்‘ ஆனேன். ஆனால் முக்கியமான போட்டியில் ஓட்டங்கள் எடுக்க வேண்டியது அவசியமானது. இந்த ஆட்டத்தை சிறப்பாக முடித்து வைத்ததில் மகிழ்ச்சி.

ஆப்கானிஸ்தான் அணியில் சிறந்த பந்துவீச்சாளர்கள் உள்ளனர். ஆனால் நாங்கள் அவர்களின் நெருக்கடியை சமாளித்து விட்டோம்.

இது போன்ற பெரிய தொடர்களில் நான் முதல் போட்டியிலே நல்ல ஓட்டங்களை குவிக்க வேண்டும். சீனியர் வீரர்கள் தான் அணிக்காக சிறப்பாக செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் ஸ்டனிகாசியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டில்ஷானுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

அதேசமயம் களத்தடுப்பில் சொதப்பியது ஆப்கானிஸ்தானின் தோல்விக்கு காரணமாக அமைந்து விட்டதாக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

Previous articleயோஷித தொடர்பில் மற்றுமொரு சர்ச்சை! இரகசிய ஆவணங்கள் அம்பலம்
Next articleலாரன்ஸிற்கு ஜோடியாக அனுஷ்கா- மிரட்டும் திகில் படம்