கிளிநொச்சி 57 ஆவது படைப்பிரிவின் கழிவு நீர் வீதிகளில்..

cambகிளிநொச்சி மாவட்டச் செயலகத்திற்கு பின்புறமாக திருநகர் பிரதேசத்தில் அமைந்துள்ள 57 ஆவது படைப்பிரிவின் நிர்வாக தலைமையகத்தின் கழிவு நீரால் சூழலுக்கும் பொது மக்களுக்கும் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்படுவதாக பொது மக்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த முகாமிலிருந்து தொடர்ச்சியாக கழிவு நீர் திருநகர் பிரதான வீதி வழியாக மஞ்சுளா பேக்கரி சந்திக்கு ஊடாக கணேசபுரம் விவசாய வாய்காலுக்குள் விடப்படுகிறது.

மேற்படி கழிவு நீர் செல்லும் பிரதேசம் அதிகளவு மக்கள் செறிந்து வாழும் பிரதேசமாகும் அத்தோடு குறித்த வீதியும் நாளாந்தம் அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்ற பிரதான வீதி என்பதோடு, வியாபார நிலையங்கள், மற்றும் மக்களின் வீடுகளின் முன்பாக துர்நாற்றத்துடன் செல்லும் கழிவுகளால் பொது மக்களுக்கு பல்வேறு அசௌகரியங்கள் ஏற்படுவதாக மக்களால் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மாதம் 28 ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்திலும் குறித்த படை முகாமிலிருந்து வீதிக்கு விடப்படுகின்ற கழிவு நீர் தொடர்பில் பொது அமைப்புகளால் சுட்டிக் காட்டப்பட்டது.

இதன் போது இணைத்தலைவர்களால் கரைச்சி பிரதேச சபைக்கு சுகாதார பாதுகாப்பு கருதி உடனடியாக பொருத்தமான நடவடிக்கை எடுக்குமாறு அறிவிக்கப்பட்டது.

இருந்தும் இன்று வரை எவ்வித நடவடிக்கையும் இல்லை என மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேற்படி படை முகாமிலிருந்து விடப்படுகின்ற கழிவு நீர் சில இடங்களில் தேங்கி நிற்பதோடு, தொடர்ச்சியாக துர்நாற்றமும் வீசுகிறது. இந்த படை முகாமிலிருந்து அனைத்து கழிவு நீரும் வீதிக்கு விடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

எனவே சுகாதார நன்மை கருதி உரிய தரப்புக்கள் விரைந்து பொருத்தமான நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

Previous articleவித்தியா படுகொலை: நேரில் கண்ட சாட்சியங்களால் பரபரப்பு! 10வது சந்தேகநபர் நீதிமன்றில் அழுதது ஏன்?
Next articleவெளிநாடு வாழ் புங்குடுதீவு மக்களுக்கு, ஊர்காவற்றுறை நீதவானின் அதிரடி அறிவிப்பு..