அம்பாறையில் குடிநீருக்கு தட்டுப்பாடு மக்கள் விசனம்

ampari-600x450அம்பாறை நாவிதன்வெளி குடியிருப்புமுனைக் கிராமத்தில் குடிநீருக்குப் தட்டுப்பாடு நிலவுவதனால் அப்பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகக் கவலை வெளியிட்டனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியின் காரணமாக கிணறுகளில் நீர் வற்றியுள்ளதுடன், நீரைப் பெற்றுக்கொள்வதற்காக அயல்கிராமங்களான நாவிதன்வெளி, 7 ஆம் கிராமம், அன்னமலை போன்ற கிராமங்களை நாடி செல்வதாக அக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை அயலிலுள்ள ஆற்றிலே தமது அன்றாடத் தேவைகள் மற்றும் குளிப்பதற்கு பயன்படுத்துவதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

ஆனால், அந்த ஆற்றில் கழிவுப் பொருட்கள் வீசப்பட்டு வருவதனால் தொற்று நோய் ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகமாக உள்ளதாகவும் அக்கிராம மக்கள் குறிப்பிட்டனர்.

நாவிதன்வெளிப் பகுதிக்கு நீர்வழங்கல் வடிகாலமைப்பினால் குழாய் நீர் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடும் மக்கள், அதற்கான வேலைகளை விரைவில் துரிதப்படுத்தி குடியிருப்பு முனைக்கிராமத்திற்கு நீர் வழங்கவேண்டும் எனக் கோரிக்கை விடுக்கின்றனர்.

குடியிருப்புமுனைக் கிராமத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பிரதேச மக்கள் வலியுறுத்தியுள்ள போதிலும், தமக்கான குடிநீர் இதுவரை கிடைக்கவில்லை என அங்கலாய்கின்றனர்.

குறிப்பாக இந்தக் கிராமத்திலுள்ள மக்களின் பிரதான தொழிலாக விவசாயமே காணப்படுகின்றதாகவும் வறட்சி காரணமாக விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கடந்த 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி பேரலையால் தமது கிராமத்தின் அதிகளவிலான பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இருப்பிடங்கள் அழிந்து, தற்பொழுது அந்த துன்பத்திலிருந்து மீண்டெழுந்து வருகின்ற நிலையில் வறட்சியினால் தங்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

கடந்த வருடமும் குறித்த கிராமத்தில் வறட்சி ஏற்பட்டதாக சுட்டிக்காட்டும் நாவிதன்வெளி பிரதேசசபை செயலாளர் எஸ். இராமக்குட்டி, அப்போது பவுச்சர்கள் மூலம் நீர் வழங்கியதாகக் குறிப்பிட்டார்.

எனவே, தற்போது ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை கருத்திற்கொண்டு பவுச்சர்கள் மூலம் நீர் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வறட்சியினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை நல்லாட்சி அரசாங்கம் கருத்தில் கொள்ளவேண்டும் என பிரதேச மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Previous articleவெளிநாடு வாழ் புங்குடுதீவு மக்களுக்கு, ஊர்காவற்றுறை நீதவானின் அதிரடி அறிவிப்பு..
Next articleதெஹிவளை சம்பவம் : அதிர்ச்சி புகைப்படங்கள் வெளியாகின