மக்கள் நலக் கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு எப்போது ? வைகோ தகவல்

makal_nalan_002மக்கள் நலக் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையேயான தொகுதி பங்கீடு 20ம் திகதி தொடங்கும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
கோவை மாநகர், புறநகர், திருப்பூர், நீலகிரி, ஈரோடு, ஆகிய 5 மாவட்ட ம.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கோவையில் நேற்று கூட்டம் நடந்தது. இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு பேசினார்.

முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, இந்தியாவிலேயே அதிக அளவில் ஊழல் நடக்கும் மாநிலம் தமிழ்நாடு என பொருளாதார ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தமிழகத்துக்கு மிகப்பெரிய தலைகுனிவாகும். ஊழலின் பிடியில் இருந்து தமிழகத்தை மீட்க வேண்டும் என நாங்கள் பாடுபட்டு கொண்டு இருக்கிறோம்.

சமூகத்தில் மாற்றம் வேண்டும் என விரும்பும் இளைஞர்கள் சமூக வலைதளங்கள் மூலமாக எங்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

அடுத்த கட்டமாக வருகிற 28,29,30, ஆகிய நாட்களில் பிரசாரத்தை கன்னியாகுமரியில் இருந்து தொடங்க உள்ளோம்.

தமிழகத்தில் சாதி வெறியை தூண்டி விட்டு துண்டு துண்டாக வெட்டி கொல்லும் சம்பவங்களும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

உடுமலை சம்பவத்தில் அந்த ஜோடியை 2 முறை கொல்ல முயற்சி நடந்துள்ளது. கவுசல்யாவுக்கு மிரட்டல் வந்துள்ளது.

இந்த கொலைக்கு காரணம் வெறிஉணர்ச்சிதான். இது போன்ற சம்பவங்களில் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேர்தலை கருதி, ஓட்டுக்களை கருதி இந்த எண்ணங்களை வளர்க்காதீர்கள். தொகுதி பங்கீடு தொடர்பாக வருகிற 20–ந் தேதி சென்னையில் பேச இருக்கிறோம்.

தொகுதி பங்கீடு சுலபமாக முடியும். தே.மு.தி.க.வை மக்கள் நலக்கூட்டணியில் கரம் கோர்க்க அழைப்பு விடுத்தோம்.

தற்போது மறுபடியும் அழைப்பு விடுத்து இருக்கிறோம். முடிவு செய்வது அவரது கையில் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Previous articleஓய்வு பற்றி பேசிய டில்ஷான்.. நாடு திரும்புகிறார் மலிங்கா! கிரிக்கெட் துளிகள்
Next articleவிக்கிலீக்ஸ் இந்த CIA ஆவணத்தை 2014ம் ஆண்டே வெளியிட்டது- தமிழ் செல்வன் கொலை என்ன நடந்தது ?