இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள உள்ளக விசாரணைப் பொறிமுறையின் இறுதி வடிவமானது மே மாத இறுதியில் தயாராகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் யூன் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நடைபெறவுள்ள 32 ஆவது கூட்டத்தொடரில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் ஸ்ரீலங்காவின் நிலைமை தொடர்பில் வாய்மூல அறிக்கையை வெளியிடவுள்ளார்.
இந்த நிலையில் அதற்கு முன்னதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் உள்ளக பொறிமுறை விசாரணை குறித்த இறுதி வடிவத்தை தயாரிப்பதற்கு பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றது.
விசேடமாக உள்ளக விசாரணை பொறிமுறை வடிவத்தை தீர்மானிக்கும் நோக்கில் விசேட செயலணி ஒன்றும் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளது. இந்த செயலணியானது தற்போது விசாரணை பொறிமுறை தொடர்பில் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தலைமையில் இயங்கிவரும் தேசிய நல்லிணக்க குழுவும் இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.