பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி தன்னம்பிக்கையை திரும்பப் பெற்று தந்துள்ளது என்று இந்திய வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் யுவராஜ் சிங், விராட் கோஹ்லியுடன் ஜோடி சேர்ந்து இலக்கை எட்ட உதவினார். இதனால் இந்தியா 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.
இந்த வெற்றி குறித்து யுவராஜ் சிங் கூறுகையில், ஆட்டச் சூழ்நிலையின் தேவைகளுக்கேற்ப ஆடுவதிலே நான் கவனம் செலுத்தி வருகிறேன். ரசிகர்களின் உற்சாகம் என்ற குறிப்பிட்ட நிலைகளுக்காக ஆடவில்லை.
மேலும், சரியான விடயங்களில் கவனம் செலுத்துவது அவசியம். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் துரதிர்ஷ்டவசமாக கடைசி வரை நின்று போட்டியை முடித்துக் கொடுக்க முடியாமல் போனது.
ஆனால் விராட் கோஹ்லி ஒரு மிகப்பெரிய பார்மில் உள்ளார். டோனி வந்து போட்டியை முடித்து வைத்தார்.
ஆடுகளத்தில் என்னுடைய திட்டம் என்னவெனில் ஒரு சில பந்துகளை ஆடி, தன்னம்பிக்கை வந்த பிறகு அடித்து ஆட வேண்டும் என்பதே.
முதல் போட்டியில் தோல்வியடைந்ததால் கொஞ்சம் நெருக்கடி ஏற்பட்டது. அந்தப் போட்டியில் நாங்கள் விரும்பியது போல் துடுப்பெடுத்தாட முடியாமல் போனது.
இந்த வெற்றி தன்னம்பிக்கையை திரும்பப் பெற்றுத் தந்துள்ளது. அடுத்ததாக வங்கதேசத்துக்கு எதிராக இதே பார்மில் தொடர்வோம் என நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.