பாலியல் துன்புறுத்தல்கள்! யாழ்.பல்கலை. பேராசிரியர்கள் சிலர் பணி இடைநிறுத்தம்!

jaffna-uni-01யாழ்.பல்கலைக்கழகத்திலும் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் இடம்பெறுகின்றன. இதனால் சில பேராசிரியர்களை பணி இடைநிறுத்தம் செய்துள்ளோம் என யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் கூறியுள்ளார்.
இன்றைய தினம் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற பெண்களின் குரல் அமைப்பின் மகளீர் தின நிகழ்வில் கல ந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்திருப்பதாவது,

தற்போது சமூகத்தில் பெண்களுக்கு எதிரானதும் சிறுவர்களுக்கு எதிரானதுமான நடவடிக்கைகள் அதிகரிக்க காரணம் பிள்ளைகள் மீதான பெற்றோரின் கவனம் குறைந்து செல்வதேயாகும்.

குறிப்பாக தாய்மார்களே பிள்ளைகள் தொடர்பான கவனிப்பை மேற்கொள்ள வேண்டும். அதனால் தான் ‘எந்த குழந்தையும் மண்ணில் பிறக்கையிலே நல்ல குழந்தையே அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்பினிலே’ என கூறியுள்ளார்கள்.

எனவே பிள்ளைகளது நடத்தைகள் அவர்களிடம் ஏற்படுகின்ற மாற்றங்கள் தொடர்பாக தாய்மார்கள் அவதானித்து அவர்களது எதிர்காலத்தை வளப்படுத்த வேண்டும்.

மேலும் சமுதாயத்தில் பெண்களுக்கு எதிராக ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு பெண்களும் ஒரு காரணமே. எனேனில் பெண்கள் தமக்கு ஏற்படுகின்ற நடவடிக்கைகளுக்கு ஒத்துச் செல்வதாகும்.

இச் செயற்பாடு மாற்றமடைய வேண்டும். பெண்கள் தமக்கு எதிரான ஒவ்வொரு நடவடிக்கையின் போதும் அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். பிழைகளை தட்டிக் கேட்க கூடியவர்களாக இருக்க வேண்டும். தனது மனசாட்சிக்கு நான் துரோகமிழைக்கவில்லை, பிழையாக நடக்கவில்லை, நான் சரியாகவே நடக்கிறேன் என்ற துணிவு ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏற்பட வேண்டும்.

யாழ் பல்கலைக்கழகத்தில் கூட சில பேராசிரியர்களை நாம் இடைநிறுத்தியுள்ளோம். எனேனில் அவர்கள் பாலியல் ரீதியான செயற்பாடுகளில் ஈடுபட்டமையால்.

ஆனால் இச் செயற்பாடு தொடர்பாக ஆரம்பத்திலேயே பெண்கள் தெரிவித்திருந்தால் இப் பிரச்சினையை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தியிருக்கலாம்.

எனவே பெண்கள் துணிச்சல் மிக்கவராக தமக்கு எதிரான நடவடிக்கைகளை தட்டிக் கேட்க கூடியவர்களாக இருக்க வேண்டும். அத்துடன் இவ்வாறான விடயங்களை பெண்ணியவாதிகளும் வலியுறுத்த வேண்டும். பெண்களின் கையிலேயே எதிர்கால சமுதாயம் உள்ளது.

எனவே நாம் மற்றவரை குறை கூறுவதை விடுத்து நாம் சரியான வழியில் நடப்பதுடன் பெண்கள் தமக்கெதிரான நடவடிக்கைகளுக்கு துணிந்து முகம் கொடுக்க கூடியவர்களாக மாற வேண்டும் அப்போது தான் சிறந்த ஒரு எதிர்காலத்தை உருவாக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Previous articleதெறி எப்படிப்பட்ட படம் – மனம் திறந்த அட்லி !
Next articleஇலங்கையில் கூகுள் வரைப்படத்தில் (Google Maps) பாதை படம் (Street view)