பிரபல ரகர் விளையாட்டு வீரரான வசிம் தாஜுதீனை கொலை செய்த கொலையாளிகளை ஒரு மாதத்துக்குள் கைது செய்து நீதிமன்றத்துக்கு ஆஜர்படுத்துமாறு கொழும்பு மஜிஸ்திரேட் நிஸாந்த பீரிஸ் உத்தரவிட்டு இம்மாதம் 25ம் திகதியுடன் ஒரு மாதமாகிறது. எனினும், குற்ற விசாரணை திணைக்களம் இதுவரை அது தொடர்பாக எந்த ஒரு சந்தேக நபரையும் கைது செய்யவில்லை.
இதனுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இன்னும் சுதந்திரமாக இருக்கின்றனர். அவ்வாறு கைது செய்யப்படாமை தொடர்பாக குற்ற விசாரணை திணைக்கள உயர் அதிகாரியிடம் விசாரித்த போது அவர் தெரிவித்ததாவது, இது தொடர்பான விசாரணைகள் இன்னும் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் அது தொடர்பாக எதுவும் கூற முடியாது என அவர் கூறினார்.
வசிம் தாஜுதீன் 2012 மே 17ம் திகதி கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்து அவரது வாகனத்திலேயே தீ வைத்து அந்த கொலையை விபத்து நடந்ததாக திசை திருப்ப திட்டமிட்டிருந்தார்கள். சடலத்துடன் கூடிய அவரது வாகனம் நாரஹேண்பிட்டி சாலிகா விளையாட்டு மைதானத்திலுள்ள மதிலில் மோத வைத்துள்ளனர். நான்கு ஆண்டுகளாக விபத்தினால் ஏற்பட்ட மரணம் என முடிவு செய்து நீதிமன்றத்துக்கு தவறான தகவல்களை சமர்ப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.