வவுனியாவில் பேஸ்புக்கில் நகைகள் திருட்டு

vaune1பேஸ்புக் மூலம் பெண்களுடன் தொடர்புகளைப் பேணி அவர்களிடமிருந்து தங்க நகைகளை அபகரித்த இளைஞர் ஒருவர் வவுனியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இன்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியாவில் உள்ள பெண் ஒருவருடன் பேஸ்புக் மூலம் தொடர்பை ஏற்படுத்திய குறித்த நபர் தன்னை ஒரு பணக்காரனாக அடையாளம் காண்பித்துள்ளார்.

அத்துடன் அந்த பெண்ணை காதலிப்பதாக கூறி தனிமையில் அழைத்து நகைகளை அபகரிக்க முற்பட்ட போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், உடுப்பிட்டியைச் சேர்ந்த 32 வயதுடைய குறித்த நபர் தன்னை ஒரு அரசியல்வாதியின் மகனாகவும், கோடீஸ்வரனாகவும் முகப்புத்தகத்தில் வெளிப்படுத்தி பல பெண்களுடன் காதல் தொடர்பை ஏற்படுத்தியுள்ளார்.

அதனை உண்மையென நம்பிய வவுனியாவைச் சேர்ந்த யுவதி ஒருவர் அண்மையில் யாழ்ப்பாணம் சென்று குறித்த இளைஞனை சந்தித்த போது அந்த யுவதியிடம் இருந்த நகைகளை புதிதாக்குவதாக ஆசைவார்த்தைகளை கூறி நகைகளை அபகரித்துச் சென்றுள்ளார்.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மற்றொரு யுவதியை ஏமாற்றி நகைகள் திருடுவதற்காக வவுனியாவுக்கு வந்த போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து யுவதிகளால் பறிகொடுக்கப்பட்ட நகைகள் மீட்கப்பட்டதுடன். அவர் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெறுகிறது.

இதேவேளை, குறித்த நபர் நெல் கொள்வனவு செய்து வரும் தனியார்களிடம் கூடுதலான விலைக்கு நெல்லினை கொள்வனவு செய்வதாக கூறி மில் உரிமையாளர்களிடம் அழைத்துச் சென்று அவற்றை இறக்கிவிட்டு

மில் உரிமையாளர்களிடம் குறைந்த விலையில் பணத்தை பெற்றுக் கொண்டு அவற்றை நெல்லினை கொண்டு வந்தவர்களுக்கு கொடுக்காது தலைமறைவாகியுள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது எனவும் வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட குறித்த நபர் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

Previous articleஅவுஸ்திரேலியாவுக்கு எதிரான அடுத்த போட்டி எனது கடைசி ஆட்டம்: மைதானத்தில் கண்கலங்கிய அப்ரிடி
Next articleஇலங்கையில் கடந்த மூன்று மாதங்களில் 50 பேருக்கு எச்.ஐ.வி