புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியா சிவலோகநாதன் படுகொலை தொடர்பாக, கண்கண்ட சாட்சி என கூறப்படுபவர் தொடர்பாக மனிதஉரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாட்டை கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பதினோராவது சந்தேகநபராக உள்ள உதயசூரியன் சுரேஸ்கரனது தாயார் செய்துள்ளாரென தனிப்பட்ட தகவலொன்று தெரிவிக்கின்றது.
இதற்கமைய தனது மகன் குற்றப்புலனாய்வு பிரிவினரால் பொய்யான குற்றச்சாட்டுகள் சோடிக்கப்பட்டு கைது செய்யப்படுவதாகவும், இதனால் குடும்பத்திற்கு உள்ள பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாகவும் அந்த முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பதினோராவது சந்தேகநபராக உள்ள தனது மகன் உதயசூரியன் சுரேஸ்கரன் என்பவர் அரசதரப்பு சாட்சியாக மாறியுள்ளதாக ஊடகங்களில் வெளிவந்தமை குறித்து கவலை அடைவதாகவும், அவ்வாறு மகன் எவ்வித முடிவோ அல்லது வேண்டுகோளோ நீதவானிடம் விடுக்கவில்லை, ஏனெனில் எனது மகனுக்கு இந்த விடயத்தில் எதுவித சம்பந்தமும் இல்லையெனவும் தெரிவித்துள்ளார்.
தற்போது எதிர்வரும் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனது மகன் எவ்விதத்திலும் இக்கொலை வழக்கில் தொடர்பில்லை என உறுதியுடன் தெரிவித்துள்ளார்.