தமிழர் நிலங்களில் இராணுவத்தினர் சொகுசு மற்றும் சூதாட்ட விடுதிகள்

sri-lanka-army-1சிறிலங்காவின் இழந்துபோன தலைமுறை – பாகிஸ்தான் ஊடகர்

பல்வேறு துன்பங்களுக்கு முகங்கொடுத்துள்ள தமிழ்ச் சமூகமானது, போருக்குப் பின்னான தற்போதைய சூழலில் இராணுவத்தினரின் பிரசன்னங்களையும் தலையீட்டையும் சகித்து வாழவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.

சிறிலங்காவின் உள்நாட்டு யுத்தமானது ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் முடிவுற்ற போதிலும் இன்றும் இந்த நாட்டைப் பிரிக்கின்ற சமூகப் பிரச்சினைகளைக் காணலாம். சிறிலங்கா வாழ் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட பல்வேறு யுத்தக் குற்றங்களை மேற்கொண்ட சிங்களப் பேரினவாத அரசு மீது இன்றும் உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் வெறுப்புடனேயே உள்ளனர்.

போரானது இரண்டு பத்தாண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்ததன் விளைவாக ஏற்பட்ட பல்வேறு வடுக்கள் மற்றும் உளப்பாதிப்புக்கள் போன்றன இன்றும் தமிழ் இளையோர்கள் மத்தியில் தாக்கத்தைச் செலுத்துகின்றன. இவர்கள் சிறிலங்காவின் பாதிக்கப்பட்ட தலைமுறையினராக வாழ்கின்றனர்.

சிறிலங்காவின் முன்னாள் படைவீரர்களை மலேசியாவிற்கு அழைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துவது தொடர்பான மலேசியாவின் உள்விவகார அமைச்சின் திட்டத்தை எதிர்த்து மார்ச் 08, 2016 அன்று மலேசிய இந்திய காங்கிரசின் இளையோர் பணிப்பாளர் சிவராஜ் சந்திரன் தனது கண்டனத்தை வெளியிட்டிருந்தார். ‘ஏனெனில் இத்திட்டமானது உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் உணர்வலைகளை மதிக்கவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான நீண்ட கால யுத்தத்தின் போது தமிழ்ப் பொது மக்களைப் படுகொலை செய்த சிறிலங்காப் படையினரைத் தமிழ் மக்கள் மிகத் தீவிரமாக வெறுக்கின்றனர்’ என சந்திரன் விளக்கினார்.

முறிவுற்ற சிறிலங்காவை ஒன்றிணைத்துப் பணியாற்றுவேன் என்கின்ற தேர்தல் வாக்குறுதியை மதித்தே கடந்த ஆண்டின் ஆரம்பத்தில் மைத்திரிபால சிறிசேன அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார்.

சிறிலங்காவின் உள்நாட்டு யுத்தமானது உத்தியோகபூர்வமாக 1983ல் ஆரம்பமாகியது. ஆனால் இந்தப் பிரச்சினைக்கான மூலவேர் மூன்றரை நூற்றாண்டுகளுக்கு முற்பட்டதாகும். கிட்டத்தட்ட கி.மு1500 ஆண்டுகளில், வடக்கிலிருந்து ஆரிய ஆக்கிரமிப்பாளர்கள் இந்திய உபகண்டத்தின் ஊடாக திராவிடர்களை நோக்கிப் படையெடுத்தனர்.

சிறிலங்காவில் வாழும் பௌத்த சிங்களவர்கள் ஆரியர்களின் வழித்தோன்றல்கள் எனவும் தமிழ் மக்கள் புராதன திராவிடர்களின் வழித்தோன்றல்கள் எனவும் கூறப்படுகின்றது. அன்றைய காலத்திலிருந்தே இவ்விரு சமூகத்தவர்களுக்கும் இடையில் முரண்பாடுகளும் முறிவுகளும் ஏற்படத் தொடங்கின. இது சிறிலங்கா 1948ல் பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் மேலும் தீவிரம் பெற்றது.

இனங்களுக்கிடையில் பாரபட்சங்கள் நிலவிய போதே இது யுத்தமாக வெடித்தது. 1972ல், சிங்கள அரசியல்வாதிகள் வரலாற்று ரீதியாக சிறிலங்கா கொண்டிருந்த சிலோன் என்கின்ற பெயரை மாற்றியதுடன் பௌத்த மதத்தை அரச மதமாகப் பிரகடனப்படுத்தினார்கள். இதுவே தமிழ் மக்கள் மத்தியில் ஆயுதப் போராட்டம் ஒன்று வெடிப்பதற்குக் காரணமாகியது.

புலிகள் அமைப்பின் கட்டுப்பாட்டிலிருந்த இடங்களைச் சேர்ந்த இளைஞர்கள் சிறிலங்காவில் தொடரப்பட்ட யுத்தத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட நலிந்த மக்கள் சமூகத்தினராக இருந்தனர்.

புலிகள் அமைப்பும் சிறிலங்கா அரசாங்கமும் இவர்களைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்தினர். தமிழீழ விடுதலைப் புலிகளால் சிறுவர்கள் ஆட்சேர்க்கப்பட்டு போர்க் களத்தில் நிறுத்தப்பட்டனர்.

தமது கட்டுப்பாட்டிலிருந்த குடும்பங்களிலிருந்து ஒரு பிள்ளை என்கின்ற விகிதத்தில் புலிகள் அமைப்பால் படைக்கு ஆட்சேர்க்கப்பட்டனர். 1998ல் கிளிநொச்சியில் இடம்பெற்ற தனியொரு யுத்தத்தில் 500 இற்கும் மேற்பட்ட புலிகள் அமைப்பைச் சேர்ந்த சிறுவர் போராளிகள் படுகொலை செய்யப்பட்டனர்.

இன்றும் கூட சிறிலங்காத் தமிழ் இளையோர்கள் தமது உடல் உறுப்புக்களை இழந்து மனவடுக்களுடன் வாழ்வதைக் காணலாம். கடந்த இருண்ட யுகத்தின் போது தாம் பிறந்ததை நினைத்து இவர்கள் வருந்துகின்றனர்.

பிறிதொரு பிரிவினர் புகைப்பிடித்தல் மற்றும் தெருக்களில் செல்லும் பெண்களை கேலிசெய்தல் போன்ற கெட்ட பழக்கவழக்கங்களுக்கு ஆட்பட்டுள்ளனர் என்பதும் இங்கு வேதனையான விடயமாகும்.

போதைப் பொருட் பாவனையும் சிறிலங்காவின் முன்னாள் போர் வலயத்தில் தற்போது அதிகரித்துள்ளது. இவ்வாறான பல்வேறு துன்பங்களுக்கு முகங்கொடுத்துள்ள தமிழ்ச் சமூகமானது, போருக்குப் பின்னான தற்போதைய சூழலில் இராணுவத்தினரின் பிரசன்னங்களையும் தலையீட்டையும் சகித்து வாழவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தேர்தல் பரப்புரையின் போது, தனது முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் தந்திரோபாயம் மிக்க அரசியலை முடிவுக்குக் கொண்டுவந்து நாட்டில் அமைதியை நிலைநாட்டுவேன் என சிறிசேன வாக்குறுதி வழங்கியிருந்தார்.

எனினும், மே 2015ல் அமெரிக்காவின் ஒக்லாண்ட் நிறுவகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் ‘சிறிலங்காவில் வேறுபட்ட தோற்றப்பாட்டின் கீழ் அமைதிப் போர் தற்போதும் தொடர்கின்றது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாது சிறிலங்கா அரசாங்கமானது தொடர்ந்தும் தமிழ் மக்களின் சொந்த இடங்களில் அவர்களைக் குடியேற்றுவதில் தாமதத்தை ஏற்படுத்துவதாகவும், உள்நாட்டில் இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் நிலங்களை அபகரித்த சிறிலங்கா இராணுவத்தினர் அதில் சொகுசு விடுதிகள் மற்றும் சூதாட்ட விடுதிகளை அமைத்து இவற்றின் மூலம் வருமானம் ஈட்டிவருவதாகவும் அமெரிக்காவின் ஒக்லண்ட் நிறுவகத்தின் அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சிறிசேனவின் தற்போதைய ஆட்சியில் பொருளாதாரமானது 7.4 வீதமாக அதிகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்ட போதிலும் தொடர்ந்தும் ஐந்து பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடன்களால் மொத்தத் தேசிய உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

காலம் கடக்கும் போது தமிழ் மக்களுக்கு உண்டான வடுக்கள் மாறினாலும் கூட, சிறிலங்காவில் இடம்பெறும் இனத்துவ அரசியலானது தொடர்ந்தும் இடம்பெறும். இது தொடர்பில் சிறிசேன தனது வாக்குறுதிகளுக்கு அமைவாகச் செயற்படுவரேயானால் மட்டுமே இது முடிவிற்கு வரும். இல்லாவிட்டால் சிறிலங்கா வாழ் தமிழ் இளையோர் தொடர்ந்தும் பல்வேறு பாதிப்புக்களுக்கு முகங்கொடுப்பதுடன், ஒரு நலிவடைந்த தரப்பாகவே வாழவேண்டியேற்படும்.

இவ்வாறு பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் daily times நாளிதழில், இஸ்லாமாபாத்தைச் சேர்ந்த சுதந்திர ஊடகவியலாளரான Mubashir Noor எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

Previous articleவிவசாயி மகளுக்கு அடித்த அதிர்ஷ்டத்தை பார்த்தீங்களா?
Next articleமதில் பாய முற்பட்ட யாழ் பிரபல மாணவனைக் காட்டிக் கொடுத்த கூகி