தற்கொலை செய்துகொள்வதை தவிர வேற வழியில்லை!- கதறும் அகதிகள்

agathigal1கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் ஒரு அகதியின் காலை அடித்து உடைத்திருக்கிறார்கள். நடந்தது இதுதான் என்று விவரித்தார், கும்மிடிப்பூண்டி அகதி முகாம் தலைவர் சிவக்குமார்.
மதுரை உச்சப்பட்டி அகதிகள் முகாமில் இருந்த இலங்கைத் தமிழர் ரவி, அதிகாரியின் டார்ச்சர் தாங்காமல் உயர் அழுத்த மின் கோபுரத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட அதிர்வு இன்னும் அடங்கவில்லை. இதோ… கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் ஒரு அகதியின் காலை அடித்து உடைத்திருக்கிறார்கள்.

நடந்தது இதுதான் என்று நம்மிடம் விவரித்தார், கும்மிடிப்பூண்டி அகதி முகாம் தலைவர் சிவகுமார்.

முகாம் வாசியான சுபேந்திரன் சண்டை போட்டார். விசாரிக்கப் போன என்னோடும் தகராறில் இறங்கினார். போலீசில் புகார் செய்தோம். அதில் எந்த நடவடிக்கையும் இல்ல. என்னுடைய இருசக்கர வாகனத்தை சுபேந்திரன் உடைத்தார். பெப்ரவரி 25ம் தேதி மாலை 4 மணிக்கு சிப்காட் போலீசார் அங்கு வந்தனர்.

எஸ்.ஐ. குணசேகரன், சுபேந்திரன் கையைப் பிடிக்க, காவலர்கள் பார்த்திபனும் வில்வமணியும் காலைப் பிடிக்க, தடியால் சுபேந்திரனை அடித்தார், இன்ஸ்பெக்டர் டில்லிபாபு. என்னையும் அங்கேயே அடித்து ஸ்டேசனுக்குக் கூட்டிச்சென்று ஜட்டியோடு உட்கார வைத்தார்கள். என் உறவினர் உமேசையும் கைது செய்தது, போலீஸ்.

இந்த அளவுக்கு நடவடிக்கை எடுக்க என்ன காரணம்னா… கடந்த மாதம் மைய அரசின் உள்துறை அமைச்சரகத்திலிருந்து, ஆய்வுசெய்ய அதிகாரிங்க வந்தாங்க. தமிழக மறுவாழ்வுத் துறை அதிகாரி சரஸ்வதி என்னிடம் நிலவரத்தைச் சொல்லச் சொன்னாங்க; நான் இங்க உள்ள நிலைமையைச் சொன்னேன். 96 வீடுகளை உரிய சிமெண்ட் இல்லாம மண்ணவச்சு தரமில்லாமல் கட்டி குடுத்திருக்காங்க; கழிப்பிடம், குடிநீர் எந்த அடிப்படை வசதியும் இல்லங்கிறதப் பற்றிச் சொன்னேன்.

அதற்கு எங்க முகாமின் கியூ பிரிவு எஸ்.ஐ. செல்வராஜ், “தமிழ் நாட்டு மானத்தை டெல்லி அதிகாரிங்க முன்னாலே வாங்கிட்ட; ஏற்கனவே உன் மேல விடுதலைப் புலிகளோட கொடியை முகாமில் ஏற்றினதா ஒரு கேஸ் இருக்கு; நான் தான் அப்போ நல்ல பையன்னு சொல்லி உன்னை தப்பவச்சேன். இப்போ இதுமாதிரி பண்ணிகிட்டிருக்க. டி.எஸ்.பி. சிவலிங்கம் நட வடிக்கை எடுத்தா நான் ஒண்ணும் பண்ண முடியாது’என்று சொன்னாரு. அதுக்குப் பிறகுதான் சுரேந்திரனோட கால்கள இப்படி கடுமையா உடைச்சிட்டாங்க…என்று கூறினார், சிவகுமார்.

காயமடைந்திருக்கும் சுபேந்திரன் நம்மிடம், நாங்க சண்டையிட்டு புகார் தந்தது உண்மைதான். அதற்கு போலீஸ் ஏன் என்னைத் தாக்கவேண்டும்? என் நெஞ்சில் ஏறி மிதித்தார்கள். கால்களை உடைத்து விட்டார்கள். போலீஸ் நிலையத்தில் வந்து என் மனைவி கெஞ்சியதும், “சொந்த நாட்டுக்குத் திரும்பிப் போயிடுங்க; இல்லைனா கொன்னுடுவோம்’ என மிரட்டினார் இன்ஸ்பெக்டர் டில்லிபாபு. உடனே பொன்னேரி மருத்துவமனையில் என்னைச் சேர்த்தார் என் மனைவி. அங்கிருந்து சென்னை ஸ்டேன்லி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பினார்கள்.

அங்கு இரண்டு கட்டு போட்டு விட்டு, அனுப்பி விட்டார்கள். தாக்குதலால் என் கால்கள் சேதமடைந்து விட் டன. படுத்த படுக்கையில்தான் எல்லாமே..! தினமும் பெயிண்ட் அடிக்கும் வேலைக்கும் போக முடியாமல் முடக்கிவிட்டது. என்னைத் தேவையில்லாமல் தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் வேதனையோடு.

சுபேந்திரனின் மனைவி தர்சினி கூறுகையில், இவ்வளவும் செய்து விட்டு, கடந்த 10ம் தேதி முதல் தொடர்ச்சியாக சிப்காட் போலீசார், 1,500 ரூபா முதல் 5 ஆயிரம் வரை பேரம் பேசி, எங்களைப் பகைத்துக் கொள்ள வேண்டாம் எனக் கூறிச் செல்கிறார்கள். எங்களுக்கு தன்மானத்தை இழந்து வாழ்வதைவிட இறந்து போவதே மேல்.. தொடர்ச்சியாக இப்படி டார்ச்சர் செய்தால், குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வதைத் தவிர, வேறு வழியில்லை. என் கணவரை கடுமையாகத் தாக்கியதற்கு நியாயம் வேண்டும் என்றார் கண்ணீர் மல்க!

குற்றச்சாட்டை மறுத்த சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் டில்லி பாபு, சுபேந்திரன், சிவகுமார் ரெண்டு பேருமே பெப்ரவரி. 22ம் தேதியன்னைக்கு பரஸ்பரம் அடுத்தவர் தாக்கிட்டதா புகார் தந்தாங்க. ரெண்டு தரப்பு மீதும் வழக்குப்பதிவு செய்தோம். நடவடிக்கைக்கு பயந்து இப்போது ஒண்ணுசேர்ந்து நாடகம் ஆடுறாங்க என்று நம்மிடம் பதிலளித்தார்.

Previous articleபூண்டினை வெறும் வயிற்றில் சாப்பிடலாமா?
Next articleபுலிகளின் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ள! வித்தியா மற்றும் ஹரிஸ்ணவி படு கொலைகள்!