தமிழ் மக்களை ஏமாற்றும் முயற்சியை மீள்குடியேற்ற அமைச்சு கைவிட வேண்டும்! சிறிதரன் எம்.பி சாடல்

9488இன நல்லிணக்கம் பேசிக்கொள்ளும் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் வடக்கு மாகாண மக்கள் பிரதிநிகள் எதிர்க்கும் வீட்டு திட்டத்தை நடைமுறைப்படுத்த துடிப்பது ஏன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன், தமிழ் மக்களை ஏமாற்றும் இந்த முயற்சியை மத்திய மீள்குடியேற்ற அமைச்சர் கைவிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கோப்பாயில் அமைக்கப்பட்டு வரும் 65 ஆயிரம் வீட்டு திட்டம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

மீள்குடியேற்ற அமைச்சர் தனது சுய விருப்பு, வெறுப்புகளுக்காக தமிழ் மக்களை அடகு வைத்து வழங்கும் வீட்டு திட்டத்தை அமைக்க அவர் முன்வரக்கூடாது.

முன்னதாக தமிழ் மக்கள் 32 லட்சத்து 25 ஆயிரம் பெறுமதியான நேர்ப் வீட்டு திட்டம் மற்றும் 5 லட்சத்து 50 ஆயிரம் பெறுமதியான இந்திய வீட்டு திட்டம் ஆகியவற்றை கட்டி அனுபவப்பட்டுள்ளனர்.

அத்துடன், 8 லட்சம் ரூபா பெறுமதியான் ஐரோப்பிய வீட்டு திட்டத்தையும் கட்ட தயாராக உள்ளார்கள்.

இந்நிலையில், வடக்கில் சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு வீடுகள் தேவையாக இருக்கின்ற போது 21 லட்சத்தில் பொருத்தும் வீட்டு திட்டம் ஒன்றை மீள்குடியேற்ற அமைச்சர் முன்னெடுத்துள்ளார்.

இந்த வீட்டு திட்டத்தின் ஊடாக தொலைக்காட்சி தரலாம், வைபை தரலாம் என ஆசை வார்த்தை கூறி அவர்களுடைய நிரந்தர வாழ்வில் ஒரு பங்கம் ஏற்படும் வகையில் அமைச்சர் சுவாமிநாதன் செயற்பட கூடாது

தமிழ் மக்கள் தங்கள் வீட்டுக்கு பத்து இலட்சம் ரூபா வழங்கினால் போதுமானது, அவர்கள் தங்களது வீடுகளை தாராளமாக கட்டி கொள்வார்கள்.

எனவே, மக்களுடைய வாழ்வாதரம் மற்றும் சூழல் என்பவற்றை கருத்திற் கொண்டே அரசாங்கம் வீட்டினை அமைக்க வேண்டுமே ஒழிய, அரசாங்கம் நினைக்கும் வீட்டினை மக்களுக்கு தமது சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக திணிக்க கூடாது.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு மாகாண சபை உள்ளது. அதன் முதலமைச்சர், அமைச்சர்கள், உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரது கருத்துக்களை புறக்கணித்து விட்டு, மத்திய அரசில் இருக்கும் தாங்கள் ஒரு கொள்கையை வகுத்து கொண்டு, அந்த கொள்கையின் அடிப்படையில் பத்திரிகைகளில் விளம்பரம் கோரி மக்களை குழப்புகின்ற நடவடிக்கைகளை அமைச்சர் சுவாமிநாதன் கைவிட வேண்டும்.

அவர் அமைச்சர் என்பதற்காக தான்தோன்றி தனமாக செயற்பட முடியாது. நல்லாட்சி பற்றி தமிழ் மக்கள் நல்ல வகையில் சிந்திக்க வேண்டும் என்றால் இதனை கைவிட வேண்டும்.

நல்லாட்சி அரசில் அமைச்சர் சுவாமிநாதனுக்கு இந்த பதவி கிடைப்பதற்கு தமிழர்களும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் தான் காரணம்.

நல்லாட்சி அரசில் அங்கம் வகித்து கொண்டு நல்லிணக்கம் பற்றி பேசும் தமிழ் அமைச்சர்கள் இதனை சிந்திக்க வேண்டும்.

எனவே, இந்த வீட்டு திட்டம் பற்றி சிறந்த திட்டமிடலுடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இவ் வீடமைப்பு திட்டம் தொடர்பான மேலதிகமாக அறியப்பட்ட விடங்களையும் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

1. ஜரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் இலங்கை அரசாங்கத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டு பிரான்ஸ் நாட்டு கம்பனி மூலம் சீன நாட்டின் முகவர் அமைப்பு ஒன்றின் மூலம் பொருத்தும் வேலைகள் செய்வதற்கு உடன்படிக்கை செய்துள்ளதாக அறியமுடிகின்றது.

2. ஒரு வீட்டின் பெறுமதி 21, இலட்சம் இலங்கை பெறுமதி

3. அத்திவாரம் நிலம் இழுக்கப்பட்டு 550 சதுர அடி அளவில் இரு அறை கொண்ட பொருத்தும் வீடு மேற்கொள்ளப்படும்.

4. ஆயுட்காலம் 15 வருடங்கள் உத்தரவாதம் என கூறப்படுகின்றது.

5. வீட்டுடன் வீட்டுத் தளபாட பொருட்களாக டபிள் கட்டில், தனி கட்டில், கதிரை சோபா செற்றி, மேசை, பான், டிவி, கணணி, வைபை வசதி, அலுமாரி (உலோகம்) போன்ற பொருட்களும் வழங்கப்படும்.

6. இவ் வீட்டில் சமைப்பதற்கு காஸ் அடுப்பு மாத்திரம் பயன்படுத்த முடியும். வுpறகினால் ஆன எரி அடுப்பு பயன்படுத்த முடியாது

7. ஓருவார காலத்தில் பொருத்தி வீடு முடிவுறுத்தப்படும்

இவ் வீட்டுத் திட்டம் தொடர்பாக பின்வரும் கேள்விகள் எழுகின்றன

1. இவ் வீடமைப்பு எமது மக்களுக்கும் எமது கலாச்சரா சூழல் முறைகளுக்கு பொருத்தமானதாக அமையுமா?

2. இதன் ஆயட்காலம் 15 வருடம் எனின் மீள வீடமைப்பு தேவைப்படுமா?

3. இதற்கு முன்பு அமைக்கப்பட்ட வீடுகள் கட்டுமான வீடமைப்புத் திட்டமாக இருக்கும் போது இதன் பெறுமதிக்கு மக்களின் விருப்பத்திற்கு அமைய மக்களின் அபிராயங்கள் பெறப்பட்டு திட்டம் தொடர்பாக கலந்துரையாடி சிறந்த வீடமைப்புத் திட்டத்தினை ஏன் மேற்கொள்ள முடியாது?

4. இத் திட்டத்தினை முன்னெடுக்கும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு இத்திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் என விடாப்பிடியாக இருப்பதுடன் பத்திரிகை மூலமாக வீட்டுத்திட்டத்திற்கு விண்ணப்பிக்குமாறு விளம்பரப்படுத்தி (16.03.2016 உதயன் பத்திரிகை 10 பக்கம் ) மாவட்ட அரசாங்க அதிபர் மூலமாக விரைவாக மக்களுக்கு போதிய விளக்கங்கள் இன்றிய விண்ணப்ப பத்திரத்தினை வழங்கி குறுகிய விபரத்தினை பெற்றுக் கொள்வதன் நோக்கம் என்ன ? விண்ணப்ப பத்திரத்தில் எந்த வகையான வீடமைப்புத் திட்டம் என எதுவும் குறிப்பிடாமல் சில தரவுகளை மட்டும் கொண்டதாக மக்களின் சம்மதம் என விபரம் திரட்டுவது ஏன் ? ஆசை காட்டி மோசம் செய்து கொள்ளும் நோக்கமா?

5. குறித்த அமைச்சினால் முன்னெடுக்கவுள்ள 800,000 ரூபா வீட்டுத் திட்டத்தினை மக்கள் வரவேற்று ஏற்றுக்கொள்ளும்போது பொருத்தும் வீட்டுத்திட்டத்திற்கு கிடைக்கும் நிதியினை மக்கள் விரும்பும் 800,000 ரூபா திட்டத்திற்கு ஏன் மாற்ற முடியாது ? இதனையே மக்கள் மாவட்ட அரசாங்க அதிபரிடம் விரும்பி 800,000ரூபா வீட்டுத்திட்டத்தை தாருங்கள் என கேட்டுவருகின்றனர். இதனை ஏன் குறித்த அமைச்சு செய்ய முடியாதுள்ளது.?

6. மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் கருத்தினை கண்டுகொள்ளாதது ஏன் ?

7. மக்கள் கேட்பதை வழங்குவதை விடுத்து மக்கள் கேட்காததை வழங்க நினைப்பது ஏன்?

Previous articleஅறிவித்தல் விடுத்தால் மட்டுமே யோஷித மன்றில் ஆஜராக வேண்டும் என்ற உத்தரவால் சிக்கல்!
Next articleபிரஸெல்ஸ் தாக்குதல் குறித்து எனக்கு எதுவும் தெரியாது: மவுனம் சாதிக்கும் முக்கிய தீவிரவாதி