சீன விமானப்படை உயர் அதிகாரிகள் இலங்கைக்கு இரகசியப் பயணம்

chinese-airforce-delegation-sri-lanka-2சீன விமானப்படையின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்காவுக்கு இரகசியப் பயணம் ஒன்றை மேற்கொண்டு, சிறிலங்கா விமானப்படை அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளது.

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட ஆறு பேர் கொண்ட சீன விமானப்படை அதிகாரிகள் குழுவுக்கு, சீன விமானப்படையின் அரசியல் ஆணையாளர் லெப்.ஜெனரல் யூ சோங்பூ தலைமை தாங்கினார். இவர் சீன விமானப்படைத் தளபதிக்கு அடுத்த நிலையில் உள்ளவராவார்.

இந்தக் குழுவில், சீன விமானப்படையைச் சேர்ந்த இரண்டு மேஜர் ஜெனரல் தர அதிகாரிகளும், இடம்பெற்றிருந்தனர்.

இவர்கள் கடந்த 21ஆம் நாள்- திங்கட்கிழமை சிறிலங்கா விமானப்படைத் தலைமையகத்தில், விமானப்படைத் தளபதி எயர்மார்ஷல் ககன் புலத்சிங்கள தலைமையிலான உயர்மட்ட அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தினர்.

சிறிலங்கா விமானப்படையின் தற்போதைய பலம் குறித்தும், எதிர்கால சவால்களை சமாளிப்பதற்கான திட்டங்கள் குறித்தும் இவர்கள் சிறிலங்கா விமானப்படை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

இவர்கள் சிறிலங்கா விமானப்படையின் சில தளங்களுக்கும் சென்று பார்வையிட்டுள்ளதாக தெரியவருகிறது.

எனினும், சீன உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளின் பயணத்தின் நோக்கம் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

அதேவேளை, இந்தப் பயணம் தொடர்பான தகவல்களை இருநாடுகளும் இரகசியமாக வைத்திருந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleகவர்ச்சி நடிகையிடம் அறை வாங்கிய நிருபர்…!
Next articleதேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை – பிரிகேடியர் ஜெயநாத்