தெருவோரக் குழந்தைகளுக்கான ஒலிம்பிக் போட்டி! தங்கம் வென்ற தமிழ்ச் சிறுமி

hepsiba1சென்னை, மீனம்பாக்கம் விமானநிலையம் கையில் சூட்கேஸை தள்ளிக் கொண்டு வந்தாள் ஹெப்சிபா.

சர்வதேச தடகள விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற சிறுமி அவர். அவரை வரவேற்க ஒருவரும் இல்லை. எந்த மாலை மரியாதையும் இல்லை. அதை அந்தச் சிறுமி எதிர்பார்ப்பது போலவும் தோன்றவில்லை. அவள் எப்போதும் போல இயல்பாக இருக்கிறாள்.

அவளை வரவேற்க எந்த அரசு இயந்திரமும் வரவில்லை. அரசுத் துறைப் பட்டியலில் விளையாட்டுத்துறை என்ற ஒன்று இருப்பதும் நமக்கு மறந்தே போய்விட்டது. சிறுமி நின்ற இடத்தில் விஸ்வநாதன் ஆனந்தோ, சதீஷ் சிவலிங்கமோ இருந்திருந்தால், விமான நிலையமே அதகளமாகி இருக்கும். என்ன செய்வது, அந்தச் சிறுமி தங்கம் வென்றது தெருவோரக் குழந்தைகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் அல்லவா?

ஹெப்சிபா. சென்னை டவுட்டன் அரசுப் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவி. இவரோடு பிறந்தது நான்கு அக்காக்கள். தந்தை இறந்துவிட்டார். அம்மா ஆராயி பூ வியாபாரம் செய்து வருகிறார். இவர்கள் தங்கியிருப்பது சென்னை மாநகராட்சியின் வீடற்றோர் விடுதியில்தான். விடுதி என்றால் தனித் தனி குடும்பங்கள் தங்கியிருப்பார்கள் என்று கற்பனை செய்து வேண்டாம். நீண்ட ஹாலில் ஆறு குடும்பங்கள் வரையில் திரைச்சீலை கட்டி குடியிருப்பார்கள். நல்ல கழிப்பிடம், நல்ல உணவு, நல்ல உடை என எதற்கும் வழியற்ற, ஏழ்மை மட்டுமே வாசம் செய்யும் இடம் அது. இப்படிப்பட்ட சிறுமிதான் 100 மீட்டர் தடகள ஓட்டத்தில் தங்கப் பதக்கமும், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கமும், 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப் பதக்கமும் குவித்திருக்கிறார்.

‘ஸ்ட்ரீட் சைல்டு யுனைடெட்’ என்ற லண்டனைச் சேர்ந்த நிறுவனம், பிரேசிலில் தெருவோரக் குழந்தைகளுக்கான ஒலிம்பிக் போட்டியை நடத்தியது. உலகில் முதல்முதலாக நடத்தப்படும் இந்தப் போட்டியில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், அர்ஜென்டினா, எகிப்து, மொசாம்பிக், பாகிஸ்தான் உள்ளிட்ட 9 நாடுகளைச் சேர்ந்த தெருவோரக் குழந்தைகள் இந்தப் போட்டியில் பங்கேற்றனர்.

கடந்த 20-ம் தேதி முடிவடைந்த ஸ்ட்ரீட் ஒலிம்பிக் போட்டியில்தான் ஹெப்சிபா இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இவரைப் போலவே, பாரிமுனை, ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தின் பின்புறம் சாலையோரத்தில் ஒரு ஷெட்டில் குடியிருக்கும் சிநேகா, 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வாங்கினார். ஆதரவற்றோர் விடுதியில் தங்கியிருக்கும் அசோக், குண்டு எறிதலில் வெண்கலப் பதக்கத்தை வாங்கினார். இவர்கள் வென்றது ஏதோ தெருவோரத்தில் நடக்கும் போட்டியில் அல்ல. சர்வதேச அளவில் நடந்த தெருவோர குழந்தைகளுக்கான ஒலிம்பிக் போட்டியில். இவர்கள் எதிர்கொண்டது பிரேசில், மொசாம்பிக், அமெரிக்க அணிகளை.

Previous articleஐ எஸ் தீவிரவாதிகளின் நிலைத் தலைவர் கொல்லப்பட்டார்
Next articleஉண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு ஏப்ரலில் உருவாக்கம்!