விஜயகாந்தை தர்மருடன் ஒப்பிட்டு பேசுவது வேதனையானது: நாஞ்சில் சம்பத் பேச்சு

nanjil_sampath_002ஜெயலலிதாவே மீண்டும் முதலமைச்சராக்க வேண்டும் என மக்கள் முடிவெடுத்து விட்டார்கள் என்று பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
நெல்லை டவுன் தேரடி திடலில் அ.தி.மு.க. அரசின் 5 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றுள்ளது.

கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பேசுகையில், தமிழக சட்டசபை தேர்தலில் தகுதி இல்லாத பலர் நான்தான் முதலமைச்சர் என்று பேசி வருகிறார்கள்.

தி.மு.க. தற்போது பன்னாட்டு கம்பெனி போல் இயங்கி வருகிறது. மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே என்று நேரத்துக்கு நேரம் ஆடைகளை மாற்றி சினிமா ஷூட்டிங் போல் கேலி கூத்து நடத்தியதை மக்கள் விரும்பவில்லை.

ஜெயலலிதா அ.தி.மு.க.வை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றுள்ளார்.

அவரை அவமானப்படுத்த வேண்டும் என்றே தி.மு.க.வினர் பொய் வழக்கு போட்டுள்ளனர். இதன் விளைவு அவர்கள் கட்சிக்குள் குடும்ப சண்டை நடக்கிறது.

அ.தி.மு.க. அரசின் பணி போல எந்த மாநிலத்திலும் பணிகள் நடைபெறவில்லை. இந்தியாவிலேயே சிறந்த முதல்வர் ஜெயலலிதா.

பிரேமலதா ஊழல் இல்லாத ஆட்சி தருவோம் என்று கூறி வருகிறார். ஆனால் அவர்கள் கட்சியில் எம்.எல்.ஏ. சீட் கொடுப்பதற்கே பல லட்சம் லஞ்சம் கேட்டு பெற்றுள்ளார்கள்.

பஞ்ச பாண்டவர்கள் அணி என்று கூறும் அவர்கள் விஜயகாந்தை தர்மருடன் ஒப்பிட்டு பேசுவது வேதனையானது.

விஜயகாந்தால் தனியாக நிற்கவே முடியாது. எப்படி ஜெயிக்க முடியும். மொத்தம் 6½ சதவீதம் ஓட்டு வைத்துள்ள அவர்கள் முதல்வர் பதவி மீது ஆசைபடக்கூடாது.

பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றது. தற்போதும் அ.தி.மு.க. வெற்றி உறுதியாகி விட்டது. ஆட்சியை புதுப்பிக்க வேண்டிய வேலை மட்டுமே உள்ளது. தமிழகத்தில் 44.3 சதவீதம் ஓட்டு அ.தி.மு.க.வுக்கு உள்ளது. 1½ கோடி உறுப்பினர்கள் உள்ளார்கள்.

இந்த ஆட்சி நீடிக்க வேண்டும் என மக்கள் கருதுகிறார்கள். ஜெயலலிதாவே மீண்டும் முதலமைச்சராக்க வேண்டும் என முடிவெடுத்து விட்டார்கள்.

அ.தி.மு.க. மீண்டும் கோட்டைக்கு வரும் உங்களது ஓட்டுக்களை அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு அளித்து, ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி நீடிக்க, நிலைக்க உத்தரவாதம் தாருங்கள் என பேசியுள்ளார்.

Previous articleகுடும்பத்தினருடன் Fogo தீவிற்கு சென்ற கனடிய பிரதமர்! ஈஸ்டர் திருநாள் கொண்டாட்டம் (வீடியோ இணைப்பு)
Next article20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீசுக்கு அதிர்ச்சி அளித்தது ஆப்கானிஸ்தான்