படையினரின் மனோநிலை மாறவில்லை – ஒப்புக்கொள்கிறார் யாழ். தளபதி மகேஸ்

Major-General-Maheshஇறுதிப்போரில் ஈடுபட்ட சிறிலங்கா படையினரின் மனோநிலையில் இன்னமும் மாற்றங்கள் ஏற்படவில்லை என்பதை யாழ் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.

பலாலியில் உள்ள யாழ். படைகளின் தலைமையகத்தில், நேற்று ஊடகவியலாளர்களுடன் நடந்த சிறப்புக் கலந்துரையாடலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

”வடக்கில் தமிழ் ஊடகவியலாளர்கள் மீது தொடர்ச்சியாக, படைத்தரப்பின் கண்காணிப்பு அல்லது அவர்களை பின்தொடரும் எந்த சம்பவங்களும் இடம்பெறுவதில்லை. தொடர்ச்சியாக இந்தக் கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருவது வெறும் வதந்தி மட்டுமே.

2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்ததில் இருந்து எமது இராணுவம் மிகவும் பலமான நிலையில் உள்ளதுடன், மக்கள் மத்தியில் மிகவும் கண்ணியமாகவும் தமது கடமைகளை மேற்கொண்டு வருகிறது.

ஊடகத்துறைக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் இருந்த நெருக்கம் மிகவும் குறைவாக இருந்தமை இவ்வாறான கருத்துகளை ஏற்படுத்த காரணமாக அமைந்து விட்டது.

வடக்கில் உள்ள தமிழ் ஊடகவியலாளர்கள், இராணுவத்தினருடன் கொண்டிருந்த தொடர்பு குறைவாகவே இருந்தது. வடக்கில் ஊடகவியலாளர்களையோ அல்லது ஊடகங்களையோ கட்டுப்படுத்த வேண்டிய தேவை எப்போதும் இராணுவத்தினருக்கு இருக்கவில்லை.

ஒரு சிலரின் கருத்துகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தவறான கருத்துகளை மேற்கொள்ள வேண்டிய தேவை இல்லை.

போர் நடந்த காலத்திலும், இறுதி போர் நடந்த காலத்திலும் களத்தில் இருந்து போராடிய இராணுவத்தினர்இன்றும் இராணுவத்தில் உள்ளனர். அவர்களின் மனநிலைமை இன்னும் சற்று மாறுபட்ட ஒன்றாகவே உள்ளது. அவர்களையும் மக்களையும் ஒன்றிணைக்கும் வேலைத்திட்டங்களை விரைவில் சரிசெய்ய முடியும் .

எந்த அரசாங்கமாக இருந்தாலும் எந்த அணியினர் ஆட்சியை கைப்பற்றினாலும் நாம் எந்த அரசாங்கத்தையும் சார்ந்து கட்சிகளைப்போல செயற்பட முடியாது.

எமது கடமை நாட்டின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்தி நாட்டை காப்பாற்றுவதேயாகும். அதை நாம் ஒவ்வொரு முறையும் சரியாக செய்து வருகிறோம்.

நீண்டகால போராட்டத்தில் பல இழப்புகளின் பின்னர் நாம் போரை வெற்றிகொண்டு நாட்டை பாதுகாத்துள்ளோம். அந்த வெற்றியை மீண்டும் தாரைவார்த்து நாட்டை பிரச்சினைக்கு உள்ளாக்க நாம் விரும்பவில்லை.

அதேபோல் போர் முடிவுக்கு வந்ததில் இருந்து பெருமளவில் பொதுமக்களின் காணிகளை இராணுவம் தக்கவைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்த நிலங்களில் அரச நிலங்களும் பெரும்பாலான பொதுமக்களின் நிலங்களும் உள்ளடக்கப்பட்டன.

அரச நிலங்களில் பாதுகாப்பு முகாம்களை தொடர்ந்தும் வைத்திருப்பது எந்த சிக்கலையும் ஏற்படுத்தாது. ஆனால் பொதுமக்களின் காணிகளில் இராணுவ முகாம்களை அமைக்கவோ அல்லது இராணுவத்தை தங்கவைக்கவோ முடியாது.

ஆகவே போரின் பின்னர் இராணுவம் வசம் இருந்த பொதுமக்களின் காணிகளை உரிய மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் பொறுப்பு எமக்கு உள்ளது. இப்போது வரையிலும் பொதுமக்ளின் காணிகளை நாம் அவர்களிடம் ஒப்படைத்து வருகின்றோம். எஞ்சியுள்ள காணிகளையும் உரிய மக்களுக்கு ஒப்படைப்பது எமது பொறுப்பாகும்.

அதேபோல் இராணுவ வெளியேற்றம் அல்லது தேசிய பாதுகாப்பு விடயத்தில் கேள்வியை ஏற்படுத்தும் வேலைத்திட்டங்களை மேற்கொள்வதாக சிலர் கூறுகிறனர். ஆனால் அவ்வாறான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

ஆட்சி மாற்றத்தின் பின்னர் வடக்கில் தேசிய பாதுகாப்பு செயற்பாடுகளுக்கு அச்சம் ஏற்படுத்தும் எந்த சூழலும் இல்லை. பொதுமக்கள் தேசிய பாதுகாப்பை பாதுகாக்கும் வகையில் எமக்கு ஒத்துழைப்பு கொடுத்து செயற்படுகின்றனர்.

அதேபோல் இராணுவம் மட்டுமல்லாது கடற்படையினர், விமானப்படையினரின் முழுமையான ஒத்துழைப்புடன் வடக்கின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Previous articleதிருமலை கிறிஸ்தவ மயானத்தில் தீ
Next articleநாடாளுமன்ற உறுப்பினராகும் ஆசையில் கோட்டா!