வடக்கில் உருக்கு வீடுகள் அமைக்கும் உடன்பாட்டை இறுதி செய்ய வருகின்றனர் மிட்டலின் பிரதிநிதிகள்

house-2 (1)போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில் 65 ஆயிரம் உருக்கு வீடுகளை அமைக்கும் திட்டம் தொடர்பான, உடன்பாட்டை இறுதி செய்வதற்காக, இந்திய வம்சாவளித் தொழிலதிபரான லக்ஸ்மி மிட்டலுக்குச் சொந்தமான, ஆர்சிலோர் மிட்டல் நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று வரும் 31ஆம் நாள் கொழும்பு வரவுள்ளது.

இந்த உடன்பாட்டை இறுதி செய்வது தொடர்பாக சிறிலங்கா அமைச்சரவை நியமித்துள்ள, கேள்விப்பத்திர சபையுடன், இந்தக் குழுவினர் பேச்சுக்களை நடத்தவுள்ளதாக, சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதன் பின்னர், உடன்பாட்டு வரைவு, அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

உருக்கினால் தயாரிக்கப்பட்ட பொருத்து வீடுகள் வடக்கின் காலநிலைக்கு ஏற்புடையதல்ல என்றும், நடைமுறைப் பிரச்சினைகள் பலவற்றைக் கொண்டுள்ளதாகவும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.

இந்த வகையான வீடுகளை அமைக்கும் திட்டத்தை மறுபரிசீீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் சிறிலங்கா அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ஆனாலும், சிறிலங்கா அரசாங்கம் இந்த திட்டத்தை பிடிவாதமாக நடைமுறைப்படுத்தும் முயற்சிகளில் இறங்கியுள்ளது.

Previous articleநாடாளுமன்ற உறுப்பினராகும் ஆசையில் கோட்டா!
Next articleபுலிகளின் தனி ஈழக் கனவு இன்னும் தோல்வியடைவில்லை!- ஜனாதிபதி பேட்டி