EPDPயால் அபிலாஷைகளை வென்றெடுக்க முடியாது: சந்திரகுமார்

chandrakumar01மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றவே ஈழ மக்கள் ஜனநாயக கட்சியிலிருந்து விலகியதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் உடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ‘தமிழ் அரசியல் நிலைமைகளில் மாற்றம் வரும், அந்த மாற்றம் வந்தே ஆக வேண்டுமென்று நம்புகின்றேன். அந்த சூழ்நிலை தற்போது இருக்கின்றது. இன விடுதலைக்காக மட்டுமே சிந்திப்பதாக எமது தமிழ் அரசியல் காணப்படுகின்றது.

Advertisement

எமக்குள் சமூக ரீதியான பிரச்சினைகள் நிறைய இருக்கின்றன. தமிழ் தரப்பிற்குள் ஜனநாயக கட்டமைப்பு இல்லை. அதனை உருவாக்குவதற்கான பங்களிப்பினை வழங்குவதற்காகவே, ஈழ மக்கள் ஜனநாயக கட்சியில் இருந்து வெளியில் வந்துள்ளேன்.

வன்னி மாவட்டத்தில் உள்ள மக்களின் அரசியல் அபிலாஷைகள் வேறு விதமாக இருக்கின்றது. அதனை தேர்தல் முடிவில் புரிந்துகொண்டேன். அந்த வகையில், மக்களின் அபிலாஷைகள், உணர்வுகளை புரிந்துகொண்டுள்ளேன்.

ஈ.பி.டி.பி.யிலிருந்தால், மக்களின் அபிலாஷைகளை வென்றெடுக்க முடியாது என மக்கள் என்னைத் தூண்டியதால் வெளியில் வந்துள்ளேன். ஆனால், அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான தன்மை இருக்கின்றதா என ஈ.பி.டி.பி.யின் தலைமைத்துவத்திடம்தான் கேட்க வேண்டும். நட்புறவு ரீதியில் பல கட்சிகளுடன் கலந்துரையாடி வருகின்றேன். ஆனால், கட்சியில் இணைவது குறித்து கலந்துரையாடவில்லை’ எனவும் தெரிவித்துள்ளார்.