வடக்கில் நடப்பது திகில் சம்பவங்களா? என்ன தான் நடக்கிறது இப்பொழுது!

Captureதமிழ் இனத்தின் மீது நீண்டகாலமாக இடம்பெற்ற இனவழிப்பு போர் முள்ளிவாய்க்காலில் முடிவடைந்து, ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் முள்ளிவாய்க்காலில் இழந்த உயிரிழப்பிற்கு நிகராக இப்பொழுது நாளுக்கு நாள் உயிர்களை இழந்து வருகின்றோம்.

அண்மைய நாட்களாக வாள்வெட்டுச் சம்பவங்கள் அதிகரித்து, வடக்கில் அதிகளவான இளைஞர்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டும், படுகாயமடைந்தும் ஒரு வகையான சினிமா திரைப்படங்கள் பார்ப்பதைப் போன்று நாளுக்கு நாள் செய்திகள் படித்துக் கொண்டிருக்கின்றோம்.

ஆனால் இந்த வாள் வெட்டுக்கு இணையாக வீதி விபத்துக்களினால் அதிகளவான உயிர்களை காவு கொள்ளும் விபத்துகள் தாராளமாக நடந்துவருகின்றன.

Advertisement

இவ்விபத்துக்களை சாதாரணமாக நிகழ்பவையாக ஒருபுறமிருக்க, இன்னொருபுறம் மர்மமான முறையிலான விபத்துக்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

இன்று கோண்டாவில் பகுதியில் இருவர் புகையிரத தண்டவாளத்தில் உறக்கத்தில் இருந்த வேளை இறந்துள்ளனர். இந்த சம்பவத்தினை சாதாரண விபத்தாக எடுத்துக் கொள்ள முடியாதது.

காரணம் குறித்த விபத்தில் இறந்த இருவரும் கோண்டாவில் பகுதியைச் சேர்ந்தவர்கள் அல்ல என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும், அவர்கள் அங்கு வேலை செய்பவர்களா எனில் அப்படியான எந்த தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில் மிகப்பெரிய சந்தேகங்கள் இப்பொழுது எழத்தொடங்கியுள்ளன.வடக்கில் அண்மைக்காலமாக மர்மமான முறையில் நிகழும் கொலைகளும், அதற்குப் பின்னர் அவை தற்கொலைகள் எனும், முடிவில் அத்தோடு விசாரணைகள் முடிவுக்கு கொண்டு வரப்படுகின்றன.

இன்னும் சில விசாரணைகள் தொடர்ந்தாலும் அவை காலம் கடந்து செல்லும் நிலைக்கே தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

நேற்றைய தினமும், யுவதி ஒருவர் சுன்னாகம் பகுதியில் புகையிரதம் மோதி பலியாகியுள்ளார். எனினும் இது விபத்தா அல்லது தற்கொலையா என பொலிஸார் விசாரணை ஆரம்பித்துள்ளனர்.

ஆனால் விபத்து, தற்கொலை என்ற இரு கோணத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்படாமல் இது கொலையா என்ற கோணத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

ஏனெனில் இப்பொழுது வடக்கில் கொலைகளுக்கான பல்வேறு சந்தர்ப்பங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன.

எனவே வடக்கில் நிகழும் தற்கொலைகள் உண்மையில் தற்கொலைகள் தானா? இல்லை அவை திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்படுகின்றனவா என்பது தொடர்பான உண்மையான தகவல்களை மக்கள் முன் எடுத்துக் காட்டவேண்டியது காவற்துறையினரின் கடமை.