வடக்கு மாகாண ஆளுநரையும் வெளியேற்ற வேண்டி வரும்!

Captureவடக்கிலுள்ள இராணுவத்தினர் ஒற்றுமைக்கான தூதுவர்கள் என்று வடக்கு மாகாண ஆளுநர் குறிப்பிட்ட கருத்து கண்டிக்கத்தக்கது என வலிகாமம் தெற்கு பிரதேசசபை முன்னாள் தவிசாளர் தி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

ஆளுநரின் இந்தக் கருத்து எமது தமிழ் மக்களைக் கேவலப்படுத்துகின்ற ஒரு செயற்பாடாகும்.

இவ்வாறு அவர் தொடர்ந்தும் கருத்துக்களை முன்வைப்பாராகின் எமது மாகாணத்தை விட்டு ஆளுநரை வெளியேற்றுவதற்கு மக்கள் போராட்டம் நடத்த வேண்டி ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

இது தொடர்பில் அவரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“தமிழ் மக்கள், வடக்கு ஆளுநராக ரெஜினோல்ட் குரே பதவியேற்றபோது ஒரு தமிழ் தெரிந்த ஆளுநர் எமது பிரதேசத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார் என்று மகிழ்ந்தார்கள். ஆனால், எமது மக்கள் போர் வலிகளால் பட்ட காயங்களை எவராலும் ஆற்ற முடியாது. இராணுவ அடக்குமுறையால் – அடாவடித்தனத்தால் – எமது மக்கள் பட்ட வேதனைகள் சொல்லில் அடங்கா.

இது இவ்வாறிருக்க, இராணுவத்தை வெளியேற்றத் தேவையில்லை. அவர்கள் ஒற்றுமைக்கான தூதுவர்கள் என்று வடக்கு ஆளுநர் தெரிவித்த கருத்து எமது மக்களின் போராட்டத்தையும், தியாகங்களையும், உணர்வுகளையும் கொச்சைப்படுத்துவதாகும்.

ஒற்றுமை, நல்லாட்சி என்றெல்லாம் பேசுகின்ற இந்த ஆளுநர் என்றாலும் சரி, அரசு என்றாலும் சரி ஒரு சிங்களப் பிரதேசத்துக்கு தமிழ் ஆளுநரை நியமிக்கட்டும். எமது மாகாண சபையின் செயற்பாடுகளை முடக்குவதற்காக மகிந்த அரசு இராணுவத் தளபதியை ஆளுநராக நியமித்தது.

இராணுவத்துக்கு வக்காலத்து வாங்கும் ஒருவரை மைத்திரியின் நல்லாட்சி அரசு ஆளுநராக நியமித்துள்ளது. இரண்டும் ஒன்றுதான். இவரது இந்தக் கருத்தை எமது மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.