காணி அபகரிப்பு உள்ளிட்ட 58 நிபந்தனைகளை விதித்தது ஐரோப்பிய ஒன்றியம்

sri-lanka-EU-flagsமனித உரிமை மீறல், தமிழர் பிரதேசங்களில் காணி அபகரிப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு போன்ற விடயங்களைக் கருத்தில் எடுக்குமாறு ஐரோப்பிய ஒன்றிம் ஸ்ரீலங்கா அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

இந்த விடயங்கள் உள்ளிட்ட 58 நிபந்தனைகளை முன்வைத்துள்ள ஐரோப்பிய ஒன்றியம் தற்போதைய அரசியல் சூழலை கவனத்தில் எடுத்துக்கொண்டால் மாத்திரமே ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மீள பெற்றுக்கொள்ள முடியுமென கூறியுள்ளது.

குறித்த 58 நிபந்தனைகளில் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவது தொடர்பிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Advertisement

மேலும், தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல், மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு புதிய வழிமுறைகளை ஏற்படுத்துதல், புலம்பெயர் தமிழர்கள் மற்றும் அமைப்புகளின் பெயர்களை தீவிரவாதப் பட்டியலில் இருந்து நீக்குதல், புதிய அரசியல் யாப்பின் ஊடாக அதிகாரங்களை பகிர்தல், வடக்கில் கைப்பற்றப்பட்ட அனைத்து தனியார் காணிகளையும் மீள ஒப்படைத்தல், மீள்குடியேற்றம் மற்றும் தேசிய நல்லிணக்கம் தொடர்பில் கொள்கை ஒன்றை வகுத்தல், இடம்பெயர்ந்துள்ள அனைவரையும் மீளக்குடியேற்றல் மற்றும் காணாமற் போனவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கல் உள்ளிட்ட பல விடயங்கள் அந்த நிபந்தனைகளில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் பட்சத்திலேயே ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பிப்பது தொடர்பில் சிந்திக்க முடியும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

குறுகிய காலப்பகுதிக்குள் இந்த கடுமையான நிபந்தனைகள் நிறைவேற்ற வேண்டுமென ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளதோடு, இது தொடர்பில் பேரம் பேசுவதற்கோ அல்லது நிபந்தனைகளை விதிப்பதற்கோ ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது எனவும் ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில் இந்த நிபந்தனைகளுக்காக ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவதானம் செலுத்தியுள்ளதோடு, இந்த விடயம் குறித்து ஆராய்வதற்கு செயற்குழு ஒன்றையும் நியமித்துள்ளார். இதேவேளை மேலும் கால அவகாசத்தைப் பெற்றுக்கொள்வதற்கு வெளிவிவகார அமைச்சு எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த நிபந்தனைகள் தொடர்பில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்தும் அவதானித்து வருவதோடு, முன்னேற்றங்கள் தொடர்பில் ஆராய்வதாகவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஸ்ரீலங்காவிற்கான தூதுவர் டேவிட் டெலி தெரிவித்துள்ளார்.