ஆணைக்குழு முன் சாட்சியளித்த பெண்ணுக்கு புலனாய்வு பிரிவினர் அச்சுறுத்தல்

6ஜனாதிபதி ஆணைக்குழு முன், சாட்சியமளித்த தன்னை புலனாய்வுப் பிரிவினர் தொடர்ச்சியாக அச்சுறுத்தி வருவதாக பெண்ணொருவர் மன்னார் பிரஜைகள் குழுவிடம் முறையிட்டுள்ளார்.

தனது உறவினர்களில் பலரை இழந்து வாழும், நான்கு பிள்ளைகளின் தாயான ஜெ. ஜெகயோதிஸ்வரி என்பவரையே புலனாய்வு பிரிவினர் அச்சுறுத்தி வருகின்றனர்.

காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு மன்னாரில் கடந்த மார்ச் மாதம் மன்னாரில் காணாமல் போனோர் தொடர்பாக பதிவுகளை மேற்கொண்டது.

Advertisement

இதன்போது, குறித்த பெண் ஆணைக்குழு முன், படையினரினால் கடத்திச் செல்லப்பட்ட தனது உறவினர், இதுவரை விடுவிக்கப்படாமை தொடர்பாக கண்ணீர் மல்க சாட்சியம் அளித்திருந்தார்.

இந்த நிலையில் ஜெகயோதிஸ்வரி சாட்சியமாக தெரிவித்த விடயங்கள் ஊடகங்களில் வெளியாகிருந்தது.

இதுதொடர்பாக தொடர்ச்சியாக மன்னாரில் புலனாய்வு பிரிவினரால் குறித்த குடும்ப பெண் அச்சுறுத்தப்பட்டு வருவதாக மன்னார் பிரஜைகள் குழுவிடம் முறையிட்டுள்ளார்.

இதேவேளை குறித்த பெண் காணாமல் போனோர் தொடர்பில் துணை நிற்கும் பணியில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தில் இணைந்து பணியாற்றி வருகின்றார்.

காணாமல் போனோர் தொடர்பான அமைப்புக்களுடன் இணைந்து செயற்படுவதினால் ஏற்கனவே புலனாய்வு பிரிவினரால் பலமுறை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.

இதுகுறித்து ஏற்கனவே பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளதுடன் மனித உரிமை தொடர்பான அமைப்புகளிடமும் முறையிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், கடந்த 5 ஆம் திகதி காணமால் போனோர் தொடர்பாக சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினால் வங்காலையில் நடைபெறவிருந்த ஒன்று கூடலுக்கான ஏற்பாட்டினை செய்வதற்காக கடந்த 4 ஆம் திகதி வங்காலை கிராமத்திற்கு அயல் கிராமமாகிய நறுவிலிகுளம் சென்றிருந்தார்.

4 ஆம் திகதி இரவு 7.30 அளவில் கடற்படை புலனாய்வு துறையினர் மூவர், தான் இல்லாதபோது தனது வீட்டிற்கு சென்று கதவை தட்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் வீட்டில் இருந்த பிள்ளைகள் வீட்டிற்குள்ளே இருந்தவாறு யார் என கேட்ட போது பதில் எதுவும் தெரிவித்திருக்கவில்லை.

இதனையடுத்து அயல் வீட்டு பெண் ஒருவர் வந்து பார்த்தபோது, தம்மை புலனாய்வு பிரிவினர் என்று தெரிவித்ததுள்ளனர்.

அத்துடன், ஜெகயோதிஸ்வரியை தேடி வந்ததாகவும் காணாமல் போனோர் தொடர்பாக, கூட்டம் நடைபெறவுள்ளதால் விசாரணை செய்ய வந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து வீட்டில் இருந்த பிள்ளைகளை அச்சுறுத்தி சென்றுள்ளதுடன், புலனாய்வு பிரிவினர் தொலைபேசி இலக்கத்தையும் வழங்கி சென்றுள்ளனர்.

இதனையடுத்து, ஜெகயோதிஸ்வரியை புலனாய்வு பிரிவிருடன் தொடர்பு கொள்ளுமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர்.

தமது கிராமத்தில் பலரிடமும் தன்னை பற்றி புலனாய்வு பிரிவினர் விசாரித்து வருவதாகவும், இதனால் தானும் குடும்பமும் மிகவும் அச்சத்தில் இருப்பதாக அவர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.