மாவீரர்களின் முகங்களில் இராணுவத்தின் சப்பாத்துக்கள்,

Veeraththin-Vizhuthukal-1மாவீரர் துயிலுமில்லங்களை ஆக்கிரமித்து அதில் இராணுவ முகாம் அமைத்து, புதைக்கப்பட்ட எமது பிள்ளைகளின் முகம்களிலே அவர்கள் சப்பாத்து கால்களுடன் காலூன்றி நிற்கின்றார்கள். எமது குழந்தைகளின் முகம்களில் இராணுவம் சப்பாத்து கால்கலோடு நிற்கும் நிலையில் நாங்கள் எவ்வாறு நல்லிணக்கம் பற்றி யோசிக்க முடியும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமைகோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

Advertisement

எங்களுடைய காணிகளை இராணுவம் அளக்க நினைக்கும் போது, அடாத்தாக பறிக்க நினைக்கும் போது நீங்கள் சமாதானம் பற்றி எமக்கு சொல்கின்றீர்கள். இராணுவம் எங்களுடைய பிள்ளைகளை அடாத்தாக பிடிக்கும் போது நாங்கள் இராணுவத்தோடு இசைந்து செல்ல வேண்டும் என எங்களுக்கு அறிவுரை கூறுகின்றார்கள். இவை எல்லாம் ஆக்கிரமிப்பு சிந்தனை கொண்டவர்கள் எங்கள் மீது திணிக்கும் மறைமுகமான ஆயுதங்களாகும்.

நாங்கள் ஒரு சிறிய அளவிலான தேசிய இனம், எங்களுடைய அளவை சிதைக்க முடியும். இந்த சிதைப்பு நடவடிக்கை எங்களுக்கு தெரியாமலே நடந்து கொண்டிருக்கும். நாங்கள் ஒரு நூலகத்தில் ஒரு புத்தகத்தை நீண்ட காலம் தேடாமல் இருந்தால் எவ்வாறு அந்த புத்தகம் ஒதுங்கி ஒரு மூலையிலிருந்து பழுதடைந்து பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்து போகுமோ அதே போல் தான் நாங்களும் பூச்சிகளால் அரிக்கப்பட்டு அளிக்கப்பட்டு கொண்டுள்ளோம்.

இந்த அரிப்புக்கள் தான் வாள்வெட்டு, போதைவஸ்தினூடாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இது வெறுமனே பார்வைக்குரிய விடயம் அல்ல ஒவ்வொருவரும் விழிப்படைய வேண்டும். இந்த மாற்றத்தை கொண்டுவர ஒவ்வொரு தமிழனும் தனிமனித ஜனநாய ஆயுதமாக மாற வேண்டும். அது உங்களிடம் இருக்கும் பாரிய கடமை என்றார்.