கனடா நாட்டில் 8 வயது சிறுமியை கற்பழித்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை குறைக்க வேண்டும் என்ற மேல்முறையீட்டு மனுவை நீதிபதி அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளார்.
ரொறொன்ரோ நகருக்கு அருகில் உள்ள உட்ஸ்டாக் என்ற பகுதியில் விக்டோரியா ஸ்டாபோர்டு என்ற 8 வயது சிறுமி வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், இதே நகரை சேர்ந்த மைக்கேல் ராப்டரி என்ற நபர் சிறுமியை கடத்திச் சென்று கொடூரமாக கற்பழித்து கொலை செய்துள்ளார்.
இக்கொலை தொடர்பான விசாரணையில் சிக்கிய மைக்கேலுக்கு கடந்த 2012ம் ஆண்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
மேலும், அடுத்த 25 ஆண்டுகளுக்கு குற்றவாளி பரோலில் வெளியே செல்லவும் நீதிபதி தடை விதித்துள்ளார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து குற்றவாளியின் வழக்கறிஞர் மேல் முறையீடு செய்துள்ளார்.
அதில், ‘நீதிபதி தீர்ப்பளித்தபோது பல பிழைகளை செய்துள்ளார். குற்றம் சுமத்தப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை விதித்தது ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், தண்டனையை குறைக்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.
ஆனால், முந்திய நீதிபதி அளித்த தீர்ப்பில் எவ்வித பிழைகளும் இல்லை என்றும், குற்றவாளி மீதான அனைத்துக் குற்றங்களும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை குறைக்க முடியாது எனக் கூறி நீதிபதி மேல் முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்துள்ளார்.
நீதிபதியின் இத்தீர்ப்பு மரணமடைந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.