Home சுவிஸ்லாந்து செய்திகள் சுவிட்சர்லாந்தில் இரு கவிதை நூல்கள் வெளியீட்டு

சுவிட்சர்லாந்தில் இரு கவிதை நூல்கள் வெளியீட்டு

bookதிருமதி சுஜாதா இந்திரன் அவர்களது “கவிமலர்” மற்றும் திரு.இந்திரன் அவர்களது “இந்திரன் கவிதைகள்” கவிதைப் புத்தக வெளியீட்டு நிகழ்வு

சுவிசில் 06.11.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று உலக பூப்பந்தாட்ட சம்மேளன நிறுவனரும் ஒருங்கிணைப்பாளரும் சுவிஸ் சதுரங்க சம்மேளன நிறுவனருமாகிய திரு.கந்தையா சிங்கம் அவர்களது தலைமையில் கவிதை நூல் வெளியீடு அமைதியாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது.

மேற்படி நிகழ்வு முறைப்படி தமிழறிஞர் அகளங்கன் எழுதிய தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல், அகவணக்கம், நூலாசிரியை திருமதி.சுஜாதா இந்திரன் அவர்களது வரவேற்புரை என ஆரம்பமாகியது.

மேலும் தலைவர் உரையில் திரு.கந்தையா சிங்கம் அவர்கள் இங்கே சுவிஸ் நாட்டில் உள்ள இலக்கிய ஆர்வலர்களும் இங்குள்ள தமிழ் வளர்க்கும் அமைப்புகளும் இணைந்து செயற்பட வேண்டும் என்றும், இவ்வாறான நிகழ்வுகளை ஊக்குவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அடுத்து நூல் வெளியீட்டு வைபவம் நடைபெற்றது. முதல் நூலை கவிஞர் திரு.கல்லாறு சதீஸ் அவர்கள் வெளியிட லுசேர்ன் தமிழ் மன்றத்தின் தலைவரும் ஆசிரியருமாகிய திரு தர்மபாலன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

இரண்டாவது மலரை திரு.தர்மபாலன் அவர்கள் வெளியிட திருமதி.கல்லாறு சதீஸ் அவர்கள் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து வந்திருந்தோர்கள் அனைவரும் நூல்களைப் பெற்றுக் கொண்டனர்.

திரு. அசோக் அவர்கள் நூல் விமர்சனம் செய்தார் அவர் மேலும் பேசுகையில் புலம்பெயர் நாடுகளில் நூல் வெளியீடுகள் என்பது மந்தகதியில் இருப்பதை சுட்டிக்காட்டினார்.
அடுத்ததாக கவிஞர் கல்லாறு சதீஸ் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார் அவர் பேசுகையில் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாகப் புலம் பெயர்ந்த தமிழர்கள் இங்கே குறிப்பாக இலக்கியத் துறையில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் இந்நாட்டு ஆய்வாளர்கள் கூட அதை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் எடுத்துக் கூறினார்.

பின்னர் ஆசிரியரும் பேச்சாளருமாகிய திரு.பற்றிக் நற்குணநாதன் அவர்கள் கவிதைநூல் ஆய்வுரை செய்தார் அதிலே அவர் பல்வேறு நூல்களை ஒப்பிட்டுச் சிறப்பாகப் பேசியிருந்தார்.

சூரிச் தமிழ்ப் பாடசாலைப் பொறுப்பாளர் திரு அன்டன் ரட்னா அவர்கள் தனது உரையில் தமிழ்த் தேசியம் பற்றியும் வெளிநாட்டுச் சூழல் பற்றியும் பேசினார்.
மற்றும் லுசேர்ன் தமிழ் மன்றத் தலைவரும் ஆசிரியருமாகிய திரு.தர்மபாலன் அவர்கள் தனது ஆசியுரையில் புலம்பெயர் வாழ்விலுள்ள துன்பங்களையும் துயரங்களையும் கூடத் தொட்டுப் பேசினார்.

சுமார் எண்பதுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் இரண்டாவது நூலாசிரியரான திரு.இந்திரன் அவர்களது நன்றியுரையுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.

விழா ஏற்பாட்டாளர்களால் இந்நிகழ்வில் கிடைத்த நிதியில் ஒரு பகுதியினை தமிழறிஞர் திரு. அகளங்கன் அவர்கள் மூலமாக வன்னியில் உள்ள வறிய மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளது.