Home இந்திய செய்திகள் சாலையில் கிடந்த சடலம்.. சலனமில்லாமல் கடந்த அமைச்சர்! பாரத்த மக்கள் அதிர்ச்சியில்…

சாலையில் கிடந்த சடலம்.. சலனமில்லாமல் கடந்த அமைச்சர்! பாரத்த மக்கள் அதிர்ச்சியில்…

தெலுங்கானா மாநிலம் பூபாலப்பள்ளி மாவட்டத்தில் பாலம்பட் கிராமத்தில் மோட்டார் சைக்கிள் மீது டெம்போ வேன் மோதியதில் தாதுரி மதுசூதனா என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரது நண்பர்கள் கோபி, சதீஷ் ஆகியோர் மோட்டார் சைக்கிளின் பின்புறம் அமர்ந்து சென்றனர். சாலையில் அவர்கள் இருவரும் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

விபத்து நடந்த பகுதிக்கு கிராம மக்கள் ஓடி வந்தனர். ஒருவர் மரணம் அடைந்து கிடக்க, இருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை பார்த்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏதாவது வாகனம் வருகிறதா எனக் காத்திருந்தனர். அந்த சமயத்தில் தெலுங்கானா மாநில பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ஆஸ்மீரா சந்துலாலின் கான்வாய் அங்கே வந்துள்ளது.

அமைச்சர் தனது காரின் முன் இருக்கையில் அமர்ந்து வந்திருக்கிறார். விபத்து நடந்த இடத்தையும் ரோட்டில் ஒருவரது உடல் கிடப்பதையும் பார்த்து விட்டு எந்த உணர்வும் இல்லாமல்தான் கடந்து சென்றிருக்கிறார். காரை விட்டு இறங்கவில்லை. என்ன ஏதுவென்று ஒரு வார்த்தைக் கூட கேட்கவில்லை. எந்த சலனமும் காட்டவில்லை. தனது வேலையை பார்த்துக் கொண்டு போய்க் கொண்டே இருந்தார்.

இத்தனைக்கும் விபத்து நடந்த கிராமம் அவரது முலுகு தொகுதிக்குள்தான் இருக்கிறது. சம்பவ இடத்தில் இருந்த ஜெய்சங்கர் என்ற இளைஞர், அமைச்சர் விபத்து நடந்த இடத்தை சாதாரணமாக கடந்து செல்வதை செல்போனில் புகைப்படமாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். அந்த புகைப்படம் வைரலாக மாறியது. ‘காரின் முன் இருக்கையில் அமைச்சர் அமர்ந்திருந்தார்.

அமைச்சர் சாலையோரத்தில் கிடந்த சடலத்தை பார்த்துவிட்டு கொஞ்சம் கூட மனித நேயமே இல்லாமல் வாகனத்தை நிறுத்தாமல் போய் விட்டார், அவரது தொகுதிக்குள் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. ஆனாலும் பார்த்து விட்டு கருணையற்று சென்று விட்டார்” என ஜெய்சங்கர் தனது வாட்ஸப்பில் பதிவிட்டிருந்தார்.

ஜெய்சங்கரின் வாட்ஸப் பதிவு, ஆயிரக்கணக்கானோரால் ஷேர் செய்யப்பட்டது. ஏராளமானோர் அமைச்சரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர்.எதிர்ப்பு கிளம்பியதைடுத்து தெலுங்கானா பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ஆஸ்மீரா சந்துலால் மறுப்பு தெரிவித்துள்ளார். ” நான் எனது உறவினர் வீட்டுக்கு அவசரமாக சென்றுக் கொண்டிருந்தேன்.

விபத்து நடந்ததாக சொல்லப்படும் இடத்தை கடக்கும் போது என்னிடம் ஒருவர் போனில் பேசிக் கொண்டிருந்தார். அதனால்தான் அந்த சம்பவத்தை என்னால் கவனிக்க முடியவில்லை. இல்லையென்றால் கண்டிப்பாக காரை விட்டு இறங்கி என்னால் முடிந்த உதவிகளை செய்திருப்பேன். எனது தொகுதி மக்கள்தானே.. அவர்களுக்கு உதவத்தானே நான் இருக்கிறேன்” என பதில் அளித்துள்ளார்.

இதற்கு முன் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி டெல்லி யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்று கொண்டிருந்தார். அவரது கான்வாயில் சென்ற போலீஸ் வாகனம் இரு சக்கர வாகனத்தில் மோதியதோடு, ஸ்ம்ரிதி இரானி சென்ற காரின் மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலியானார்.

இரு இளம் பெண்கள் காயமடைந்தனர். ஆனால், ஸ்ம்ரிதி இரானி விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. அதோடு, விபத்துக்கு பின், தான் நலமாக இருப்பதாக ட்விட் செய்து நெட்டிசன்களின் கண்டனத்துக்கும் உள்ளானார்.