Home சிறப்புக் கட்டுரை போரின் கார­ண­மாக இழந்த எனது மகன் உயி­ரோடு இருந்­தி­ருந்தால் நான் பிச்சை எடுக்­க­மாட்டேன்

போரின் கார­ண­மாக இழந்த எனது மகன் உயி­ரோடு இருந்­தி­ருந்தால் நான் பிச்சை எடுக்­க­மாட்டேன்

‘கிழிந்­து­போன கட­தா­சித்­துண்டில் நடுங்­கிய கையெ­ழுத்­துடன், கலந்­தா­லோ­சனை செய­ல­ணிக்கு எழுதிஅனுப்­பிய ஒரு பிச்­சைக்­காரப் பெண்­மணி,‘போரின் கார­ண­மாக நான் இழந்த எனது மகன் உயி­ரோடு இருந்­தி­ருந்தால்,இன்று நான் பிச்சை எடுக்­க­மாட்டேன்‘என குறிப்­பிட்­டி­ருந்­ததை என்னால் இன்னும் மறக்க  முடி­ய­வில்லை’   

நல்­லாட்­சிக்­கான அர­சாங்கம், பிறந்­துள்ள புதிய வரு­டத்தில் தோல்­வி­யுற்ற நிலை­யி­லேயே பிர­வே­சித்­தி­ருக்­கின்­றது. நல்­லாட்­சியை இந்த அர­சாங்­கத்­தினால் வெற்­றி­க­ர­மாகத் தொடர்ந்து முன்­னோக்கி நகர்த்திச் செல்ல முடி­யுமா என்ற கேள்வி இன்று பல தரப்­பிலும், பல மட்­டங்­க­ளிலும் எழுந்­தி­ருக்­கின்­றது.

அர­சாங்­கத்­திற்­குள்ளே பல்­வே­று­பட்ட முரண்­பா­டுகள் எழுந்­துள்­ளன. ஒரு பக்­கத்தில் ஆட்­சியைக் கவிழ்ப்­ப­தற்­கான முயற்­சியில் மஹிந்த ராஜ­பக் ஷ தீவி­ர­மாக ஈடு­பட்­டி­ருக்­கின்றார்.  மறு­பக்­கத்தில் பொது­மக்­களின் எதிர்­பார்ப்­புக்கள் அர­சாங்­கத்­தினால் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. சிறு­பான்மை மக்­களின் பிரச்­சி­னைகள் பல­வற்­றிற்குத் தீர்வு காண்­பதில் அர­சாங்கம் பின்­ன­டை­வையே சந்­தித்­தி­ருக்­கின்­றது.

இதன் கார­ண­மா­கவே நல்­லாட்சி அர­சாங்­கத்தின் ஸ்திரத் தன்மை குறித்த சந்­தே­கங்­களும் கேள்­வி­களும் எழுந்­தி­ருக்­கின்­றன.  ஜன­நா­ய­கத்தை நிலை­நாட்டி, நல்­லாட்சி புரிவோம் என்ற அர­சியல் உத்­த­ர­வா­தமே மைத்­தி­ரி­பால சிறி­சேன – ரணில் விக்­கி­ர­ம­சிங்க குழு­வி­ன­ருக்கு தேர்­தலில் வெற்­றி­யீட்டித் தந்­தது. அந்த அடிப்­ப­டை­யி­லேயே இந்தக் கூட்டு அர­சாங்கம் நல்­லாட்­சிக்­கான அர­சாங்கம் என்ற பெயரை மகு­டத் தைப் பெற்­றி­ருந்­தது.

நல்­லாட்சி என்ற சொல்­லுக்கு அடிப்­படை நல்­ல­ப­டி­யாக நடந்து கொள்­வது. நல்ல முறையில் ஆட்சி செய்­வது. நல்­லி­ணக்­கத்­துடன் நடந்து கொள்­வது என்று பல­வா­றாக, அதற்­கான பொருள்­கோடல் பல்­வேறு பரி­மா­ணங்­களில் விரிந்து செல்லும்.

ஜன­நா­ய­கத்தை நிலை­நி­றுத்­து­வது, நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வது என்­பது இந்த அர­சாங்­கத்தின் அடிப்­படை நோக்கம். ஊழல்­களை ஒழித்து, பாதிப்­பு­க­ளுக்கு நீதி­யையும், நிவா­ர­ணத்­தையும் வழங்கி, அனைத்து மக்­க­ளையும் ஒன்­றி­ணைத்து, பொரு­ளா­தா­ரத்தை வளப்­ப­டுத்தி, நாட்டை முன்­னேற்றிச் செல்­வது என்­பது இந்த ஆட்­சி­யா­ளர்­களின் அர­சியல் இலக்­காகத் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட்ட மைத்­தி­ரி­பால சிறி­சேன, நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்று இரண்டு வரு­டங்­க­ளா­கின்­றன.  ஜனா­தி­பதி தேர்­த­லை­ய­டுத்து, புதிய பிர­த­ம­ராக நிய­மிக்­கப்­பட்ட ரணில் விக்­கி­ர­ம­சிங்க, பொதுத் தேர்­தலின் மூலம் மக்­களால் தெரிவு செய்­யப்­பட்ட பிர­த­ம­ராகி, ஒன்­றரை வரு­டங்­க­ளாகப் போகின்­றது.

இந்த குறு­கிய காலத்­திற்­குள்­ளேயே, நாட்டின் ஜனா­தி­ப­தியும், பிர­த­மரும் மோச­மான அர­சியல் பலப்­ப­ரீட்சை என்ற அக்­கினிப் பிர­வே­சத்­திற்கு ஆளா­கி­யி­ருக்­கின்­றார்கள்.

மிகவும் பலம் பொருந்­திய நாட்டின் இரண்டு தேசிய அர­சியல் கட்­சி­க­ளான ஐக்­கிய தேசியக் கட்­சியும், சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியும் ஆட்சிப் பொறுப்பில் இன்று பல­வீ­ன­மான நிலை­யி­லேயே காணப்­ப­டு­கின்­றன.

எதிரும் புதி­ரு­மாகச் செயற்­பட்டு வந்த இந்த இரண்டு கட்­சி­களும் இணைந்து ஆட்­சி­ய­மைத்­த­தை­ய­டுத்து, இந்த அர­சாங்கம் தேசிய அர­சாங்கம் என்­று­கூட பெரு­மை­யாக அழைக்­கப்­பட்­டது. ஆனால், தேசி­யத்தைப் பறி­கொ­டுத்­த­வர்­க­ளா­கவும், குறு­கிய, அர­சியல் அதி­கார பிடி­வாதப் போக்கைக் கொண்­ட­வர்­க­ளா­க­வுமே நிலை­மைகள் ஆட்­சி­யா­ளர்­களை இன்று தோலு­ரித்துக் காட்­டி­யி­ருக்­கின்­றன.

புன்­மு­றுவல் வர­வேற்பு 

போருக்குப் பின்­ன­ரான நிலையில் நாட்டில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த வேண்டும் என்­பதை முதன்மைச் செயற்­பா­டாக அரசு அறி­வித்­தி­ருந்­தது. அதற்­காகப் பல படி­மு­றை­களில் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும் என்றும் அரசு உறு­தி­ய­ளித்­தி­ருந்­தது.

இதன் அடிப்­ப­டை­யி­லேயே, யுத்த மோதல்­க­ளின்­போது இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள், சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்ட மீறல்கள், மானு­டத்­திற்கு எதி­ரான மோச­மான போர்க்­குற்ற நட­வ­டிக்­கைகள் என்­ப­வற்­றிற்கு, பொறுப்பு கூறு­வ­தற்­கான ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் பிரே­ர­ணைக்கு புதிய அர­சாங்கம் இணை அனு­ச­ரணை வழங்­கி­யி­ருந்­தது.

நாட்டில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தி, கலப்பு விசா­ரணை பொறி­முறை ஒன்றின் மூலம் நிலை­மாறு காலத்தில் நீதியை நிலை­நாட்­டுவோம் என்று அந்த சர்­வ­தேச பேர­வையில் அரசு உறு­தி­ய­ளித்­தி­ருந்­தது.

சர்­வ­தேச நீதி­ப­திகள், வழக்குத் தொடு­நர்கள், விசா­ர­ணை­யா­ளர்கள் இந்த கலப்பு விசா­ரணை பொறி­மு­றையில் இடம்­பெற்­றி­ருக்க வேண்டும். குறிப்­பிட்ட காலத்தில் அந்தப் பொறி­முறை உரு­வாக்­கப்­பட வேண்டும் என்­பது ஐ.நா. மனித உரிமைப் பேரவை பிரே­ர­ணையின் முக்­கிய அம்சம். அதனை அர­சாங்கம் திறந்த மன­துடன் ஏற்­றி­ருந்­தது. அதற்­கான உத்­த­ர­வா­தத்தை அந்த சர்­வ­தேச அரங்­கத்தில் பகி­ரங்­க­மாக அளித்­தி­ருந்­தது.

முன்­னைய ஆட்­சி­யா­ளர்கள், மனித உரிமை மீறல்­க­ளுக்குப் பொறுப்பு கூற வேண்டும் என வலி­யு­றுத்தி இதற்கு முன்னர் மனித உரிமைப் பேர­வையில் கொண்டு வரப்­பட்ட பிரே­ர­ணை­களை ஏற்றுக் கொள்­ள­வில்லை. மூர்க்­கத்­த­ன­மாக எதிர்த்துச் செயற்­ப­டு­கின்ற ஒரு போக்­கையே கடைப்­பி­டித்­தி­ருந்­தனர். இதனால் சர்­வ­தேசம் அந்த அர­சாங்­கத்தை முகம் சுளித்த ஒரு போக்­கி­லேயே நோக்­கி­யி­ருந்­தது.

ஆனால் அந்த வழி­மு­றையில் இருந்து விலகி, யுத்த குற்றச் செயல்­க­ளுக்குப் பொறுப்பு கூறி, நீதியை நிலை­நாட்டும் விட­யத்தில் ஐ.நா.மனித உரிமைப் பேர­வை­யுடன் ஒத்­து­ழைத்துச் செயற்­ப­டு­வ­தற்கு இந்த அர­சாங்கம் முழு­மை­யாக இணக்கம் தெரி­வித்­தி­ருந்­தது.

இதன் கார­ண­மாக, புதிய அர­சாங்கம், சர்­வ­தே­சத்தின் புன்­மு­று­வ­லுடன் கூடிய வர­வேற்பைப் பெற்­றி­ருந்­தது.

மிகுந்த நம்­பிக்­கை­யோடு மக்கள் புதிய அர­சாங்­கத்தை ஆட்­சியில் அமர்த்­தி­யி­ருந்­தார்கள். அந்த நம்­பிக்­கையை மேலும் மேலும் கட்­டி­யெ­ழுப்பி, அரசு பலப்­ப­டுத்­தி­யி­ருக்க வேண்டும்.

அதற்­கு­ரிய இரா­ஜ­தந்­திர ரீதி­யி­லான அர­சியல் வழி­மு­றை­களைப் பின்­பற்றிச் செயற்­பட்­டி­ருக்க வேண்டும். அது நடை­பெற்­ற­தாகத் தெரி­ய­வில்லை. மாறாக, மக்­களின் நம்­பிக்­கையைச் சித­ற­டிக்கும் வகை­யி­லேயே, அதனை சுக்­கு­நூ­றாகச் சிதைக்­கின்ற போக்­கி­லேயே அர­சாங்கம் செயற்­பட்டு வரு­கின்­றது.

கேள்­விக்­கு­றிக்குள் நீதி முறைமை 

முன்­னைய ஆட்­சிக்­கா­லத்தில் இடம்­பெற்ற மிகவும் முக்­கி­ய­மான பல்­வேறு போர்க்­குற்றக் கொலைச் சம்­ப­வங்­களில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நட­ராஜா ரவி­ராஜின் படு­கொ­லையும் ஒன்று. பத்து வரு­டங்­க­ளுக்குப் பின்னர், அது நீதி­மன்ற விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்­டது.

அந்த வழக்கில் ஐந்து பேர் குற்றம் சுமத்­தப்­பட்­டி­ருந்­தார்கள். ஒரு மாத காலம் தொடர்ச்­சி­யாக நடத்­தப்­பட்ட ஒரு ஜுரி முறைமை விசா­ர­ணை­களின் பின்னர் வழங்­கப்­பட்­ட­தொரு நள்­ளி­ரவு நேரத் தீர்ப்பு, அந்த ஐந்து பேரையும் குற்­ற­மற்­ற­வர்கள் எனக் கூறி விடு­தலை செய்­தி­ருக்­கின்­றது.

நிலை­மாறு காலத்தில் நீதி வழங்­கப்­படும் என்ற அர­சாங்­கத்தின் சர்­வ­தேச, உள்ளூர் மட்ட உத்­த­ர­வா­தத்தை இந்தத் தீர்ப்பு சுக்­கு­நூ­றாக்­கி­விட்­டது.

பட்­டப்­ப­கலில் பெருந்­தொ­கை­யானோர் நட­மா­டிய, தலை­ந­கர வீதி­யொன்றில் பகி­ரங்­க­மாக நடத்­தப்­பட்ட இந்தப் படு­கொ­லையை யார் செய்­தார்கள், அதற்கு யார் பொறுப்பு என்­பதை அந்த இரவு நேரத் தீர்ப்பு வெளிப்­ப­டுத்­த­வில்லை.

குற்றம் சாட்­டப்­பட்­ட­வர்கள், இந்தக் கொலைக் குற்­றத்தை இழைக்­க­வில்லை என்­பதைக் கண்­ட­றிந்த அந்த விசா­ரணை, அந்தக் கொலையை யார் செய்­தார்கள் என்­பதைக் கண்­ட­றியத் தவ­றி­விட்­டது. இதனால், நள்­ளி­ரவு முடிவு என்ற கார­ணத்­தி­னால் தான் கொலை செய்­த­வர்கள் யார் என்­பதைக் கண்­ட­றிய முடி­யாமல் போய்­விட்­டதோ?  – என்ற கேள்­வியை சில தரப்­பினர் எழுப்­பி­யி­ருக்­கின்­றனர். இது வெறும் கேள்­வி­யல்ல. அந்தக் கேள்­வியில் பல்­வேறு உணர்­வுகள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது.

நிலை­மா­று­கால நீதியை நிலை­நாட்­டு­வ­தற்குக் கலப்புப் பொறி­மு­றையை ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில் ஏற்­றுக்­கொண்ட அர­சாங்கம் அத்­த­கைய பொறி­முறை அமைக்­கப்­பட மாட்­டாது என்று அந்தப் பிரே­ரணை மாநாட்டின் பின்னர் உள்­ளூரில் தெரி­வித்­தி­ருந்­தது.

நாட்டின் அரச தலை­வ­ரா­கிய நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உள்­ளிட்ட அனைத்து அரச தலை­வர்­களும், நீதி விசா­ரணை பொறி­மு­றையில் சர்­வ­தேச நீதி­ப­திகள் என்ற பேச்­சுக்கே இட­மில்லை என்று அதி­கா­ர­பூர்­வ­மாக அடித்துக்  கூறி­யி­ருக்­கின்­றார்கள்.

உள்ளூர் நீதி­ப­தி­களே விசா­ர­ணை­க­ளுக்குப் பொறுப்­பாக இருப்­பார்கள். நாட்டின் நீதித்­துறை நியா­ய­மா­னது. அதில் அர­சியல் தலை­யீ­டுகள் எதுவும் கிடை­யாது. சுதந்­தி­ர­மாக அது செயற்­பட்டு வரு­கின்­றது. எனவே உள்ளூர் நீதி­ப­தி­களை உள்­ள­டக்­கிய பொறி­மு­றையின் ஊடாக போர்க்­குற்­றங்­க­ளுக்கு நீதி வழங்­கப்­படும் என்றும் அவர்கள் அறி­வித்­தி­ருக்­கின்­றார்கள்.

அர­சாங்­கத்தின் இந்த நிலைப்­பாட்டை மீண்டும் உறு­திப்­ப­டுத்­திய அமைச்­ச­ரவைப் பேச்­சா­ளர்­களில் ஒரு­வரும், அமைச்­ச­ரு­மா­கிய ராஜித சேனா­ரத்ன, ரவிராஜ் கொலை வழக்குத் தீர்ப்பில் தனக்கும் சந்­தே­கமும் கேள்­வியும் இருக்கின்றது என்று செய்­தி­யா­ளர்கள் மத்­தியில் தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்­டப்­பட்­ட­வர்கள் எவரும் ரவி­ரா­ஜையும், அவ­ரது மெய்ப்­பா­து­கா­வ­ல­ரையும் கொலை செய்­ய­வில்லை என தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டி­ருப்­பதைச் சுட்­டிக்­காட்­டிய அவர், அப்­ப­டி­யென்றால், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரவி­ராஜும் அவ­ரு­டைய மெய்ப்­பா­து­கா­வ­லரும், தங்­களைத் தாங்­களே சுட்டுக் கொன்று மர­ண­மா­னார்­களோ என்று வின­வி­யி­ருந்தார். இது தொடர்பில் சட்­டமா அதி­ப­ருடன் தொடர்பு கொண்டு கேட்­ட­தா­கவும் அவர் தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

இந்தக் கொலை வழக்கின் தீர்ப்­பா­னது, நிலை­மா­று­கால நீதி விசா­ரணை பொறி­மு­றையில் சர்­வ­தேச நீதி­ப­தி­களின் பங்­க­ளிப்பு வேண்டும் என்ற பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் கோரிக்­கையை வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்­றது. உள்ளூர் நீதி­ப­தி­களைக்; கொண்ட விசா­ரணை பொறி­மு­றையில் நியா­ய­மான நீதி கிடைக்­காது என்ற நிலைப்­பாட்டை உறு­திப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.

மொத்­தத்தில் இந்தத் தீர்ப்பு இலங்­கையின் நீதித்­து­றையை, அது நீதி வழு­வா­த­து­தானா என்ற கேள்­விக்­கு­றிக்கு உள்­ளாக்­கி­யி­ருக்­கின்­றது.

அரச தலை­வர்கள் வர­வில்லை

நிலை­மா­று­கால நீதிப் பொறி­முறை எவ்­வாறு அமைய வேண்டும் என்­ப­தற்­கான மக்­க­ளு­டைய கருத்­துக்­க­ளையும், ஆலோ­ச­னை­க­ளையும் அர­சாங்கம் கோரி­யி­ருந்­தது. இவற்றைத் திரட்­டு­வ­தற்­கென மூவி­னங்­க­ளையும் சேர்ந்த கல்­வி­மான்கள், துறை­சார்ந்த திறமை மிக்க 11 பேர் கொண்ட நல்­லி­ணக்கப் பொறி­மு­றை­க­ளுக்­கான கலந்­தா­லோ­சனைச் செய­லணி உரு­வாக்­கப்­பட்­டது.

இந்தச் செய­லணி நாடெங்­கிலும் 15 உப குழுக்­களை வலயச் செய­லணி என்ற பெயரில் 92 உறுப்­பி­னர்­களை உள் வாங்­கி­யது. இவர்கள்  அனை­வரும் மக்கள் மத்­தியில் தன்­னார்வ தொண்­டாற்­றி­ய­வர்கள். சிவில் அமைப்­புக்­களைச் சேர்ந்த அனு­ப­வ­சா­லிகள்.

சுமார் ஒரு வருட காலம் செயற்­பட்ட இந்த வலயச் செய­ல­ணிகள், நாட்டின் மூலை முடுக்­கு­களில் உள்­ள­வர்கள் உள்­ளிட்ட பொது­மக்­களின் கருத்­துக்­களை கலந்­தா­லோ­சனை அமர்­வு­களின் ஊடாகத் திரட்­டின.

நல்­லி­ணக்கப் பொறி­மு­றை­க­ளுக்­கான கலந்­தா­லோ­சனைச் செய­ல­ணி­யினர் மக்கள் கருத்­துக்­களை உள்­ள­டக்கி வெளி­யிட்­டுள்ள அறிக்­கையே இப்­போது பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. அர­சாங்­கத்தின் நல்­லி­ணக்கச் செயற்­பா­டுகள் குறித்து பல்­வேறு சந்­தே­கங்­க­ளையும் கேள்­வி­க­ளையும் எழுப்­பி­யி­ருக்­கின்­றது.

இந்த அறிக்­கையை வெளி­யி­டு­வ­தற்­காக ஒழுங்கு செய்­யப்­பட்­டி­ருந்த நிகழ்வில் அரச தலை­வர்­க­ளா­கிய நாட்டின் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகிய இரு­வ­ருமே கலந்து கொள்­ள­வில்லை. இதனை அந்த செய­ல­ணி­யினர் அவர்கள் இரு­வ­ரி­டமும் நேர­டி­யாகக் கைய­ளிப்­ப­தற்­கான ஒழுங்­குகள் செய்­யப்­பட்­டி­ருந்­தன.

ஆயினும், சுக­யீனம் கார­ண­மாக ஜனா­தி­பதி இதில் கலந்து கொள்­ள­வில்லை. வேறு முக்­கிய நிகழ்­வு­களில் கலந்துகொள்ள வேண்­டி­யி­ருந்­த­தனால், பிர­த­ம­ரி­னாலும் கலந்துகொள்ள முடி­ய­வில்லை என்று காரணம் கூறப்­பட்­டி­ருந்­தது. அவர்­க­ளுக்குப் பதி­லாக அவர்­களின் செய­லா­ளர்­களே இதில் கலந்து கொண்­டி­ருந்­தனர்.

இதனால், நாட்டில் நல்­லி­ணக்­கத்­தையும் நீதி­யையும் நியா­யத்­தையும் நிலை­நாட்­டு­வ­தற்­காக மக்­க­ளிடம் இருந்து பெறப்­பட்ட ஆலோ­ச­னை­களைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­குக்­கூட அரச தலை­வர்­க­ளுக்கு நேர­மில்­லாமல் போய்­விட்­டதா, என்ற கேள்வி நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான பணி­களில் ஈடு­பட்­டி­ருப்­ப­வர்கள் மத்­தியில் கசப்­பு­ணர்­வுடன் எழுந்­தி­ருக்­கின்­றது. இத­னை­ய­டுத்து, இந்த அறிக்கை வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர, முன்னாள் ஜனா­தி­ப­தியும், நல்­லி­ணக்­கத்­திற்கும் தேசிய ஒரு­மைப்­பாட்­டுக்­கு­மான செய­ல­கத்தின் தலைவி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க ஆகி­யோ­ரிடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

பாதிக்­கப்­பட்ட மக்­களின் உணர்­வுகள்

இந்த நிகழ்வில் நல்­லி­ணக்கப் பொறி­மு­றை­க­ளுக்­கான கலந்­தா­லோ­சனைச் செய­ல­ணியின் தலைவி மனோரி முத்­தெட்­டு­வே­கம ஆற்­றிய உரை மிகவும் முக்­கி­ய­மா­னது. உணர்ச்சி வசப்­பட்ட நிலையில் அவர் உரை­யாற்­றி­யி­ருந்தார்.

பாதிக்­கப்­பட்ட மக்கள் நீதிக்­கா­கவும், நீதி சார்ந்த நிவா­ர­ணத்­திற்­கா­கவும் எந்த அள­வுக்கு ஏங்கிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள் என்­பதை அவர் தனது உரையில் எடுத்­துக்­காட்­டினார்.

‘கிழிந்­து­போன கட­தா­சித்­துண்டில் நடுங்­கிய கையெ­ழுத்­துடன், கலந்­தா­லோ­சனை செய­ல­ணிக்கு எழுதி அனுப்­பிய ஒரு பிச்­சைக்­காரப் பெண்­மணி, ‘போரின் கார­ண­மாக நான் இழந்த எனது மகன் உயி­ரோடு இருந்­தி­ருந்தால், இன்று நான் பிச்சை எடுக்­க­மாட்டேன்’ என குறிப்­பிட்­டி­ருந்­ததை என்னால் இன்னும் மறக்க முடி­ய­வில்லை’ என குறிப்­பிட்­டி­ருந்தார்.

‘இடிந்து விழுந்த குடி­சையில் தனது பிள்­ளை­களை வாழ வைப்­ப­தற்­கா­கவும், போரின் கார­ண­மாக மன­நோ­யினால் பாதிக்­கப்­பட்ட தனது கண­வனைப் பாது­காக்­கவும், நாளாந்தம் உணவு சமைத்து விற்­பனை செய்யும் இளம் தாய் எனது நினை­வுக்கு வரு­கின்றார். ஆறடி கொண்ட அகதி வீடு­வாசல் பற்­றிய எதிர்­பார்ப்பே இல்­லாத ஒரு சிறுமி, சாதா­ரண பாட­சா­லைக்குச் செல்­வ­தற்­காகக்  கொண்­டி­ருந்த ஆசை எனது மனதில் நிழ­லா­டு­கின்­றது.

முன்னாள் போராளி ஒருவர் துன்­பு­று­கின்ற தனது சகாக்­க­ளுக்­காக ஒழுங்கு செய்­தி­ருந்த தலை­மைத்­துவ ஆற்றல் மற்றும் வலு­வூட்­ட­லுக்­கான வலை­ய­மைப்பு, எதிர்­கால திட்­ட­மி­ட­லுக்­கான தேசிய இயக்­கத்தின் முக்­கி­யத்­து­வத்தை எம் எல்­லோ­ருக்கும் ஞாப­கப்­ப­டுத்­து­வ­தாக அமைந்­தி­ருக்­கின்­றது’ என தனது மனப்­ப­தி­வு­களை மனோரி முத்­தெட்­டு­வே­கம தனது உரையில் வெளி­யிட்டார்.

‘காணாமல் போன தனது கண­வரைத் தேடு­வதில் 25 வரு­டங்­க­ளாகத் தொடர்ச்­சி­யாக அனு­ப­வித்த துன்­பங்­க­ளையும், கஷ்­டங்­க­ளையும் உள்­ளத்தை உறுத்தும் வகையில் விப­ரித்த அம்­பாந்­தோட்­டையைச் சேர்ந்த ஒரு மனைவி ‘தென்­னி­லங்­கையில் வாழும் சிங்­களப் பெண்­ணான எனது நிலை­மையே இது­வாயின், வட­பு­லத்தில் நிலைமை எப்­படி இருக்கும்?’ என துன்­புற்ற நிலை­யிலும் மனி­தா­பி­மா­னத்­துடன் வின­வினார்.

யாரோ ஒரு­வரின் உத­வி­யுடன் எஞ்­சிய வாழ்க்­கையை வாழ நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டுள்ள, போரினால் கடு­மை­யான காயங்­க­ளுக்கு உள்­ளா­கிய முன்னாள் படை வீரர் ஒருவர், ‘நாங் கள் எல்­லோ­ருமே போரின் அவ­லங்­களை அனு ­ப­வித்துக் கொண்­டி­ருக்கின்றோம்’ என்று கவ­ லை­யோடு தெரிவித்தார் என பாதிக்­கப்­பட்ட மக்­களின் மன உணர்­வு­களை அவர் தனது உரையில் வெளிப்­ப­டுத்­தினார்.

பாதிக்­கப்­பட்ட மக்­களின் நம்­பிக்­கையும் எதிர்­பார்ப்பும் 

மக்­களின் கலந்­தா­லோ­ச­னைக்­கான தமது முயற்­சியின் பின்னால் தற்­போ­தைய அரசின் அங்­கீ­கா­ரமும், அனு­ச­ர­ணையும் உண்­டென, பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு உறு­தி­யான நம்­பிக்கை இருந்­தது.  அத்­துடன், தாங்கள் அனு­ப­வித்த மாபெரும் அனர்த்தங்­க­ளுக்கு இந்த அர­சாங்கம் நீதியும் உத­வியும் வழங்­கா­விட்டால் வேறு ஒரு­போதும் இத்­த­கைய நம்­பிக்­கையை வைக்க முடி­யாது என்று அவர்கள் கூறி­யதை மனோரி முத்­தெட்­டு­வே­கம சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.  இந்த நல்­லாட்சி அர­சாங்­கத்தை உரு­வாக்­கி­யதன் மூலம் பாதிப்­பு­க­ளுக்கு நீதி கிடைப்­ப­தற்­கான சந்­தர்ப்­பத்தை வென்­றெ­டுத்­தி­ருப்­ப­தா­கவே பாதிக்­கப்­பட்ட மக்கள் கரு­து­கின்­றார்கள்.

இந்தச் சந்­தர்ப்­பத்தின் ஊடாக (இது­வ­ரை யில்) எது­வுமே நடக்­க­வில்­லையே என்ற ஆதங்­கப்­ப­டு­கின்ற அவர்கள் தங்­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட அநீ­திக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்­ப­தையே கலந்­தா­லோ­சனை அமர்­வு­களில் வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றார்கள். ‘முக்­கி­ய­மான தீர்­மா­னங்­க­ளையும் முடி­வு­க­ளையும் மேற்­கொள்­ளும்­போது, தமது குர­லுக்கும் சந்­தர்ப்பம் அளிக்­கப்­பட வேண்டும் என்­பது அவர்­களின் எதிர்­பார்ப்­பாகும். இது மக்­களின் அர­சியல் உரிமை பற்­றிய அடிப்­படை அம்­ச­மாகும்’ என மனோரி முத்­தெட்­டு­வே­கம அர­சாங்­கத்­திற்கு எடுத்­து­ரைத்­தி­ருக்­கின்றார்.

இவ்­வாறு பல்­வேறு அனு­ப­வங்கள், உணர்­களின் ஊடாகப் பாதிக்­கப்­பட்ட மக்கள் வெளிப்­ப­டுத்­தி­யுள்ள கருத்துகள், ஆலோ­ச­னை­களின் அடிப்­ப­டையில் கலப்பு நீதி விசா­ரணை பொறி­மு­றையே அவ­சியம் என்று நல்­லி­ணக்கப் பொறி­மு­றை­க­ளுக்­கான கலந்­தா­லோ­சனைச் செய­லணி அசாங்­கத்­திற்குப் பரிந்­து­ரைத்­தி­ருக்­கின்­றது.

நல்­லி­ணக்கப் பொறி­மு­றைகள் ஒவ்­வொன்­றிலும் ஒவ்­வொரு வெளி­நாட்டு நீதி­ப­தி­யா­வது உள்­ள­டக்­கப்­பட வேண்டும் என்­பது இந்தச் செய­ல­ணியின் பிர­தான பரிந்­து­ரை­யாகும். நீதித்­து­றையின் மீதும் அதன் செயற்­பா­டுகள் மீதும் மக்கள் நம்­பிக்கை இழந்­தி­ருப்­பதே இதற்கு முக்­கிய காரணம்.

நல்­லி­ணக்­கத்தின் நிலை­கு­லைவு

ஆயினும் இந்தச் செய­ல­ணியின் அறிக்கை வெளி­யாகி, அது சரி­யான முழு வடி­வத்தில் பொது­மக்­களைச் சென்­ற­டை­வ­தற்கு முன்பே, அமைச்­ச­ரவைப் பேச்­சா­ளரும், அமைச்­ச­ரு­மா­கிய ராஜித சேனா­ரத்ன விசா­ரணை பொறி­மு­றை­களில் வெளி­நாட்டு நீதி­ப­தி­க­ளுக்கு இடமே கிடை­யாது. இதுவே, அர­சாங்­கத்தின் நிலைப்­பாடு. யாரும் எந்த வகை­யான அபிப்­பி­ரா­யங்­க­ளையும் வெளி­யி­டலாம். ஆனால் அர­சாங்கம் என்ற வகையில் அமைச்­ச­ர­வையே இறுதி முடிவை எடுக்­ககும் என அவர் கூறி­யி­ருக்­கின்றார்.  மக்­க­ளு­டைய கருத்­துக்­களை அறிவதற்காக அரசாங்கம் குழுக்களை நியமிக்கலாம்.  ஆனால் அந்த சிவில் சமூக குழுக்கள் முன்வைக்கின்ற பரிந்துரைகள் எல்லாவற்றையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லை என அவர் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய பொறிமுறைகள் அவசியம் என்ற நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான கலந்தாலோசனைச் செயலணியின் பரிந்துரைக்குப் பதிலளித்தி ருக்கின்றார்.

வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை என்ற அரசாங்கத்தின் முடிவை இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயது ராட் அல் – ஹுசைன் அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதை அவ ரும் ஏற்றுக்கொண்டுள்ளார் என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அமைச்சருடைய இந்தக் கருத்து வெளி யாகிய சூட்டோடு சூடாக ஐ.நா. மனித உரி மைகள் ஆணையாளர் செயது ராட் அல் – ஹுசைன் கலப்பு விசாரணை பொறிமுறை என்ற தமது நிலைப்பாட்டில் எந்தவிதமான மாற் றமும் கிடையாது என்றும், அதனையே வலி யுறுத்துவதாகவும், ஐ.நா. மனித உரி மைகள் ஆணையாளர் செயது ராட் அல் – ஹுசைன் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித் துள்ள கருத்துக்களின் மூலம், மக்கள் எதையும் கூறலாம். எதையும் எதிர்பார்க்கலாம். அதே போன்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணை யாளரும் மனித உரிமைகள் பேரவையும் எதை யும் கூறலாம் எதையும் எதிர்பார்க்கலாம். அவற்றையெல்லாம் அரசாங்கம் கவனத்திற் கொள்ளமாட்டாது. அரசு தான் விரும் பியதையே செய்யும் விரும்பியவாறே நடக்கும் என்பதைத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்.

நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான கலந்தா லோசனைச் செயலணியின் அறிக் கையை நேரடியாகப் பெற்றுக் கொள்வதை அரச தலைவர்கள் இருவரும் தவிர்த்திருந்தமை, வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை என்று அவசர அவசரமாக அரச தரப்பில் அமை ச்சர் ராஜித சேனாரத்ன திட்டவட்டமாக அறி வித்திருப்பது போன்ற விடயங்கள், நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிலைமாறு காலத்தில் நீதிவழங் குவதற்காக எடுத்துள்ள நடவடிக்கைகள் வெறும் கண்துடைப்பே அன்றி வேறொன்று மில்லை என்ற முடிவுக்கே வரச்செய்திருக் கின்றது.  இந்த நிலையில் நல்லிணக்க முயற் சிகள் நிலைகுலைந்து மக்களின் நம்பிக்கைகள் சித றடிக்கப்பட்டிருப்பதையே காணமுடிகின் றது.