மஸ்கெலியா வைத்தியசாலையில் தாதியருக்கு வெற்றிடங்கள்..!!

மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் பௌதிக வளங்கள் உள்ள போதும் ஆளணி வெற்றிடங்கள் காரணமாக இந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்ற நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்த வைத்தியசாலையில் மருத்துவ அதிகாரி ஒருவரும் பல் வைத்திய அதிகாரி ஒருவரும் தாதியர் இருவரும் நோயாளர்களுக்குச் சிகிச்சையளித்து வருகின்றனர்.

எனினும் இந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்ற நோயாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இரண்டு தாதியர்களால் சிகிச்சையளிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

Advertisement

இந்த இருவரில் ஒருவர் விடுமுறை எடுக்கும் பட்சத்தில் நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர் என்று வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலை வாளாகத்திலுள்ள உத்தியோகஸ்தர் விடுதிகளில் கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையின் உத்தியோகஸ்தர்கள் தங்கியுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இதேவேளை மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் தற்போது தாதியர்களுக்கு ஏற்பட்டுள்ள வெற்றிடங்கள் குறித்து மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரனின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டமையைத் தொடர்ந்து அவர் மத்திய மாகாண சுகாதார பணிப்பாளரைத் தொடர்பு கொண்டு இந்த விடயம் தொடர்பாக அறிவித்துள்ளார்.

இதன்போது தற்காலிகமாக இரண்டு தாதியர்களை கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையிலிருந்து மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும் தாதியர் நியமனத்தின் போது மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையின் தாதியர் பற்றாக்குறை நீக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் தன்னிடம் தெரிவித்தாக சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்