Home பல்சுவை இன்றைய காதல் ஜோடிகள் கவனத்தில் கொள்ள வேண்டியவை

இன்றைய காதல் ஜோடிகள் கவனத்தில் கொள்ள வேண்டியவை

உலகம் முழுவதும் 14-ந் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. ‘காதல்’ என்ற மூன்றெழுத்து மந்திரச் சொல், இதயத்தை இன்பத்தில் துடிக்க வைக்கக்கூடியது. அந்த காதல் முழு இன்பத்தை தரவேண்டும் என்றால், காதல் ஜோடிகள் காதலிக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன.

‘நீதான் என் உயிர் மூச்சு. நீ இல்லாத வாழ்க்கையை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியாது?’ என்ற அளவுக்கு அதிகமாக ஜோடிகள் உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை அள்ளி வீசிவிடக்கூடாது. பொறுப்பற்று, இனக்கவர்ச்சியால் காதலுக்கு உட்படுகிறவர்கள்தான் இப்படிப்பட்ட வார்த்தைகளை பிரயோகிப்பார்கள். இருவரும் நன்கு புரிந்துகொண்டு, பழகிய பின்பு வருவதே உண்மையான காதல். உண்மையாக காதலிப்பவர்கள் உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை கொட்டமாட்டார்கள்.

ஒருவரை நீங்கள் காதலிக்கத் தொடங்கினால், அவரை காதலிப்பதற்கு என்ன காரணம் என்பதை உங்களுக்குள்ளே ஆராயவேண்டும். அவரிடம் உங்களை ஈர்த்த விஷயம் என்ன என்பது தெள்ளத் தெளிவாக உணரப்படவேண்டும். அழகை பார்த்தோ, நடை- உடை -பாவனையை பார்த்தோ, இனிமையான பேச்சை ரசித்தோ, அவரிடம் தோன்றும் பகட்டை விரும்பியோ காதலித்துவிடக்கூடாது. அவை காதலிக்கும்போது இனிமையை தரலாம். திருமண பந்தத்தில் இணையும்போது வாழ்க்கையை சுவாரசியமற்றதாக ஆக்கிவிடும். ஒருமித்த எண்ணமும், புரிதலும், விட்டுக்கொடுத்து போகும் தன்மையும் காதலிக்கும்போது மட்டுமின்றி என்றென்றும் பின்தொடர்ந்தால் மட்டுமே வாழ்க்கை மகிழ்ச்சியாக நகரும்.

உங்களை ஒருவர் பின்தொடர்ந்து வந்தார் என்பதற்காக காதலில் விழுந்துவிடக்கூடாது. ஆரம்பத்திலேயே காதலிப்பவரை பற்றிய முழு விவரத்தையும் அறிந்து கொள்ள வேண்டும். குடும்பத்தை பற்றியோ, வசிக்கும் இடத்தை பற்றியோ, வேலை பார்க்கும் இடத்தை பற்றியோ சொல்ல தயங்குபவர்களிடமும், கேட்கும் கேள்விக்கு சம்பந்தமில்லாமல் பதில் சொல்பவர்களிடமும் விழிப்புடன் இருக்க வேண்டும். அவருடைய நடத்தையிலோ, பேச்சிலோ குழப்பங்கள் தெரிந்தால் நேரடி யாகவே கேட்டுவிட வேண்டும். அவர் சொல்லும் பதில் எந்த அளவுக்கு திருப்தி தருகிறது என்பதை அளவிடவேண்டும். தன்னை பற்றிய தகவல்களை மறைப்பவர்கள், தவறான தகவல்களை கூறுபவர்கள் ஏமாற்று பேர் வழியாக இருப்பார்கள்.