மகா சிவராத்திரி தினத்தில் மதுபான, இறைச்சிக் கடைகளை மூடுமாறு இந்து மாமன்றம் வேண்டுகோள்..!!

இந்துக்களின் புனித தினமாக விளங்கும் மகா சிவராத்திரி விரத தினத்தில் சகல மதுபானக் கடைகளையும் இறைச்சிக் கடைகளையும் அசைவ உணவகங்களையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அகில இலங்கை இந்து மாமன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மகா சிவராத்திரி விரதத்தின் புனிதத்தன்மையைப் பேண ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி, பிரதமர், அரசாங்கம், சகல தலைவர்கள் மற்றும் மக்களிடம் இந்து மாமன்றம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.

நாடளாவிய ரீதியில் வாழும் இந்துக்கள் மகா சிவராத்திரி விரத தினத்தன்று ஆலயங்களுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு ஏதுவாக போக்குவரத்து ஒழுங்குகளை செய்யுமாறும் இந்து மாமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

சுமார் 4 தசாப்தங்களாக வேதனையில் வாடும் மக்களுக்காகவும் சொந்த இடங்களை விட்டு வெளியேற்றப்பட்ட மக்கள் மீண்டும் தம் வதிவிடம் திரும்புவதற்கும் சிறைகளில் அரசியற் கைதிகளாக வாடுவோரின் விடுதலைக்காகவும் அகில இலங்கை இந்து மாமன்றம் பிரார்த்திப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.