அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர்கள் பாராளுமன்றம் வருகை

இலங்கைக்கு வருகை தந்துள்ள அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர்கள் குழு நேற்று பாராளுமன்றத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்தது. இக்குழுவினர் சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தது.

இக்குழுவினர் சபாநாயகர் கலரியில் இருந்து சபை நடவடிக்கைகளைப் பார்வையிட்டனர். சபைக்குத் தலைமைதாங்கிய உறுப்பினர் அமெரிக்கக் குழுவினரின் வருகையை அறிவித்ததும் சபையிலிருந்த உறுப்பினர்கள் மேசையில் தட்டி தமது வரவேற்பைத் தெரிவித்தனர்.

இந்தக் குழுவினர் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை பாராளுமன்றத் தொகுதியில் சந்தித்திருந்தனர். சபை ஜனநாயக பங்களிப்பு திட்டத்தின் கீழ் இக்குழுவினர் இலங்கை வந்துள்ளனர்.

2016ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 14ஆம் திகதி வொஷிங்டனில் பிரதிநிதிகள் சபைக்கும், இலங்கை பாராளுமன்ற பிரதிநிதிகளுக்கும் இடையில் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதற்கு அமைய சபை ஜனநாயக பங்களிப்புத் திட்டம் நடைமுறைக்கு வந்தது. இதன் தொடர்ச்சியான சந்திப்புக்களை மேற்கொள்வதற்காகவே பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர்கள் குழு இலங்கை வந்துள்ளது.